(Reading time: 10 - 20 minutes)

“அப்பா, மாமா, நம்ம கமிஷனர் அங்கிள்க்கு போன் போட்டு, வரதட்சணை கேட்டு தகராறு பண்றாங்கன்னு பிடிச்சி உள்ளே போட்டுடலாம்” என்று பொரிந்து தள்ளினான்.

அவனின் பதட்டம் பார்த்த ராம்,

“ஷ்யாம். நீ சும்மா இரு. பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல”

“ஏன் சரவணன் மட்டும் என்ன பெரியவனா? என் வயசு தானே அவனுக்கும் ஆகுது “

“ஷ்யாம் .. சும்மா இரு.. இருக்க முடியாட்டி உன் அறையில் போய் உட்கார்.” என்று கட்டளையிட, ராம் அந்த குரலில் பேசினால், அதை மீறும் துணிவு கிடையாது ஷ்யாமிற்கு. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், தன் அறைக்கு சென்று விட்டான் ஷ்யாம்.

சரவணனின் அம்மா பேசியதை கேட்ட பின் மித்ராவிற்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டது. அவள் அருகில் அமர்ந்து இருந்த மைதிலி, சபரி இருவரும் அவளை அணைத்தார் போல் அமர்ந்து, அவள் கைகளின் நடுக்கத்தை போக்கினர்.

வெளியில் தெரியாவிட்டாலும், ராம், முரளி இருவருக்கும், மித்ராவின் நிலைமை புரிய, ராம்

“மித்ரா, இப்போ நீ சொல்லுமா, இந்த கல்யாணம் வேணுமா?

மைதிலி, சபரின் இருவரின் ஆறுதலான நடவடிக்கையில், சற்று சமாளித்தவளாக, மெதுவாக,

“இல்லை. வேண்டாம் மாமா” என்று கூறிவிட்டாள்.

இப்போது அதிர்ந்து நிற்பது சரவணன் அம்மாவும், சரவணனும் தான்.

உண்மையில் சரவணன், அவன் அம்மா இருவருக்கும் கல்யாணத்தை நிறுத்தும் எண்ணம் எல்லாம் இல்லை.

சரவணன் அம்மா தனக்கு தெரிந்ததை வைத்து, இன்னும் கொஞ்சம் அவர்களிடமிருந்து வரதட்சனை கறந்து விடலாம் என்று எண்ணியிருந்தார்.

சரவணனுக்கு, அன்று வரை அவன் ஊரில் , அவன்தான் எல்லாவற்றிலும் முதலாக இருந்தவன். அவன் நண்பர்கள் கூட இவனை முகஸ்துதி செய்தால் மட்டுமே அவர்களின் காரியம் கைகூடும். அப்பேற்பட்ட நண்பர்களே இன்று ஷ்யாமை பார்த்து சரவணனை விட அவன் பெட்டெர் என்பது போல் பேசியது, எல்லாம் சேர்ந்து அவனுக்கு ஷ்யாமை மித்ரா பார்க்காதபடி செய்ய வேண்டும் என்று தான், சண்டை இழுத்ததே.

இப்போது முதலுக்கே மோசம் என்னும்போது என்ன செய்ய என்று தெரியாமல் முழித்தார்கள்.

மித்ராவின் பாட்டியோ அத்தனை நேரம் பேசாமல் இருந்தவர், அவளின் இந்த முடிவில்

“ஹேய் மித்ரா. கொஞ்சம் யோசிமா.. இது எல்லாம் சின்ன பிரச்சினை. சீக்கிரம் சரி ஆயிடும். இதுக்காக கல்யாணம் நிறுத்தற அளவு எல்லாம் போக வேண்டாம்.”

“இல்லை பாட்டி. கல்யாணத்திற்கு முன்னாலே எங்கிட்ட இத்தனை குற்றம் கண்டுபிடிக்கிரவங்க, பிறகு நான் எது செஞ்சாலும் குத்தமாதான் பார்ப்பாங்க. என் நிலைமை பற்றி உங்களுக்கே தெரியும் பாட்டி. அப்புறம் இப்போ நார்மாலா இருக்கிற நான் பழையபடி மாறிடுவேனோன்னு தோணுது”

இதை கேட்ட மைதிலி “மித்ரா, என்ன பேச்சு இது? உலகத்துலே இவங்கதான் மனுஷங்களா? நாங்க எல்லாம் இல்லை உனக்கு சப்போர்ட்டுக்கு . இன்னும் ஒரு தடவை இந்த மாதிரி பேசக் கூடாது” என்று அவளை திட்டி, தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.

இப்போதும் முரளியிடம் “முரளி, அவ உன் பொண்ணு. நீ தான் முடிவு சொல்லனும் “ என்று சொல்லி பார்த்தனர்.

அதற்கு பதிலாக முரளி “ராம் மச்சான் சொல்றது தான் என்னோட முடிவு. இதுக்கு மேலேயும் என் பொண்ண உங்க வீட்டுக்கு அனுப்பினா, நான் என் பொண்ணுக்கு அப்பா இல்லை. அதனால் நீங்க உங்க வழியை பார்த்துட்டு போங்க” என்று முடித்து விட்டார்.

சரவணன் வீட்டார் முனகிக் கொண்டே , தங்கள் அறைக்கு சென்று, தாங்கள் சொந்தக்கரர்களையும் எழுப்பி வந்த பஸ்லே அப்படியே திரும்பினார்கள்.

 மித்ராவின் பாட்டி, அப்படியே சோர்ந்து அமர்ந்தவர்,

“கடவுளே, இந்த பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகக் கூடாதுன்னு தானே சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்தேன். அப்படியும் இப்படி ஆயிடுச்சே? இனி இவள யாரை கட்டுவாள்? “ என்று புலம்ப ஆரம்பித்தார்.

இப்போது ராமும், மைதிலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மைதிலியின் எண்ணங்களை படித்தவனாக, ராம் தலை அசைத்தான்.

ராமின் சம்மதம் கிடைத்தவுடன்,

“ஏன் பெரியம்மா? ஷ்யாமிற்கு மித்ராவை கல்யாணம் கட்டிக் கொடுக்க மாட்டீங்களா? “ என்று கேட்க,

அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்தனர்.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.