"ஆமா, பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் கொடுத்து மயக்குனா மயங்காம என்ன செய்ய?", என்று சிரித்தாள் காவ்யா.
"தேங்க்ஸ் டி. பாரின்ல இருந்து நான் வரும் போது இருந்த மனநிலை என்ன? இப்போ இருக்குற மன நிலை என்ன? ரொம்ப சந்தோசமா இருக்கு. கிடைக்கவே கிடைக்காதுன்னு நினைச்ச அப்பா, தங்கச்சி பாசம் கிடைச்சிருச்சு. கலைன்னு புது தங்கச்சி கிடைச்சிருக்கா. உன்னை பத்தி இங்க வந்த அப்புறம் தான் விசாரிக்கனும்னே நினைச்சிட்டு வந்தேன். ஆனா உன் காதலே கிடைச்சிருச்சு. தேங்க்ஸ் கவி. இப்ப கிளம்பிருவல்ல? இனி எப்ப பாக்க போறேனோ? அது வரைக்கும் தாங்குற மாதிரி ஒரு முத்தம்", என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான்.
தன்னை ஒப்பு கொடுத்தவளும் அமைதியாக நின்றாள். அடுத்து கொஞ்ச நேரத்தில் அனைவரும் கிளம்பி விட்டார்கள்.
ஷியாமும், காயத்ரியும் திருப்பியும் வரணும் என்ற கட்டளையோடு விடை கொடுத்தார்கள். கார் திருநெல்வேலியை நோக்கி சென்றது.
ஊருக்கு வந்தவர்களை பாசமாக வரவேற்றார்கள் திலாகவும் சுந்தரும். காவ்யாவை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் சூர்யா.
மங்களமும் சிவசுப்ரமணியனும் வயல் வேலைக்காக ஊருக்கு சென்றிருப்பதால் தன்னுடைய கார் சாவியுடன் கோர்த்திருந்த வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றான் சூர்யா.
அவனுடன் சிரித்து கொண்டே உள்ளே சென்ற கலைமதி அடுத்த நிமிடம் அவனுடைய போனை பிடுங்கி மங்களத்தை அழைத்து வந்து விட்டதாக கூறினாள். நாங்களும் இரண்டு நாள்களில் வருகிறோம் என்று சொல்லி போனை வைத்தாள் மங்களம்.
அடுத்த நாளில் இருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தான் சூர்யா.
மதிக்கு காலேஜ் திறக்க இன்னும் ஐந்து நாள்கள் இருந்ததால் அவள் மட்டும் வீட்டில் இருந்தாள்.
ஆனால் இவர்கள் வந்து சேர்ந்த இரண்டே நாளில் பின்னாடியே இங்கே வந்தான் ஷியாம்.
அவனை பார்த்ததும் "உள்ள வாங்க அண்ணா", என்று வரவேற்று அமர வைத்த கலைமதி "அத்தான் ஷியாம் அண்ணா வந்துருக்காங்க", என்று சொல்லி சூர்யாவை அழைத்தாள்.
அங்கு வந்த சூர்யா ஷியாமை பார்த்து வியப்பான பார்வை பாத்து கொண்டே "என்ன டா வரேன்னு சொல்லவே இல்லை", என்று கேட்டான்.
"உங்களை எல்லாம் பாக்கணும் போல இருந்துச்சா. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்", என்று சிரித்தான் ஷியாம்.
"எங்களை பாக்க வந்தூட்டியா? நம்பிட்டோம் டா நம்பிட்டோம். சரி சரி எங்களை தான் பாத்துட்டியே? கிளம்பு", என்று சிரித்தான் சூர்யா.
"அத்தான், எதுக்கு இப்படி வந்த உடனே அண்ணனை போக சொல்றீங்க?", என்று கேட்டாள் கலைமதி .
"கலை, உனக்கு ஒண்ணும் தெரியாது. அவன் நம்மளை பாக்க வந்துருக்கான்னு நினைக்கிறியா? அவன் வந்துருக்குற தோரணையே சரி இல்லை. இங்கயே தங்கி குடுத்தனம் நடத்த போறவன் மாதிரி எவ்வளவு பெரிய பைகளோட வந்துருக்கான் பாரு? இது எதுக்குன்னு புரியலையா உனக்கு?', என்று கேட்டான் சூர்யா.
"ஹா ஹா, நண்பன் டா நீ, சரியா கண்டு புடிச்சிட்டியே. இங்க தங்க தான் வந்திருக்கேன்", என்று அசடு வழிந்தான் ஷியாம்.
"அண்ணா??", என்று வியப்பாக அழைத்த மதி "இப்ப தான் புரியுது. நீங்க காவ்யா தேடி வந்தீங்களா? எத்தனை நாள் வேணும்னாலும் இங்க தங்குங்க", என்று சிரித்தாள்.
"இன்னும் இருபத்தஞ்சு நாள் லீவ் இருக்கு மா. ஒரு பத்து நாள் இங்க இருந்துட்டு ஊருக்கு போவேன். அப்புறம் பாரின் கிளம்பிருவேன்", என்றான் ஷியாம்.
"இருபத்தஞ்சு நாள் லீவ் இருக்குல்ல? அப்புறம் எதுக்கு பத்து நாள்ல போகணும்? கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம். நாளைக்கே அத்தையும், மாமாவும் ஊரில இருந்து வந்துருவாங்க. அவங்களே உங்களை போக விட மாட்டாங்க. அப்படி தான அத்தான்?"
"ஆமா கலை, மாடி ரூமை நீ எடுத்துக்கோ டா. நான் உன் பேகை எல்லாம் அங்க வைக்கிறேன். அப்புறம் கலை அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடு", என்று சொல்லி கொண்டே ஷியாமின் இரண்டு பேகையும் எடுத்து கொண்டான் சூர்யா.
"சரி அத்தான், டீ போடுறேன்", என்று சொல்லி விட்டு மதி சென்ற பின்னர் சூர்யாவிடம் இருந்து ஒரு பையை வாங்கி கொண்டு சூர்யா பின்னே சென்றான் ஷியாம்.
"சரி டா. நீ குளிச்சிட்டு கீழ வா", என்று சூர்யா சொன்னதும் அவனும் சரி என்று சொல்லி விட்டு குளித்து உடை மாற்ற சென்றான்.
பின் மதி கொடுத்த டீயை இருவரும் குடித்து விட்டு பேசி கொண்டிருந்தார்கள். மதியும் சமையலை முடித்து விட்டு அவர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள்.
"எனக்கு காவ்யாவை பாக்கணும் மா. எப்படி பாக்க?", என்று கேட்டான் ஷியாம்.
"ஒரு நாள் பொறுங்க அண்ணா. அவ நாங்க இங்க வந்த மறுநாளே ஊருக்கு கிளம்பிட்டா. நாளான்னைக்கு காலேஜ் ஆரம்பிக்குது. அப்ப பாக்கலாம்", என்று சிரித்தாள் கலைமதி.