(Reading time: 29 - 58 minutes)

அவளது நண்பர்கள் எல்லாம் வெகேஷன் சென்று விட இவளுக்கு  செல்ல மனமில்லாததால் அவளது பிளாட்டிலேயே தங்கி விட்டிருந்தாள்.

நிலைகொள்ளமால் தவித்தவள் ஹரிணிக்கு போன் செய்தாள். நல விசாரிப்புகளுக்குப் பின் ஹரிணியிடம் கொட்டித் தீர்த்தாள்.

ஹரிணி அவளுக்குப் புரிய வைத்தாள். அவனது பணி, அதன் முக்கியத்துவம் அனைத்தையும். ஸ்வாதிக்குப் புரியாமல் இல்லை ஆனால் அவள் மனதின் ஏக்கம் அவளை வாட்டியது.

இடையே ஸ்வாதிகாவின் தந்தை அவளது திருமணம் குறித்து அவளிடம் ஆலோசித்தார். எதுவானலும் தனது படிப்பு முடிந்ததும் அங்கே வந்து பேசிக் கொள்ளலாம் என்று மறுத்து விட்டிருந்தாள்.

மாதங்கள் எவ்வித மாற்றங்களும் இன்றி உருண்டோட அவளது படிப்பும் முடிந்து அவள் இந்தியா திரும்பியிருந்தாள். அந்த இரண்டு வருடங்களில் அவள் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

ஹர்ஷா அவளிடம் மிகவும் பிரியமாகத்  தான் இருந்தான். ஆனால் அவன் அவனது பணியை மிகவும் அதிகமாக விரும்பியதை  ஸ்வாதிகா உணர்ந்தாள். ஹர்ஷாவை அவள் மிகவும் நேசித்தாள். ஆனால் அவளது நேசம் எந்த வகையிலும் அவனது  மருத்துவப் பணிக்கு இடையூறு ஆகி விடக் கூடாது என்று முடிவு செய்தாள்.

 இந்த இரண்டு வருடங்களில் சில கான்பரன்ஸ் கால்கள் மூலம் ஹரிணிக்கும் ஹர்ஷாவுக்கும் இடையே இருந்த அன்பையும், புரிதலையும், பணி மேல்  இருவருக்கும் இருந்த ஒரே மாதிரி  பிடிப்பையும் உணர்ந்தவள் அவர்கள் இருவரும் இணைவதே சரி என்ற முடிவிற்கு வந்தாள். நாம் முடிவு செய்வதெல்லாம் நடந்து விட்டால் இயற்கைக்கு என்ன வேலை. அப்போது  ஹரிணியிடம் இருந்து அவளுக்கு போன் கால் வந்தது.

பூர்வி மிகுந்த உற்சாகமாக இருந்தாள். அவளது பிஎச்டி ப்ராஜக்ட்டை  வெற்றிகரமாக செய்து முடித்ததைக் காட்டிலும் அவள் இந்தியா செல்ல இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். எத்தனையோ தலைமுறைக்கு முன் புலம் பெயர்ந்து வந்துவிட்ட போதும் பூர்வீகத்தை காணப் போகும் ஆவல். மேலும் அவள் எந்த காரணத்திற்காக செல்கிறாளோ அது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.  

“பூர்வி என்னை கடுப்பேற்றாதே” ஹர்ஷா அவளது ஆட்டம் தாங்க முடியாமல் அலறினான்.

இதய அறுவை சிகிச்சையில் சிறப்பாக பட்டம் பெற்ற ஹர்ஷா அதே மருத்துவமனையில்  பணியில் சேர்ந்திருந்தான். இன்னும் கொஞ்சம் அனுபவம் பெற்று தாயகம் திரும்ப எண்ணியிருந்தான்.

அப்போது அவனுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. உலகம் முழுவதும்  இதய அறுவை சிகிச்சைத் துறையில் இருந்த மருத்துவர்கள் ஒரு குழுவை தேர்ந்தெடுத்தனர். அதில் இளம் மருத்துவர்களும்  சிறந்த மூத்த மருத்துவர்களும் இடம் பெற்றனர். அவர்கள் உலக மருத்துவ டூர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

உலகத்தின் தலை சிறந்த ஹார்ட் சென்டர்கள் சென்று அங்கு அவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளை ஆராய்ந்து கலந்தாலோசித்து பயன் பெரும் ஒரு அரிய வாய்ப்பு. ஹர்ஷாவும் அதில் தேர்வு பெற்றிருந்தான்.

ஆஸ்திரியா,ஜெர்மனி, வியட்நாம், தென் கொரியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா, இந்தியா எனப் பல நாடுகளில் சுற்றுப்பயணம்.

பூர்வி இந்தியா கிளம்பிய சில நாட்களிலேயே பெர்லினுக்கு விமானம் ஏறினான் ஹர்ஷா. அங்கிருந்து லிப்சிக் என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கு தான் மருத்துவக் குழுவின் தொடக்க கான்பரன்ஸ்  நடைபெற உள்ளது. அங்கே அவன் அறுவை சிகிச்சை செய்து அதன் முறைகளை அனைவரிடமும் எடுத்துரைக்கவிருந்தான்.

ஹரிணி மிகவும் மகிழ்ந்து போயிருந்தாள். எந்தக் காரணம் கொண்டும் அப்படி ஒரு சிறந்த வாய்ப்பை தவற விடவே கூடாது என்று அவனிடம் சொல்லியிருந்தாள். அவள் ஏன் அப்படி சொன்னால் என்று தெரிந்த பின் ஹர்ஷா அவளைக் கோபித்துக் கொண்டான். இருப்பினும் அவளுக்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்ற பெர்லினுக்குப் பறந்தான்.

அன்று நாள் முழுவதும் சர்ஜரி செய்துவிட்டு விமானம் ஏறியவன் டேக் ஆப் ஆனதும் நன்றாக உறங்கி விட்டிருந்தான்.

அந்த முதல் வகுப்பு கேபின் நிசப்தமாக இருந்தது. யாரோ கதவினை தட்டும் மெல்லிய சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்து கேபினின் கதவை திறந்தான்.

“நீங்கள் மருத்துவர் தானே” மிகவும் பதட்டமாய் தெரிந்த விமானப் பணிப்பெண் அவனிடம் வினவ ஆம் என்றான்.

எகானமி வகுப்பில் ஒரு எமர்ஜன்சி உடனே வர வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தாள் அந்தப் பெண்.

ஹர்ஷா அவனது இரவு உடையிலேயே அந்த பெண்ணோடு விரைந்தான். என்ன ஆயிற்று என்று கேட்டறிந்தான்.

விமானத்தில் பயணிகள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருக்க விமான உணவு சேவைகளை முடித்து விமான பணியாளர்களும் அவர்களது இருப்பிடங்களில் இருந்தனர்.

பாத்ரூம் செல்வதற்காக எழுந்து வந்த ஐம்பது வயது பயணி ஒருவர் திடீரென வழியில் நிலைகுலைந்து விழுந்துவிட்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.