(Reading time: 29 - 58 minutes)

இது குறித்த ஏற்கனவே பல ஆய்வுகள் இருப்பதால் தனது பிஎச்டிக்கு என்ன ப்ராஜக்ட் எடுப்பது என்பது குறித்து தீவிரமாக சிந்தித்து தற்போதைய ப்ராஜக்ட்டான இதயங்களை குணமாக்கும் இசையை தேர்ந்தெடுத்தாள்.

வள் அங்கு சேர்ந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆனது. இந்த மூன்று வாரங்களில் அவள் ஹர்ஷாவிடம் பேசியதை விட ஹரிணியிடம் பேசியது தான் அதிகம். அவளது ப்ராஜக்ட்க்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினாள் ஹரிணி.

பூர்வி இதய அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகில் மனதிற்கு இதம் தரும் மிதமான இசையை தவழ விட்டு அந்த இசையானது அவர்களின் இதயத்தை எவ்வாறு சமநிலைப்படுத்தி  பலப்படுத்த உதவுகிறது என்பதை ஆராய்ந்தாள்.

“பொதுவாக சர்ஜரிக்கு முன்  நோயாளிகளுக்கு பயமும் படபடப்பும் அதிகம் இருக்கும். சிலருக்கு அறுவை அரங்கிற்குள் வந்ததும் இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் மிக அதிகமாக எகிறி விடும். அந்நிலையில்  மயக்க மருந்து தருவதிலும் அறுவை சிகிச்சை செய்வதிலும் மிகுந்த சிக்கல்களும் சிரமங்களும் உண்டாகும். எவ்வளவு  தான் சிறப்பாக அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் நோயாளிகளின்  மனநிலை சீராக இல்லாவிட்டால் எந்த சிகிச்சையும் பலனளிக்காது . நீ ஏன் ஆபரேஷன் நடக்கும் முன்பிருந்தே உன் ப்ராஜக்ட்டை தொடங்க கூடாது” ஹரிணி பூர்விக்கு ஆலோசனை சொன்னாள்.

இது குறித்து அவள் ஹர்ஷாவிடம் தெரிவித்தாள்.

“அனஸ்தீசியா சீப் கிட்ட பேசிப் பாரு பூர்வி. சர்ஜரியின் போது நோயாளிகளின் மூச்சும் உயிரும்  அவர்கள் கையில் தான். ஆபரேஷன் தியேட்டாரின் பொறுப்பு அவரிடம் தான் உள்ளது” ஹர்ஷா பூர்வியிடம் சொன்னான்.

அதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் பூர்வியால் ஹரிணியின் ஆலோசனையை செயல்படுத்த முடியாமல் போனது.

“அக்கா நீங்க இங்க வந்திடுங்க, அண்ணா செய்யும் சர்ஜரிக்கு எல்லாம் அனஸ்தடிஸ்ட்டா இருங்க. நாம ப்ராஜக்ட் செய்திடலாம்” பூர்வி எந்த நேரத்தில் அதைச் சொன்னாளோ, அப்போது அது சாத்தியமில்லை என்று சொன்ன ஹரிணிக்குத் தெரிந்திருக்கவில்லை, அது தான் சரித்திரம் ஆகப்போகிறது என்று.

அந்த மூன்று வாரங்களில் பூர்விக்கு மூச்சு முட்டியது. அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. இதய அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், இதயத்தின் பலம் இப்படி நொடிக்கொரு தரம் மாறும் என்று.

“இங்க ஐசியுவில் வேலை செய்யும் நர்ஸ் டாக்டர் எல்லாம் தெய்வம் அண்ணா” ஹர்ஷாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இதற்கே நீ இப்படி சொன்னா இந்தியா போய் பார்த்தா என்ன சொல்வ” ஹர்ஷா சொல்ல “எனக்குப் புரியலை அண்ணா” என்றாள்.

“உன் அக்கா கிட்ட கேளு, கதை கதையா சொல்லுவா” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சென்றான்.

ஹரிணி, பூர்வி இருவரும் அறிமுகமாகி மூன்று வாரம் தான் ஆகியிருந்தது.  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூட இல்லை. போனில் பேசினாலும் மணிக்கணக்கில் எல்லாம் பேசியது இல்லை. ஆனாலும் அவர்களிடையே ஒரு ஆழமான பந்தம் உருவாகி விட்டிருந்தது.

நமது வாழ்க்கையில்  எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் ஒரு சிலருடன் மட்டும் எப்படி சட்டென ஒரு பந்தம் தீப்பொறி போல பற்றிக் கொள்கிறது. சிலர் பூர்வஜென்ம வாசனை  என்பர். சிலர் ஒரே எண்ண அலைவரிசை என்பர். ஆனால் இன்றளவும் தெளிவான விடை ஒன்று இல்லை.

அப்படி இன்னொரு  ஆழமான  பந்தம் ஹரிணிக்கு ஏற்பட்டது. அவள் வாழ்விலேயே முதன்முறையாக அவளிடம் ஐ லவ் யூ சொன்னவரிடம்.

மிழில் அன்பு, நேசம், பாசம், காதல் என்று நம் உணர்வுகளைக்  குறிக்க வெவ்வேறு சொற்கள் உள்ளன. ஆனால் அந்தச் சிறப்பு ஆங்கிலத்தில் இல்லை. லவ் என்ற ஒரு சொல்லில் அனைத்தும் அடக்கம்.

அன்று ஹரிணி இரவு நேரப் பணியில் இருந்தாள். மயக்கவியல் மேற்படிப்பில் மகப்பேறு நலப்பிரிவில் அவளுக்குப் போஸ்டிங். அன்று விடுமுறை நாள் ஆதலால் எமர்ஜன்சி சிசேரியன் போது தான் அவளது சேவை தேவையாக இருந்தது.

“ஹரிணி  சோ டையரிங் டே பார் யூ. போய் ஏதாச்சும் சாப்பிடு. இன்னிக்கு ஹாலிடே வேற. நீயும் காலையில் இருந்து தனியா ஒரு நிமிஷம் கூட உட்காராமல் வேலை செய்துட்டு இருக்க. ” மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை பயிற்சி மேற்கொள்ளும் லீனா சொல்லவும் ஹரிணி அந்த டெலிவரி வார்டில் இருந்து கிளம்ப எத்தனித்தாள். அப்போது தான் அந்த அலறல் சத்தம் கேட்டது.

“ப்ளீஸ் டாக்டர் எனக்கு சிசேரியன் செய்திடுங்க. என்னால முடியாது. அவரும் என் பக்கத்தில் இல்ல” டெலிவரி பெட்டில் அமர்ந்து கொண்டு ஒரு பெண் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.