(Reading time: 29 - 58 minutes)

அந்தச் சில நிமிடங்களிலேயே ஆர்சியை பார்த்து ஹர்ஷா மிகுந்த ஆச்சரியம் கொண்டான். ஹர்ஷாவை விட நாலைந்து வயது குறைந்தவனாக இருந்தான். ஆனாலும் அவனுக்குத் தெரியாதது என்று உலகத்தில் ஏதும் உண்டா, அவன்  செய்யாத செயல் உண்டா, புரியாத சாகசம் உண்டா என்று எண்ணும் அளவிற்கு சகலகலா வல்லவனாக இருந்தான் ஆர்சி.

அதை ஹர்ஷா சொல்லவும் பெரிதாக சிரித்தான்.

“இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கேலக்ஸி இருக்கு. மில்கி வே ரொம்ப ஸ்பெஷல். மில்கி வே யில் எத்தனையோ நட்சத்திரம் இருக்கு. சூரியன் ரொம்ப ஸ்பெஷல். சூரியனை எத்தனையோ கோள் சுற்றுகிறது. பூமி ரொம்ப ஸ்பெஷல். பூமியில் எத்தனையோ ஜீவராசிகள் உண்டு. மனிதன் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா நம்மால் மட்டுமே ஐம்புலன்களால் உணர்ந்து ரசித்து அனுபவிக்க  முடியும். இருக்கிறது ஒரு லைப். அதில் எவ்வளவு முடியுமோ அத்தனை அழகை ரசிக்க வேண்டும், அனுபவங்களை பெற வேண்டும். வாழ்க்கை வாழும் பயனை உணர வேண்டும்” ஆர்சி சொல்லவும் ஹர்ஷாவின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. ஆர்சியுடன் பேசிக் கொண்டிருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

“இளைய நிலா பொழிகிறது” ஒரு வரி மட்டும் ஒலித்து அடங்க  ஆர்சி உற்சாகமாக மீதிப் பாடலை  விசில் அடித்தான்.

“பிரின்ஸ் நீங்க ஜெய்பூர்ன்னு சொன்னீங்க, தமிழ்ப் பாடலை ரிங் டோன் வைத்திருக்கீங்க. அதிலும் இது என் பேவரைட் சாங். நடுவில் அந்த கிட்டார் வருமே. ப்ப்பா  அங்க நிற்கிறார் ராஜா” சிலாகித்தான்.

“இந்தப் பாடல் பிடிக்கும் என்று ரசித்து சொல்லியதற்காக மகிழும் ஒருத்தி என்னை பிரின்ஸ் என்று நீ அழைத்ததற்காக  முறைப்பாள்” மனதில் நினைத்துக் கொண்டவன் சிரித்தான்.

மீண்டும் போன் ஒலிக்க அப்போது வீடியோ கால் வந்தது. ஆர்சி ஹர்ஷா இருவரும் அப்போது தான் உண்ண தொடங்கி இருந்தனர். தான் செல்லட்டுமா என்று கேட்ட ஆர்சியை வேண்டாம் என்று தடுத்த ஹர்ஷா அவன் முன்னிலையிலேயே வீடியோ காலை உயிர்ப்பித்தான்.

எதிரில் அமர்ந்திருந்த ஆர்சிக்கு குரல் மட்டுமே கேட்டது.

“அண்ணா நான் எப்படி இருக்கேன் அழகா இருக்கேனா” பூர்வி திரையில் தெரிந்தாள். அவளைத்  தள்ளி விட்டு ஸ்வாதிகா திரைக்கு வந்தாள்.

“ஷாஸா நான் எப்படி இருக்கேன் எனக்கு முதல்ல சொல்லுங்க” இருவரும் மாறி மாறிப்  போட்டி போட்டுக் கொண்டிருக்க சுகீர்த்தி, ப்ரீத்தி, வரூதினி எல்லோரும் திரையில் வந்து ஹர்ஷாவை கண்டு மகிழ்ந்தனர்.

ஆர்சி ஹர்ஷாவின் முகபாவங்களைப் பார்த்துக்  கொண்டிருந்தான். யார் யாரோ வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஹர்ஷாவின் விழிகள் யாரை அப்படித் தேடுகின்றன என்று யோசித்தான்.

“அக்கா கிட்ட குடுக்குறேன்” எனவும் ஹர்ஷா முகத்தில் மின்னலாய் ஒளிர்ந்த மகிழ்ச்சியை ஆர்சி கவனித்தான்.

“ஹனி” அந்த ஒற்றைச் சொல் எதிரே அமர்ந்திருந்தவனையும் ஏதோ செய்தது. உயிர் ஆழம் வரை இனித்தது.

‘நான் எப்படி இருக்கிறேன். அழகாக இருக்கிறேனா’ என்று அவள் கேட்கவில்லை “சாப்பிட்டு பேசேன் ஹரி. என்ன அவசரம்” என்றாள்.

அந்தக் குரலில் சொட்டிய அன்பும் பரிவும் அக்கறையும் உரிமையும் தாய்மையும் ஆர்சியை வியப்படையச்  செய்தது.  

அவள் மெடிகல் கான்பரன்ஸ் எப்படி நடந்தது என்று கேட்க ஹர்ஷா நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்ல சொல்ல ஹரிணி முகத்தில் தெரிந்த பூரிப்பை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“என்ன  ஹரி என்னை இப்படி பார்க்கிற. பேய்  மாதிரி இருக்கேனா. நான் வேண்டாம்னு தான் சொன்னேன்.  இந்த வானரங்கள் எல்லாம் எங்கே கேட்குது. இப்படி மேக் அப் எல்லாம்” அவள் முடிக்கவில்லை.

“அழகா இருக்க ஹனி” ஹர்ஷாவின் குரல் ஆழமாக ஒலித்தது. அவன் அவளது தோற்றத்தைப் பார்த்து அதைச் சொல்லவில்லை என்று ஆர்சி புரிந்து கொண்டான்.

“அக்கா வா வா உன்னை கூப்பிடுறாங்க. மாமா வெயிட் செய்துட்டு இருக்கார்.  அண்ணா நான் அக்கா மேடை ஏறியதும் லைவ் வீடியோ காட்டுறேன்” என்று பூர்வி சொல்ல ஹர்ஷா ஆனந்த புன்னகையோடு இமைகள் மூடி தலையசைத்தான்.

“இந்த நேரத்தில் உன் கூட இருக்க முடியலைன்னு ரொம்ப பீல் செய்றேன் ஹனி” ஹர்ஷா சொல்லவும் சற்றே உணர்ச்சி வசப்பட்டாள் ஹரிணி.

ஆர்சிக்கு மாமா யார் என்ன மேடை என்று தெரியவில்லை. ஹர்ஷா ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான் என்றும் புரியவில்லை. ஆனால் அவனது ஹனி அவனுக்கு எவ்வளவு அருமையானவள் என்று புரிந்தது.

கழுத்தில் புத்தம் புது மஞ்சள் சரடு தொங்க, உச்சி நெற்றியில் குங்குமம் துலங்க சில மணி நேரங்கள் முன்பு பாலகிருஷ்ணனின் மனைவியாகி விட்டிருந்த ஹரிணி, ஹரியின் ஹனி சொன்னாள்.

 “ஐ மிஸ் யூ ஹரி”

முடிவிலியை நோக்கி ...

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.