இன்னும் அவர்களுக்கு முடியவில்லை என்பதால் இவர்களே காத்திருந்தார்கள். அப்போது காவ்யாவும் மதியும் வருவது கண்ணில் பட்டது.
காரை கண்டதும் அவர்களே இங்கே வந்து விட்டார்கள். இறங்கி நின்ற ஷியாம், "மதி, சூர்யா பக்கத்தில் உக்காந்தா தான் நம்ம ஆளு கூட நம்ம உக்கார முடியும்", என்று எண்ணி கொண்டான்.
ஆனால் அவனுக்கு பல்ப் கொடுப்பது போல மதியும், காவ்யாவும் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அப்போது தான் ஷியாம் முகத்தை பார்த்த அனைவருக்கும் அவன் சிந்தனை விளங்கியது. "டேய், இப்ப காவ்யா வீட்டுக்கு போறோம் டா. அதனால ஜோடியா உக்காரனும் அப்படிங்குற ஆசையை மூட்டை கட்டிட்டு வண்டில ஏறு", என்று சிரித்தான் சூர்யா.
அசடு வழிந்தான் ஷியாம். அவனை பார்த்து மூவரும் சிரித்தார்கள். பின் அவன் அமர்ந்ததும் காரை எடுத்தான் சூர்யா.
காவ்யா வீட்டு முன்பு கார் நின்றதும், வழக்கம் போல "எல்லாரும் உள்ள வாங்க", என்று அழைத்தாள் காவ்யா.
"அதெல்லாம் வேண்டாம் மா. நாளைக்கு பாப்போம்", என்று மறுத்தான் சூர்யா.
"உன் தங்கச்சி, இப்படி கெஞ்சி கெஞ்சி கூப்பிடுறா. நீ வரலைன்னு சொல்ற? இது தர்மமா? அடுக்குமா? உள்ளே போவோம் டா", என்றான் ஷியாம்.
"நான் ஒன்னும் கெஞ்சியே கூப்பிடலையே", என்று சிரித்தாள் காவ்யா.
அவள் தலையில் கொட்டிய ஷியாம் "எனக்கு, என் மாமனார் மாமியாரை பாக்கணும்", என்றான்.
"டேய், இப்ப நீ வந்தா ஆண்ட்டி என்ன டா நினைப்பாங்க?", என்றான் சூர்யா.
"ஆமா, அண்ணா சொல்றது சரி தான். நீங்களும் வந்தா என்னனு சொல்றது?", என்றாள் காவ்யா.
"ஏய், உன் மாமாவை உள்ள கூப்பிட மாட்டியா? நீ என்ன டி என்னை கூப்பிடுறது? இது என் வீடாக்கும். அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க. சூர்யா பிரண்டுன்னு சொன்னா போதும்", என்று சொல்லி முதல் ஆளாக இறங்கி விட்டான் ஷியாம்.
மற்ற மூவரும் சிறு பதட்டத்துடன் தான் உள்ளே சென்றார்கள்.
கதவை திறந்த திலகா "வாங்க தம்பி, உள்ள வா மதி, இன்னைக்கு அவங்க கூடவே வந்துட்டியா காவ்யா?", என்று வரவேற்றவள் புதிதாய் இருந்த ஷியாமை பார்த்து விட்டு பொதுவாக "எல்லாரும் உள்ள வாங்க", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
அனைவரும் சென்று அமர்ந்தார்கள். "இது என்னோட பிரண்ட் ஆண்ட்டி. இவனோட வீட்டுக்கு தான் நாங்க எல்லாரும் போனோம்", என்றான் சூர்யா.
"ஓ அப்படியா? ரொம்ப நன்றிங்க தம்பி. இது வரை காவ்யாவை எங்கேயும் தனியா அனுப்புனதே இல்லை. மதி இருக்குறதுனால தான் அனுப்புனேன். ஆனாலும் கொஞ்சம் பயமா இருந்தது. காவ்யா சொன்னா. உங்க வீட்ல எல்லாரும் நல்ல படியா பாத்துக்கிட்டதா. இருங்க நான் எல்லாருக்கும் காபி கொண்டு வரேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் திலகா.
அதன் பின்னர் தான் அனைவரும் அப்பாடி என்று மூச்சு விட்டார்கள்.
தன் அம்மாவின் பின்னே சென்ற காவ்யா, அவள் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டு பின் மதி அருகில் வந்து அவள் காதிலும் ஏதோ சொல்லி விட்டு "அண்ணா இருங்க, இப்ப வரேன்", என்று சொல்லி விட்டு ஷியாமை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அனைவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்தாள் திலகா. அதை வாங்கி இருவருக்கும் கொடுத்த மதி, அவளும் ஒன்றை எடுத்து கொண்டு சூர்யா அருகில் அமர்ந்து கொண்டாள்.
அடுத்து அனைவரும் என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.
மதியும், திலாகவும் எதுவோ குசு குசு என்று பேச ஆரம்பித்தார்கள். அப்போது சூர்யா காதருகே குனிந்த ஷியாம் "என் அத்தை சரி போல்டா இருக்காங்க டா", என்றான்.
"டேய் அமைதியா இரு டா. அவங்க காதுல விழுந்துற போகுது. நல்ல பையனாவே இங்க இருந்து கிளம்பிரு. இல்லைன்னா பொண்ணு தர மாட்டேன்னு சொல்ல போறாங்க", என்று சொன்னான் சூர்யா.
"என்னது கிளம்பணுமா? எனக்கு அத்தைகிட்ட முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கு. நான் பேசுறதை கேட்டு கண்டிப்பா உனக்கு கோபம் வரும். அதனால வீட்டுக்கு போன அப்புறம் நீ எப்படி வேணும்னாலும் என்னை துவைச்சு தொங்க போடு. இப்ப மட்டும் எதுவும் வாய் விட்டுறாத டா", என்று ஷியாம் சொன்னதும் திகைத்த சூர்யா "அடேய் அவங்க கிட்ட என்ன டா சொல்ல போற?", என்று கேட்டான்.
"ஆண்ட்டி, அடுத்த மாசம் முப்பத்தியொன்னாம் தேதி பாரின் கிளம்புறேன். அது வரைக்கும் இங்க திருநெல்வேலில ஒரு சைட் விஷயமா வேலை இருக்கு. அது வரைக்கும் தங்குற மாதிரி வீடு கிடைக்குமா? சூர்யா கிட்ட கேட்டேன். அவன் அவங்க வீட்ல தங்கலைன்னு கோப படுறான். இருந்தாலும் சைட் பாக்குறதுனால அன்டைம்ல வந்துட்டு போயிட்டு இருக்க வேண்டி இருக்கும். அதனால தான் தனி வீடா கேக்குறேன். இங்க கிட்ட எதாவது வீடு இருக்கா?", என்று நல்லவன் மாதிரியே கேட்டு விட்டு பாவமாக சூர்யாவை பார்த்தான் ஷியாம்.
சூர்யாவோ கொலை வெறியோட ஷியாமை முறைத்தான். மதியோ குழப்பமாக இருவரையும் பார்த்தாள்.