(Reading time: 11 - 22 minutes)

ஒரு ஹலோ கூட சொல்லாமல், சரவணன் போனில் கத்தவும், வெறுப்புடன் பார்த்தவள், பிறகு நிதானமாக

“நான் யார் கூடவும் அரட்டை அடிக்கலை. ரெஸ்ட் ரூம்லே இருந்தேன்”

“நாந்தான் இந்த நேரம் போன் பண்ணுவேன்னு தெரியும்லே.. கொஞ்சம் முன்னாடியே அந்த வேலை எல்லாம் முடிச்சுருக்க வேண்டியதுதானே”

அவன் பேச்சில் அருவெறுப்பு அடைந்தவள்,

“இதுக்கு எல்லாம் நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியாது” என்று வெடுக்கென்று கூறி விட்டாள்.

இந்த பதிலில் இன்னும் கோபம் கொண்ட சரவணன்,

“உன் மாமா பையன் கூட இன்னைக்கு பூரா ஷாப்பிங்ன்னு சுத்தி இருக்க. அந்த குஜால் இன்னும் போகலையோ மேடம்க்கு”

“என் அத்தான் வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்? என்னை வேவு பார்க்கறீங்களா?

“ஏன் பாத்தா என்ன தப்பு?

“ஒஹ்” என்று மட்டும் கூறியவள், தகுந்த பதில் கொடுக்க முடியாமல் தடுமாறினாள்.

இப்போதும் விடாமல்,

“இதோ பார்.. நமக்கு கல்யாணம் ஆக போகுது.. இனிமேல் உன்னோட கவனம் எல்லாம் என் மீது தான் இருக்கணுமே தவிர, அத்தை பையன், மாமா பையன் இவங்களோட அரட்டை அடிக்கிறது எல்லாம் இருக்கக் கூடாது. புரியுதா?” என்று கேட்டு அவள் பதில் சொல்லுமுன் போனை வைத்து விட்டான்.

மித்ரா ஒரு மாதிரி கவலையுடன் அமர்ந்தாள். இவள் பேசிக் கொண்டு இருக்கும்போதே மித்ரா அறை தட்டப்பட, மாடி ஹாலில் அமர்ந்து காபி குடிக்கலாம் என்று அவர்களை அழைக்க வந்த ஷ்யாம், அவனுக்கு கதவு திறந்து விட வந்த சுமித்ரா, சைந்தவி எல்லோருக்கும் சரவணன் கத்தியது கேட்டது.

சரவணன் தான் போனில் பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் கத்தி பேசி இருந்தானே.

ஷ்யாம் ரெப்ரெஷ் ஆகி வெளியில் வரும்போதே, ஹாலில் அமர்ந்து மித்ராவின் பாட்டி , மித்ராவின் வருங்கால மாமியாரிடம் அன்றைக்கு கடையில் நடந்த சமாசாரம் எல்லாம் சொல்லி இருக்க, அதிலும்

“இன்றைக்கு அவள் மாமா பையன் வந்து இருக்கான்னு தலை கால் புரியாம இருக்கா? என்னதான் பண்றதோ இந்த பொண்ண வச்சுக்கிட்டு” என்று கூற, எதிர்முனையில் என்ன கேட்டார்களோ

“ச்சே..ச்சே.. அது எல்லாம் நல்ல பசங்க தான். என்ன பட்டணத்து வளர்ப்பு. இடம் , பொருள் , ஏவல் தெரியாமல் பொதுவில் வச்சு துள்ளி குதிக்கிறா” என்று பேசினார்.

மீண்டும் அங்கே பேசியது கேட்கவில்லை, அதற்கு பதிலாக

“அங்கே எல்லாம் அப்படி இருக்க மாட்டா.. இங்கே எல்லோருக்கும் செல்லம். அதனால் ஒருத்தரும் அவளை கேட்க மாட்டங்க.. கேக்குற என்னைய வில்லி மாதிரி பார்ப்பாங்க. அங்கேன்னா மாமியாரானா உனக்கு எல்லா உரிமையும் இருக்குது. அதோட அவ சப்போர்ட்டுக்கு யாரும் இல்லைனா தானா சரியயிடுவா” என்று மேலும் பேசி வைத்தார்.

அவரின் பேச்சில் எரிச்சலும், கோபமும் கொண்டு வந்தவன், சரவணன் பேசுவதையும் கேட்டவுடன் இன்னும் கோபம் ஏறியது ஷ்யாமிற்கு.

கோபமாக ஏதோ சொல்ல வந்தவன், மித்ராவின் முகத்தை பார்த்து, அவளை சமாதான படுத்துவது தான் முக்கியம் என்று எண்ணி அவள் அருகில் சென்றான்.

“மித்து.. எழுந்து மாடி ஹால்கு வாடா.. நான் அங்கே வெயிட் பண்றேன்” என்று சொல்லி விட்டு சென்றான்.

அவன் பேசியதை கேட்டவள், தன்னை உணர்ந்து, முகம் கழுவி, பொட்டு இட்டு, ஹாலிற்கு வந்தாள்.

ஹாலில் ஷ்யாம் மட்டும் தனியாக அமர்ந்து இருக்க

“சுமி, சந்து ரெண்டு பேரும் எங்கே அத்தான்?

“டீ எடுத்துட்டு வர போயிருக்கான்மா. இப்போ ரிலாக்ஸ்சா இருக்கியா?

“ஹ்ம்ம்..”

“அவர் போனில் பேசியதை கேட்டேன்.. அத எல்லாம் பெரிசு படுத்தாதே. “

“எப்படி அத்தான்.? யார் கூடவும் பேச கூடாதுன்னா என்ன அர்த்தம்?

“அவர் பேச்சில் இருந்து ஓவர் பொசெசிவ்வா இருப்பார்ன்னு தோணுது. நம்ம எல்லாரையும் பார்த்து பேசிப் பழகினா சரியாயிடும். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு சரியா?

“ஹ்ம்ம்.. சரி அத்தான்” என்று மட்டும் சொன்னாள். அதற்கு பின் சுமி, சைந்தவி வர மேலும் சற்று நேரம் பேசி விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.

ஷ்யாமிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன இந்த சரவணன், மித்ராவிடம் இப்படி நடந்து கொள்கிரேரே என்று. வீட்டிற்கு வந்து அவன் அம்மா மைதிலிஇடம் எல்லாம் பகிர்ந்து கொண்டான். மித்ராவிடம் பேசியதையும் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.