(Reading time: 15 - 29 minutes)

தீவிரவாதியிடம், விடை பெறுகிறேன் என்று கூட சொல்லாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் ஹகீம். பெரிய சுமையொன்று தன்னை விட்டு சென்றதை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளினான். இனி அந்த தீவிரவாதிகள் இருக்கும் இடங்களுக்கு செல்லக்கூடாது என்று தீர்மானித்தான்.

பஹீரா! இப்பொழுது அவள் நினைவு முழுவதும் பஹீரா மட்டும் தான். அவளிடம் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பேசிக்கொண்டே சென்றான்.

இன்னும் தான் உயிர் வாழ்வதை ஹகீமால் நம்ப முடியவில்லை. அது மட்டும் வெடித்திருந்தால்! அந்த கற்பனைக்கும் செல்ல அவன் விரும்பவில்லை. இரண்டு மணி நேரம் நடந்தே சென்றான். அவன் கால்களில் வலியில்லை. அந்த அளவிற்கு அவன் மனம் குளிர்ச்சியடைந்திருந்தது.  

அவன் தங்கியிருக்கும் அமேலியாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அங்கு பஹீராவை காணவில்லை. அது அவனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. பஹீராவின் துணிமணிகள், கெட்டுப்போன சாப்பாட்டின் துர்நாற்றம், ரீங்காரமிடும் பூச்சிகள் என எல்லாமும் அவனுக்கு கவலையை ஏற்படுத்தின.

பஹீரா எங்கு சென்றிருப்பாள்? சிறிது நேரம் அவன் காத்திருந்தான். அப்பொழுது தூரத்தில் இரண்டு குழந்தைகள் ஓடிவருவது போல் இருளில் மங்கலாகத் தெரிந்தது. அது பஹீராவாக இருக்குமா என்று சந்தேகத்தோடு பார்த்தான். அவன் நம்பிக்கை பொய்த்துப்போனது. இரண்டு பிள்ளைகளும் வேறொரு வீட்டிற்குள் நுழைந்துகொண்டனர்.

இடது பக்கமும் வலது பக்கமும் தெருவினை ஒருமுறை நோட்டமிட்டவன், அக்கம் பக்கத்தில் கேட்கலாம் என்று முடிவெடுத்து அருகில் இருந்த வீட்டினை நோக்கி சென்றான். கதவு தட்டப்பட்டது. சில நொடிகள் கழித்து நடுத்தர வயது பெண் கதவைத் திறந்தாள்.

"என்ன ஹகீம் இந்த நேரத்துல?"

"பஹீரா இன்னும் வீட்டுக்கு வரலை"

"அப்படியா?"

"எப்படியும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவா"

அந்த பெண்மணி வீட்டிலிருந்த கடிகாரத்தை நோக்கினாள். மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

"எனக்கு இரண்டு நாளா உடம்பு சரியில்லை ஹகீம். வீட்டுக்குள்ளேயே தான் இருக்கேன். நீ பக்கத்துக்கு வீட்டுல விசாரிச்சு பாரு"

ஹகீம் அங்கேயும் விசாரித்தான். பலனில்லை. என்ன செய்வது? பஹீரா இன்னும் வரவில்லை. இதற்கு முன் இது போல் நடந்ததும் இல்லை. ஹகீமின் மனதில் பயம் ஆட்கொண்டது. என்ன செய்வது! என்ன செய்வது!

பஹீராவின் டீச்சர் முகம் அவன் நினைவுக்கு வரவே, இரண்டு தெரு தள்ளியிருக்கும் அவர் வீட்டை நோக்கி சென்றான்.

"டீச்சர் இருக்காங்களா?"

"நீ யாரு?" என்றார் டீச்சரின் கணவர். அவர் முகத்தில் வெறுப்பும் உறக்கமும் கலந்திருந்தது.

"நான் பஹீராவோட அண்ணன் ஹகீம்"

"பஹீராவா?"

"யாரு?" என்றபடி டீச்சர் வந்தார். ஹகீமை பார்த்ததும் அவர் முகம் கோபத்தில் சிவந்தது.  

"எதுக்கு வந்த?"

"பஹீராவை காணோம்"

"அவளை பத்தி உனக்கென்ன கவலை?"

"பஹீரா எங்க இருக்கா?"

"இரண்டு நாளா அவளை பாக்காதவன் இப்போ மட்டும் எதுக்கு பாக்கணும்?"

"மன்னிச்சிடுங்க டீச்சர். அவ எங்க இருக்கா?"

"அவ இரண்டு நாளா சாப்பிடல. பள்ளியில மயக்கம் போட்டுட்டா. இப்போ மருத்துவமனையில இருக்கா"

அதை நிச்சயம் ஹகீம் எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனையை அடைய ஹகீமிற்கு அரைமணி நேரம் பிடித்தது. சிறிய மருத்துவமனை தான். சேவைக்காக தொடங்கப்பட்டது. வளாகத்திற்குள் நுழைந்தான்.

"யாரது?". பெண்மணியின் குரல். நர்ஸாக இருக்க வேண்டும்.

"என்னுடைய தங்கச்சி"

"பேரு"

"பஹீரா"

"அந்த சின்ன பொண்ணா? நீ யாரு?"

"அவ அண்ணா" 

"உன் தங்கச்சிக்கு சாப்பாடு கூட போட மாட்டியா?"

ஹகீம் அமைதியாக நின்றான்.

"அந்த கடைசி படுக்கையில இருக்கா பாரு. மத்த நோயாளிகளுக்கு தொந்தரவு கொடுக்காம பாரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.