(Reading time: 29 - 58 minutes)

“இப்போ தான் டியூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பறேன்” ஹரிணி சொல்ல தாரா மணியைப் பார்த்தாள்.

“உங்களுக்கு எத்தனை மணி நேரம் டியூட்டி டாக்டர்”

“இருப்பத்தி நான்கு மணி நேர டியூட்டி என்று கணக்கு. ஆனால் அப்படி நேரம் பார்த்து எல்லாம் கிளம்ப முடியாது. இன்று ஆபரேஷன் லிஸ்ட் குறைவு. அதனால் முப்பது  மணி நேரம் தான் டியூட்டி பார்த்திருக்கேன். சமயத்தில் கூடுதலாக  நான்கைந்து மணி நேரம் பார்க்க வேண்டியிருக்கும்” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இருபத்தி நான்கு மணி நேர டியூட்டியா. முப்பது மணி நேரம் பார்த்தேன் என்று சிரிச்சுட்டே சொல்றீங்க.  தூங்கவே மாட்டீங்களா டாக்டர். அப்போ சாப்பாடு எல்லாம். உங்க வீடு எங்க டாக்டர்” தாரா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

“நான் ஹாஸ்டலில் தான் இருக்கேன். சாப்பாடா. அது சாதாரண நாட்களிலேயே கஷ்டம். டியூட்டி போது அதெல்லாம் எதிர்ப்பார்க்க கூடாது.  இங்கே எந்நேரமும் நல்ல டீ கிடைக்கும். பார்லே ஜி பிஸ்கட் கிடைக்கும். பல டாக்டர்ஸ் குறிப்பா பயிற்சியில் இருப்பவர்களுக்கு அது தான் சீக்ரெட் ஆப் எனர்ஜி” ஹரிணி சொல்ல தாராவின் முகத்தில் கவலைக்குறி.

“நீங்க ஏன் பீல் செய்றீங்க தாரா. இது நான் தேர்ந்தெடுத்த பணி.  சாப்பாடு தூக்கம் துறந்து, கால நேரம் கடந்து, வீக்கென்ட் பண்டிகை எல்லாம் மறந்தது தான் எங்களோட வேலை ” ஹரிணி சொல்ல தாரா இடம் வலமாக தலையசைத்தாள்.

“இல்ல டாக்டர், இது நியாயமே இல்ல”

“இன்னொரு நாள் நாம இது பத்தி பேசலாம். இப்போ உங்க இளவரசிக்கான நேரம். ஹாப்பியா இருங்க” சொல்லிவிட்டு விடைபெற்றாள் ஹரிணி.

‘என்ன பெண்ணிவள். பார்த்து ஒரு நாள் கூட ஆகவில்லை. எப்படி  என் மேல் இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டுவிட்டாள்’ தாராவை எண்ணி வியந்தாள். அதே நேரம் நியாயம் இல்லை என்று அவள் சொன்னது ஹரிணியின் மனதில் ரீங்காரமிட்டது.

ண்மை தானே. மற்ற எந்த பணியிலும் வேலை நேரம் வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால் மனிதனுக்கு நாள் ஒன்றிற்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம் என்று ஆலோசனை கூறும் மருத்துவர்களுக்கோ அந்தத் தூக்கம் தான் தொலை தூரம் என்றாகிப் போகிறது.

ஒரு வாரம் முன்பு முரளியை சந்தித்துப் பேசியதையும் அசை போட்டாள்.

ஹரிணி அவனிடம் நலம் விசாரித்து முதுகலை படிப்பிற்க்கான நுழைவுத் தேர்வை எழுதினானா என்று கேட்டாள்.

“ரெண்டு ஷிப்ட் பார்க்கிறேன் ஹரிணி. அப்படியும் சம்பளம் குறைவா தான் கிடைக்கிறது. இதிலே பிஜிக்கு எங்கிருந்து படிக்க. அப்படியே சேர்ந்தாலும் அதில் கிடக்கும் ஸ்டைபன்ட் வைத்து எப்படி சமாளிக்க. டிஎன்பிஎஸ்ஸியும் ( அரசு வேலைக்கான நுழைவுத் தேர்வு) இப்போதைக்கு இல்லையாம். பையன் டாக்டருக்கு படிச்சிட்டான் இனி நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்ன்னு என் அம்மா அப்பா எதிர்ப்பார்த்திருக்காங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு” முரளி சொல்ல அவனை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் விழித்தாள்.

அவளும் முரளியைப் போல் பல ஷிப்ட் செய்து கொண்டு இருந்திருப்பாள். சுகீர்த்தி படித்து முடித்து வேலைக்கு சேர்ந்து விட்டிருந்தாள். ப்ரீத்தி வரூதினி இருவருமே பகுதி நேர வேலையை எடுத்துச் செய்தார்கள். அதனால் அவளால் பிஜி செய்ய முடிந்தது.

கார்பரேட் நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்த காலகட்டம். உலகமயமாக்கல் என்ற தத்துவம்  விலைவாசியையும் பணவீக்கத்தையும் அல்லவா உடன் அழைத்துக் கொண்டு வந்தது.

சூப்பர் மார்கெட், வெளிநாட்டு பிராண்டட் கடைகள் என்று சிறு நகரங்கள் வரை வேகமாய் பரவ, அதற்கு மீடியாக்களும் விளம்பரங்கள் மூலம் தூபம் போட, மக்களும் அந்த மோகத்தில்  மூழ்கியிருக்க  விவாசாயிகளும், நெசவாளர்களும், சிறு தொழில் வணிகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்தது ஒரு பக்கம் என்றால் மருத்துவத்துறையிலும் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.

எம்பிபிஎஸ் முடித்ததும் ஹரிணி முதலில் சென்று ஆசி பெற்றது அவளது ஊரில் பல வருடங்களாக மருத்துவ சேவை புரிந்து வந்த டாக்டர் மாமாவிடம் தான்.

அந்தச் சிறிய ஊரில் இரண்டு மாடிகளை கொண்ட டாக்டர் வீடு கம்பீரமாக நின்றது. கீழே க்ளினிக் மேல வீடு என்று இருக்க  ஒரு பிரீமியர் பத்மினி மேலும் அழகு சேர்த்தது.

அந்த ஊரில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் எல்லோரும் எந்த வேற்றுமையும் இன்றி அமர்ந்திருக்கும் ஒரே இடம் அந்த க்ளினிக் வராண்டாவில் தான்.

மிகவும் எமர்ஜன்சி இல்லை எனில் முதலில் குழந்தைகள், பின்பு முதியவர்கள் அதன் பின் மற்றவர்கள் என்று பார்க்கும் வரிசை முறையை ஏற்படுத்தியிருந்தார் டாக்டர். பண்ணையாரும் சரி அவரிடம் கைகட்டி வேலை செய்யும் கூலித் தொழிலாளியும் சரி அங்கே சமநிலை தான்.

விவாசாயமும், சிறு வணிகமுமே பிரதானமாக இருந்த ஊரில் சுத்தமான காற்றும், நீரும் உணவும் தாராளமாய் கிடைக்க மக்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.

சிறு சிறு உடல் உபாதைகளுக்கு டாக்டரே மருந்தை காகிதத்தில் மடித்து கொடுத்து விடுவார். அவருக்கு உதவியாக இருந்த நர்ஸ் ஏதேனும் சந்தேகம் என்றால் விளக்கிச் சொல்வார்.

எவருக்கேனும் பெரிய மருத்துவ உதவி தேவைப்படின் டாக்டர் அருகில் இருந்த டவுனில் இருக்கும் பெரிய மருத்துவமனை செல்லும் படி பரிந்துரை செய்து கடிதம் எழுதிக் கொடுப்பார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.