(Reading time: 29 - 58 minutes)

“சொன்னா கேளுங்க. உங்களுக்கு நார்மலாகவே ஆரோக்கியமாக குழந்தை பிறக்க இருக்கிறது. சிசேரியன் தேவை இல்லை அண்ட் உங்களுக்கு  இப்போது செய்யவும் முடியாது. குழந்தையின் தலை கீழே இறங்கி விட்டது. முதல் டெலிவரி என்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கும். எல்லாமே நார்மல் தான். ப்ளீஸ்” அந்த பெண்ணிற்குப்  புரிய வைக்க முயற்சி செய்தாள் லீனா.

“அம்மா நீங்களாவது சொல்லிப் புரிய வைங்க” அப்பெண்ணின் தாயிடம் கூறினாள் லீனா.

“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். மாப்பிள்ளையும்  வெளிநாட்டில் இருக்காங்க. டெலிவரிக்கு வந்திடிறேன்னு தான் சொன்னாங்க. ஆனா இப்படி இருபது நாள் முன்னாடியே வலி வந்திடுச்சு. எங்க டாக்டர் வேற ஊரில் இல்லை. அதான் இங்கே பக்கத்தில் அழைச்சுட்டு வந்தேன்” மகளின் வலியில் அவர் துடித்தார்.

“இவங்க டேட் தப்பா சொல்லியிருப்பாங்க. ஸ்கேன் செய்யும் போதும் கூடக் குறைய ஓரிரு வாரம் கணக்கு வைத்து தான் சொல்லுவாங்க. குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறது. அதனால ஒரு பயமும் இல்லை. நீங்க கவலை படாதீங்க” லீனா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் படுக்கையில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

“டாக்டர் எனக்கு பயமா இருக்கு. மயக்க மருந்து குடுத்திடுங்க ப்ளீஸ்” என்று அப்பெண் மீண்டும் கெஞ்ச அவளது போன் ஒலித்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து அவளது கணவன் தான் போன் செய்திருந்தான். லீனா அவரிடம் நிலைமையை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாள். அவர் அச்சமயம் ஏர்போர்ட் அடைந்திருந்தார். அவரது விமானம் புறப்பட இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது.

“டாக்டர் சிசேரியன் செய்திட முடியாதா. நான் கிளம்பும் முன் குழந்தை பிறந்துட்டா எனக்கு நிம்மதி” அவரும் உடன் சேர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அங்கு மூத்த மகப்பேறு மருத்துவரும் வந்துவிட்டிருந்தார். அவர் சற்றே கண்டிப்பனாவர்.

“இங்க பாருங்க சார். குழந்தை பிறப்பு இயற்கையானது. குழந்தையை சுமக்கும் கர்பிணி பெண்கள் நோயாளிகள் இல்லை. நீங்க அவங்களை நோயாளி ஆக்கி விட சொல்லாதீங்க. அனஸ்தடிஸ்ட் மயக்க மருந்து தரவும் சம்மதிக்க மாட்டார்கள்” என்று தனியறைக்கு சென்று அவளது கணவரிடம் எடுத்துரைத்தார்.

அவர் அனஸ்தடிஸ்ட்டிடம் பேச வேண்டும் என்று சொல்ல ஹரிணி போனை வாங்கிப் பேசினாள்.

“டாக்டர் என் வைப் வலி தாங்க மாட்டா. ப்ளீஸ் ஏதாவது செய்யுங்க. நாங்க  சிசேரியன் தான் செய்ய ஆலோசித்து இருந்தோம். இப்படி வலி வந்திடும்னு எதிர்ப்பார்க்கலை” அவரது பதட்டத்தை ஹரிணி உணர்ந்தாள்.

“வலி தான் பிரச்சனை என்றால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க விமானம் ஏறும் முன் உங்களுக்கு நல்ல செய்து கிடைத்திடும்” என்று அவருக்கு தைரியம் சொல்லி மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்தாள்.

“எபிடியூரல்” பற்றி அந்தப் பெண்ணிடமும் அவள் கணவன் மற்றும் தாயிடம் விவரமாக எடுத்துச் சொல்லி அதில் இருக்கும் ரிஸ்க் குறித்தும் எடுத்துரைத்து  சம்மதம் பெற்று அப்பெண்ணின் முதுகுத் தண்டில் ஊசி மூலம் மருந்தை செலுத்தினாள்.

“எக்சலன்ட் ஹரிணி” மூத்த மகப்பேறு மருத்துவரும் சரி மற்ற பயிற்சி மருத்துவர்களும் சரி அவளைப் பாராட்டினார்கள்.

முதுகில் ஊசியா வலிக்குமா டாக்டர் என்று அழுத அப்பெண் ஒரு நிமிடம் திகைத்தாள். எதற்கு எல்லோரும் எக்சலன்ட் என்று கூறுகிறார்கள் என விழித்தாள்.

அப்போது தான் அவளுக்கு தெரிந்தது ஹரிணி ஊசி மூலம் மருந்தை செலுத்தி விட்டிருந்தாள் என.

“இவ்வளவு பெரிய ஊசி எப்படி டாக்டர் வலியே தெரியாமல் போட்டீங்க” அந்த ஊசியின் அளவைப் பார்த்து முதலில் மிரண்டு பின் ஆச்சரியம் கொண்டாள்.

“உங்களுக்கு வலி இல்லாமல் செய்வது தான் என் பணி, அதை நான் செய்து விட்டேன் பட் நீங்க இப்போ முழு ஒத்துழைப்பு தரணும். நானும் உங்க கூடவே இருப்பேன்” ஹரிணி சிரித்த முகமாய் சொல்ல அப்பெண்ணின் முகமும் கண்ணாடி போல அச்சிரிப்பை பிரதிபலித்தது.

அடுத்த ஒரு  மணி நேரத்தில் எல்லாம் அழகான பெண் குழந்தைக்குத் தாயானாள் அப்பெண்.  

குழந்தையை அப்பெண்ணிடம் லீனா கொடுக்க, ஒரு கரத்தால் குழந்தையின் விரலைப் பற்றிக் கொண்டு இன்னொரு கரத்தில் ஹரிணியின் கையைப் பற்றிக் கொண்டு சொன்னாள்.

“ஐ லவ் யூ டாக்டர்”

மறுநாள் மதியம் டியூட்டி முடிந்து செல்லும் முன் தனக்கு ஐ லவ் யூ சொன்ன தாராவையும் அவளது குட்டி தேவதையையும்  பார்த்து வரலாம் என்று அவள் இருந்த வார்டுக்கு சென்றாள் ஹரிணி.

அங்கே அவள் கணவனுடமும் குழந்தையுடனும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தாள் தாரா.

“நான் தாராவின் ஹஸ்பன்ட். ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” ஹரிணிக்கு நன்றி தெரிவித்தான்.

“டாக்டர் நீங்க நைட் டியூட்டியில் இருந்தீங்க, எப்போ  ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க” ஆச்சரியமாய் கேட்டாள் தாரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.