(Reading time: 29 - 58 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 16 - மது

AT THE END OF INFINITY

Heart

கிறிஸ்துமஸ்!!! இனம், மதம் அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும்  இயேசு பிரானின் பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த வேளை ஜன்னல் வழியே பனிபடர்ந்த வெளியை வெறித்துக் கொண்டோருந்தாள் பூர்வி.

சில வருடங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய   நினைவுகள் அவள் விழிகளை நனைத்துக் கொண்டிருந்தன.

கலிபோர்னியாவில் அவளது சித்தப்பா பாஸ்டராக இருந்த தேவாலயத்தின் அருகிலேயே ஒரு வயது முதிர்ந்தோருக்கான காப்பகம் ஒன்று இருந்தது. அவள் அடிக்கடி அங்கு சென்று பணிவிடைகள் செய்து வந்தாள். கிருஸ்துமஸ் அன்று முழுநேரமும் அந்த காப்பகத்திலேயே முதியோருக்கு சேவை புரிவாள்.

பெற்றோரை இழந்த பின் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்த போது அந்த காப்பகத்தில் இருந்த பெரியாவர்கள் தான் ஒரு வகையில் அதிலிருந்து அவளை மீட்டுக் கொண்டு வந்தது எனலாம்.

“உன்னுடையதை எதை இழந்தாய். எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?”  உண்மை தான். ஆனால் இந்தக் கீதாசாரத்தை  உள்வாங்கிக் கொண்டுவிட்டால் அனைவரும் ஞானிகள் ஆகிவிடுவோமே.

ஆனால் நாம் மனிதர்கள். உணர்ச்சிகளில் சுழலும் மனிதர்கள்.  ஆனால் அந்த உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டை மீறி நம்மை ஆட்டுவிக்குமேயானால் சுழலில் சிக்கி மூழ்கி விடுவோம்.

அப்படித் தான் வேதனைச் சுழலில் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தாள் பூர்வி. அவள் உலகம் ஸ்தம்பித்து போனது. அவள் நாள் முழுவதும் அஸ்தமனம் என்றானது.

“இன்னும் எத்தனை நாள் தான் இப்படி வேதனை பட்டுக் கொண்டே இருப்பாய், உனக்காவது நான் இருக்கிறேன். அதே சுனாமியில் இன்னும் எத்தனை சிறு சிறு குழந்தைகள் அவரவர் பெற்றோரை இழந்திருப்பர். அவர்கள் கஷ்டத்தை விட உன் கஷ்டம் பெரியதல்லவே” சித்தப்பாவின் ஆறுதலும் அறிவுரையும் அவளிடம் எந்த வித நல்ல மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மாறாக எதிர்வினையாக அமைந்து போனது.

“கஷ்டத்தில் சிறியது பெரியது என்ற அளவு இருக்கிறதா என்ன. என் இழப்பு, என் ரணம், என் வலி” என்று மென்மேலும் ஆழ்குழியில் அமிழ்ந்து போனாள்.

ஒவ்வொரு இழப்பும் மதிப்புடையது தான்.  ஆனால் அந்த இழப்பை எண்ணி நம்மை நாமே அழித்துக் கொண்டால் அது அந்த மதிப்பை இழிவு செய்வதாகாதா? அப்போது பூர்விக்கு அது புரியவில்லை.

Everyone has a story to tell (ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு கதை உண்டு) என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது. அந்த முதியோர் காப்பகத்தில் அப்படி நிறைய கதைகளைக் கேட்டாள். சில கதைகள் இருளுக்குப் பின் விடியல் வரும் என்று அவளுக்குச் சொல்லின. சில கதைகள் எவ்வளவு ஆழமான படுகுழியில் இருந்தும்  சுயமுயற்சியாலும் நல்லோர் உதவியாலும் மீண்டு வந்து விடலாம் என்று உணர்த்தின. எந்த வெற்றிடத்தையும் தூய அன்பினால் நிரப்பி விட முடியும் என்று எல்லாக் கதைகளும் அவளுக்கு விளங்க வைத்தன.

தேகத்தால் மரணித்த பெற்றோருடன் மனதால் மரித்துப் போயிருந்தவள் உயிர்த்தெழுந்தாள். பெற்றோரையும் உணர்வாய் உயிர்ப்பித்தாள்.

இவை எல்லாம் ஓர் நாள் இரவில் மேஜிக் போல நடந்துவிடவில்லை. நீண்ட காலம் தேவை பட்டது.

மனம் ஒரு குரங்கு என்று யார் சொன்னார்களோ மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். பல சமயங்களில் அறிவு எத்தனை முயற்சிகளை செய்தாலும் மனமானது குரங்கைப் போல துக்கத்தை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. மனக்குரங்கினை அறிவின் ஆணை படி நடக்கப்  பழக்கினாள்.

அவள் பல நேரங்களில் நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டு போவாள் தான். அவள் விழிகள் குளமாகி, சில சமயம் நதியாகவும் ஆகிவிடும் தான். ஆனால் அதில் மூழ்கி விடமால் இருக்கும் தெளிவான சமநிலை பெற்றிருந்தாள்.

ந்த உலகத்தில் தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் பலர். காரணங்கள் எதுவானாலும் இருக்கலாம், ஆனால் நிறைய பேர் அதிலிருந்து மீள முடியாமல் போய்விடுகின்றனர். அதனாலேயே தற்கொலைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.

பூர்வி மனநலத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு படித்தாள். டோபமின், செரடோனின், நார்எபிநெப்ரின் இவற்றின் சிநேகிதத்தை சம்பாதித்துக் கொண்டாள். ( இவை எல்லாம் நமது மூளையில் சுரக்கும்  ரசாயனங்கள்).

மனநலத்தை குணப்படுத்த எண்ணற்ற மருந்துகள் உள்ளன தாம். ஆனால் அவை நிறைய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தின. அப்போது தான் இசைக்கு இருக்கும் மகதத்துவத்தை அறிந்தாள்.

அது வரை இசை என்று அவள் அறிந்தது  தமிழ் திரையிசைப் பாடல்கள் தான். அவளது தந்தைக்குப் பிடித்தமான பாடல்களின் தொகுப்பு தான் அவளுக்குப் பரிச்சயம். மனநல மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது இசையைப்  பற்றி மேலும் கற்றாள்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வலியை இசை பெருமளவு குறைத்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதை முதல் ப்ராஜெக்ட்டாக செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.