(Reading time: 36 - 71 minutes)

"அப்புறம் காவ்யா, இந்த டிரெஸ்ஸை காயத்ரி  கட்டாயம் எடுத்துக்க  மாட்டா. அவளுக்கு வாங்கினதை நீ வச்சிக்கோன்னு உன்கிட்ட சொல்றதும் நாகரிகமா இருக்காது. அதனால உனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க யாருக்காவது இதை கொடுத்துரு", என்றான் ஷியாம்.

"சரி", என்று சொல்லி விட்டு அதை காவ்யா கையில் எடுக்க போகும் போது முந்தி கொண்டு அதை எடுத்து கொண்ட காயத்ரி அதை நெஞ்சோடு அணைத்து கொண்டு "என் அண்ணன் வாங்கி தந்தது எனக்கு தான்", என்றாள்.

அந்த வார்த்தையில் காவ்யாவுக்கும், ஷியாமுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஷியாம் கண்களில் சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது. அப்போது தான் மதியும், சூர்யாவும் அறையை விட்டு வெளியே வந்தவர்களும் திகைத்து போனார்கள்.

ஷியாம் கண்களில் இருந்து வழிந்த நீரை கண்ட காயத்ரி "என்னை மன்னிச்சிரு அண்ணா. சித்தி சொன்னது அத்தனையும் நம்பி உன்னை தப்பா நினைச்சிட்டேன். நான் காவ்யா சொன்னது மாதிரி மூளை இல்லாம தான் நடந்துக்கிட்டேன். சூர்யா அண்ணா மாதிரி நல்லவங்களோட பிரண்டா இருக்குற நீ எப்படி கெட்டவனா  இருக்க முடியும் அப்படின்னு நான் யோசிக்க ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆகிட்டு. அது மட்டும் இல்லாம நீ நல்லவன்னு எனக்கு அன்னைக்கே புரிஞ்சது. நான் உன்னை  தப்பா நினைச்சு வெறுத்து ஒதுக்கி உனக்கு  மன கஷ்டத்தை கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சிருவ தான?", என்று கண்ணீருடன் கேட்டாள்.

அவளை பார்த்து தன்னுடைய இரண்டு கைகளையும் விரித்து வா என்னும் விதமாய் கண்களில் நீருடன் அழைத்தான் ஷியாம்.

"அண்ணா", என்று அழைத்து கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் காயத்ரி. அவனும் அவள் தலையில் தன் நாடியை பதித்து ஆதரவாக அவளை  அணைத்து கொண்டான். அவன் கண்களில் இருந்து வழிந்த நீர் அவள் தலையை நனைத்தது.

இந்த காட்சியை காவ்யாவும் சந்தோசத்துடன் பார்த்து கொண்டு நின்றாள். அவளை பார்த்து நிறைவான புன்னகையை சிந்தினான் ஷியாம்.

சிரிக்கும் அவனை பார்த்தவள் அந்த நேரத்திலும் "எப்பா செம சிரிப்பு. சும்மா ஹீரோ மாதிரி இருக்கான்", என்று எண்ணி கொண்டு பார்வையை திருப்பி கொண்டாள்.

பின் தன்னிடம் இருந்து காயத்ரியை பிரித்த ஷியாம் அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டு "அழாத டா குட்டி", என்றான்.

"ஹ்ம்ம் சரி", என்று சிரித்த காயத்ரி காவ்யா கையில் இருந்த ஷியாம் அவளுக்காக  கொடுத்த கவரையும் பிடுங்கி கொண்டாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியானார்கள்.

"அது காவ்யாவுக்கு நான் வாங்கி கொடுத்தது மா.  இன்னும் நிறைய டிரெஸ் உனக்காக எடுத்து வச்சிருக்கேன். மேல என்னோட ரூம்ல இருக்கு. அதை அவ கிட்ட கொடுத்துரு", என்றான் ஷியாம்.

"நிச்சயம் முன்னாடி மாப்பிள்ளை பொண்ணுக்கு சேலை வாங்கி கொடுக்க கூடாது", என்று அனைவருக்கும் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள் காயத்ரி.

"என்ன காயத்ரி சொல்ற?", என்று கேட்டான் சூர்யா.

"ஆமா சூர்யா அண்ணா. அண்ணனுக்கும் காவ்யாவுக்கும் இன்னும் நிச்சயம் பண்ணலைல்ல. அதுக்குள்ளே சேலை வாங்கி கொடுக்க கூடாதே"

"ஏய், இது உனக்கு எப்படி தெரியும்?", என்று கேட்டாள் கலைமதி.

"எங்க அண்ணன் பார்வையை எல்லாருமே கண்டு பிடிச்சிருவாங்க அண்ணி. நான் கண்டு பிடிக்காம இருப்பேனா?", என்று சிரித்தாள் காயத்ரி.

ஷியாமும் அவளை பார்த்து சிரித்தான். "அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ சும்மா உளறாத. நான் உங்க அண்ணனை எல்லாம் கட்டிக்க மாட்டேன்", என்றாள் காவ்யா.

"அதையும் பாக்கலாம் காவ்யா. அப்பறம் அண்ணன் தான் உனக்கு டிரெஸ் வாங்கி கொடுக்க கூடாது. ஆனா நான் என் அண்ணிக்கு எடுத்து கொடுக்கலாம். இந்தா", என்று பிடுங்கிய கவரையே திருப்பி கொடுத்தாள் காயத்ரி.

"உங்க அண்ணன் ரொம்ப ஏழைன்னு நினைச்சு ஒரு இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தேன். அதுக்கு பதிலா இந்த சேலையை வாங்கிக்கிறேன்", என்றாள் காவ்யா.

"என்னை மட்டும் அண்ணின்னு சொல்ற? காவ்யாவும் உனக்கு அண்ணி தான் காயத்ரி", என்று சிரிப்புடன் சொன்னாள் கலைமதி.

"தெரியும் அண்ணி. ஆனா கல்யாணம் ஆகுற  வரைக்கும் காவ்யான்னு தான் சொல்லுவேன். கல்யாணம் அப்புறம் தான் அண்ணி", என்று சொன்னாள் காயத்ரி.

"எம்மா தாயே, நீ என்னை அண்ணி பன்னின்னு எல்லாம் சொல்லவே வேண்டாம். உங்க அண்ணனும்  எனக்கு வேண்டாம். இப்படி சேட்டை பண்ற நாத்தனாரும் வேண்டாம்", என்று சொல்லி இருவரையும் முறைத்து விட்டு சென்று விட்டாள் காவ்யா.

"என்ன அண்ணா இப்படி சொல்லிட்டு போறா?", என்று கேட்டாள் கலை.

"அதெல்லாம் சரியாகிருவா மா. அவளை பத்தி தான் உனக்கு தெரியுமே. சரி நாலு மணிக்கு எல்லாரும் வெளிய கிளம்பலாம். காயு இன்னைக்காவது எங்க கூட வருவ தான?", என்று கேட்டான் ஷியாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.