(Reading time: 29 - 58 minutes)

ஒரு சில அவரச சூழல்களில் தனது பிரீமியர் பத்மினி காரையே ஆம்புலன்ஸாக மாற்றி நோயாளிகளை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்.

“காசு கொடுக்காம வைத்தியம் பார்த்துக் கொண்டா குணமாகாது டாக்டரய்யா, உடம்பு சுகமில்லாததால சந்தைக்கும் போகலை. வியாபாரம் ஆகலை. இதை வைத்துக் கொள்ளுங்க. மறுக்காதீங்க” என  பீஸாக ஒரு பை நிறைய வேர்க்கடலைகளை நிரப்பிக் கொடுத்தனர்.

“டாக்டரம்மா  கரும்பு அறுத்தோம். கோயிலுக்கு படைச்சிட்டு உங்களுக்கும் ரெண்டு எடுத்து வந்தோம்” என்று அவரின் மனைவியிடம் கொடுத்து மரியாதை செலுத்தினர் மக்கள்.

அந்த மதிப்பையும் மரியாதையையும் நம்பிக்கையையும் தன்னுடைய நற்குணத்தால் கனிவால் சேவை மனைப்பான்மையால் மக்களிடம் சம்பாதித்திருந்தார் டாக்டர்.

மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததும் டாக்டர் மாமா போல் தானும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டாள் ஹரிணி. டிகிரி வாங்கியதும் அவரிடம் ஆசி பெற சென்றாள்.

“இப்போ இருக்கும் காலகட்டத்தில் எம்பிபிஎஸ் மட்டும் போதாது ஹரிணி. மேற்கொண்டு பிஜி படித்து அதற்கும் மேல ஸ்பெஷலைஸ் செய்து ஆக வேண்டிய கட்டாயம் வந்திடுச்சு. மக்கள் எல்லோரும் இப்போது ஸ்பெஷலிஸ்ட் தேடித் தான் போறாங்க. எப்படி விவசாய நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் ஆக்கி அரிசியிலும் பிராண்ட்டை கொண்டு வந்து இறக்குமதி செய்து விட்டார்களோ அது மாதிரி சிறு க்ளினிக்குகளை எல்லாம்  பெரிய கார்ப்பரேட்கள் கபளீகரம் செய்து விடும்” அவர் சொல்ல அப்போது ஹரிணிக்குப் புரியவில்லை.

ஆனால் கடந்த மூன்று வருடங்களில் நித்தம் நிறம் மாறிக் கொண்டிருக்கும் நிலையைக் கண்டு மிகவும் கவலைக்குள்ளாகி போவாள்.

அவளைப் போல சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சேவை என்ற  லட்சியத்தோடு மருத்துவக் கல்லூரியில் நுழைந்தவர்கள் ஏராளம். ஆனால் நிதர்சனத்தின் ஓட்டத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகின்றனர் பலர்.

முன்பு மக்களிடம் பிரிவினையின் காரணிகளாக ஜாதி மதம் போன்றவை தான் பிரதானமாக இருந்து வந்தன. இன்று பணம் தான் மக்களிடம் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஏற்றத்தாழ்வை சமன்படுத்த எப்படியும் பணத்தை சம்பாதித்து விடும் நோக்கத்தில் தனி மனித ஒழுக்கமும் நற்சிந்தனைகளும் சிதைந்து போய் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பின்னடைவு.

வளமான நாடு என்பது வெறும் பொருள் கொண்டு நிர்ணயம் செய்வதா? மனவளம், உடல்வளம், சிந்தனை வளம் இவை எல்லாம் முக்கியம் அல்லவா.

முரளிக்குத் தன் ஊரிலேயே க்ளினிக் வைத்து மக்களுக்குப் பணி செய்ய ஆசை. அவனைப் போல இன்னும் பலர். ஆனால் எல்லோருக்கும் குடும்பம் இருந்தது. கடமைகள் இருந்தன. பொருளை ஈட்ட வேண்டிய கட்டாயம் அவர்களின் இலட்சியத்தைக் குலைத்தன.

அப்போது ஹர்ஷவர்தன் போன்ற ராஜகுமாரர்கள் தான் தங்களது கனவினை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா. முரளி போன்றோருக்கு அது என்றும் கானல் நீராகி விடுமா.

கல்வி, மருத்துவம். எந்த இரண்டு துறையும் என்றுமே வியாபாரம் ஆகி விடக் கூடாதோ அந்த வலையில் அவை வீழ்ந்துவிட்டன.

அந்த வலையில் சிக்காமல் தங்கள் கொள்கையில் பிடிவாதமாய் சேவை தான் பிரதானமாய் சுறாக்கள் போல மனவலிமை வாய்ந்தவர்கள் சிலரே. பலர் சிறு சிறு மீன்களாக தத்தளித்து வலையில் சிக்கி கண்ணாடிக் கூண்டினில் அடைந்து போகிறார்கள்.

அதிக வேலை நேரம், இவ்வாறான  அழுத்தம் இவை எல்லாம் நிறைய மருத்துவர்களை தற்கொலைக்கும் இட்டுச் சென்று விடுகிறது. சிலரோ இதிலேயே உழன்று ஒரு கட்டத்தில் இயந்திரமாய் இறுகிப் போகிறார்கள்.

ஒரு நல்ல ஆசிரியரையும் சிறந்த மருத்துவரையும்  ஒரு ஊரே சேர்ந்து தத்தெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் குடும்பம், அவர்கள் கடமைகள் எல்லாவற்றையும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். மனம், உடல் இரண்டின் பரிபூரண ஆரோக்கியம் இன்றைய நிகழ்கால சமுதாயத்திற்கு மட்டுமன்றி நாளைய தலைமுறைக்கும் கிடைக்கும். ஆனால் இது சாத்தியமா.

இந்தக் கேள்விக்கு விடை எப்போது கிடைக்கும் என்று யோசித்தபடியே ஹர்ஷாவிடம் பேசலாமா என்று மணியைப் பார்த்தாள் ஹரிணி.

தே நேரம் ஸ்வாதிகா தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.  கோபம், ஏமாற்றம் எல்லாம் அவளது தூக்கத்தை விரட்டி அடித்து விட்டிருந்தன.

“ஷாஸா கிறிஸ்மஸ் வெகேஷனுக்கு எங்கே போகலாம். நியூயார்க், நயகரா எல்லாம் ஒரே பனி. லாஸ் ஏஞ்சல்ஸ், வேகாஸ் எல்லாம் போகலாமா. ப்ளோரிடா போகலாம். மியாமிக்கு” அவளும் ஏதேதோ ப்ளான் செய்தாள்.

“எனக்கு ஐடியா இல்ல ஸ்வாதி, யாரோட போற. பிரண்ட்ஸ் கூடவா. ஜஸ்வந்த் அங்கிள் கிட்ட சொல்லு. அரேஞ்மன்ட்ஸ் செய்து தருவார். சரி அப்புறம் பேசலாமா பேஷண்ட்ஸ் பார்க்க போகணும்” போனை கட் செய்தான் ஹர்ஷா.

அவளும் அங்கே படிக்க வந்து நான்கு மாதங்கள் ஆகி விட்டிருந்தன. ஆனால் இது வரை ஹர்ஷாவை அவள் சந்திக்கவே இல்லை. எப்படியாவது இந்த கிறிஸ்மஸ் வெகேஷனை அவனோடு சேர்ந்து செலவிடலாம் என்று நினைத்திருந்தாள். அதுவும் நிறைவேறவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.