(Reading time: 12 - 24 minutes)

“இப்போ எதுக்கு இத்தனை வெட்கம் திஷா பேபி..”,என தன் தோள் சாய்த்துக் கொள்ள பாவமாய் அவனை ஏறிட்டவள்,

“அத்தை மாமா என்ன நினைப்பாங்க..எழுப்பிருக்கலாம் தான..எனக்கு வெளியே போகவே ஒருமாதிரி இருக்கு அபிப்பா..”

“திஷா..உனக்கு உடம்பு சரியில்ல புட் பாய்சன்னு சொல்லிருக்கேன்.அதனால யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க..ஆமா நீ ஏன் இவ்ளோ நேரம் தூங்கின நைட் தூங்கலையா பேபி”,என அவள் முன் தலைதாழ்த்தி கிண்டலாய் அவன் கேட்க..

“அபிப்பா..”,என்றவள் தன்னவனின் சட்டையை இழுத்து முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்தவனின் இறுக்கத்தில் இருந்தது அரவணைப்பு மட்டுமே..தன்னவள் மொத்தமாய் தன்னை ஏற்றுக் கொண்டுவிட்டாள் என்ற திருப்தி அவளின் பயம் மறந்து தன்னோடுடனான உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்ற பெருமிதம் இப்படி அனைத்துமாய் இருந்தது அந்த அணைப்பு..

தன்னிடமிருந்து அவளைப் பிரித்தவன் கலைந்திருந்த அவள் நீள் கூந்தலை கோதி கொண்டைப் போட்டு அந்த கிளிப்பை போட்டுவிட்டான்.

மெதுவாய் எழுந்தவன் தன்னவளை கையிலேந்தி குளியலறை நோக்கி நடக்க,”ஐயோ என்ன பண்றீங்க நானே போய்க்கிறேன்..விடுங்க..”

“காதுகுள்ள ஏன்டீ கத்துற ஒண்ணும் பண்ண மாட்டேன் போ போய் பல்லை தேய்ச்சுட்டு வந்து சாப்டு முதல்ல..”என்றவன் அவளை கீழே இறக்கியபின் தான் உயிரே வந்தது அவளுக்கு..

கதவை சாத்தியவள் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க அத்தனை பூரிப்பும் சந்தோஷமும் ஏதோ உலகையே வென்றுவிட்ட உணர்வு.தன்னவன் தன்னை நாடியது ஆசை தாபத்தை தாண்டிய காதலால் என்பதை அவனின் ஒரு தொடுகையுமே அவளுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது.இதை விட இந்தப் பிறவிக்கு எதுவும் வேண்டுமோ என்றே தோன்றியது.

நினைவுகளை பின்னுக்கு தள்ளியவள் வேகமாய் பல் துலக்கி குளித்து வெளியே வந்தாள்.தட்டை எடுத்து அவள் முன் வைத்தவன் அவளுக்காக உணவை கையில் எடுத்து ஊட்டிவிட ஆரம்பித்தான்.அவளும் அவனுக்கு கொடுக்க மறுக்காமல் உண்ண ஆரம்பித்திருந்தான்.

அறையை விட்டு அவள் நகருவதாய் இல்லை என்பதை உணர்ந்தவனுக்கு மதிய பொழுது முழுதுமே தன்னவளோடு கதைபேசி கையளந்து தலைகோதி சிறு சிறு சில்மிஷம் செய்து அழகாய் கழிந்தது.

மாலையில் ஒரு வழியாய் அறையை விட்டு வெளியே வந்தவளிடம் சாரதாவோ ராகவனோ ஒன்றும் கேட்காமல் இருந்ததே நிம்மதியாய் இருக்க ஓரளவு சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆனாலும் சாரதாவிற்கு அவளின் மலர்ந்த முகமே அனைத்தையும் தெளிவாய் உணர்த்தியிருந்தது.விரைவிலேயே வீட்டில் மழலைச் சத்தம் நிறைந்திருக்க வேண்டுமென மனமாற வேண்டிக் கொண்டார்.

அதன் பின்னான நாட்கள் சொர்க்கத்தின் வாயிலையே கண்முன் காட்டுவதாய் இருந்தது திஷானிக்கு..அபினவ் குழந்தையென அவளை சுற்றி வந்தான் என்றே கூற வேண்டும்.அதே நேரம் அதன் பிறகு  தாம்பத்திய மலர் தானாகவே ஒருமுறை மலராத வரை அவளை மீண்டும் எதற்கும் அவன் வற்புறுத்தவில்லை.அவன் காதலும் இம்மியளவும் குறைந்ததாய் தெரியவில்லை..

அவளும் அவளவனின் கதகதப்பு தன்மீது இருந்துக் கொண்டே இருப்பதையே விரும்பினாள்.வார இறுதிகளில் நிறைய நிறையவே ஊரைச் சுற்றினார்கள்.எந்தவித தயக்கமும் ஒதுக்கமுமின்றி அவனின் சரிபாதியாய் சந்தோஷமாகவே இருந்தாள்.

அனைத்தும் சரியாய் சென்ற நேரத்தில் தான் இறைவன் தன் ஆட்டத்தை துவங்க எண்ணினாரோ!

திஷானிக்கு அன்று விடுமுறை தினம் ஆதலால் பூஜையறையில் விளக்கிற்கு மாலை அணிவித்து பூஜைக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.விளக்கேற்றும் நேரம் வந்தமர்ந்த சாரதா பூஜையை முடித்துவிட்டு எழுந்தவளிடம்,

“ஏன்டா இந்தமாசம் நீ இன்னும் வீட்டுக்கு தூரமாகலையோ?!போன வாரமே நாள் தானடா உனக்கு?”,என்றவர் சில நாட்களாக தெரியும் மருமகளின் முகவாட்டத்தையும் அவளுக்கு உடம்பு சரியில்லை என்றுகூறிய நாளையும் மனதில் வைத்து அனைத்தும் சந்திக்கும் புள்ளி ஒன்றாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒருவித எதிர்பார்ப்போடே அவளிடம் இதைக் கேட்டார்.

ஏதோ நினைவில் இருந்தவளுக்கோ இதை எதையும் கவனிக்க தோன்றாமல் போக,”ஆமா அத்தை என்னனு தெரில..எப்போவாவது இப்படி ஆகும்”,என்று சாதாரணமாய் கூறிவிட்டு நகர்ந்தாள்.

அறைக்குள் வந்தவள் வாட்சப்பில் வந்த வீடியோ என்னவென பார்க்க அதில் ஒரு ஆறு மாத  குழந்தை தாயின் மிரட்டலுக்கு பயந்து கண்நிறைந்த நீரோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.அந்த தாயும் விளையாட்டுக்குத்தான் செய்தார் என்றாலும் ஏனோ திஷானிக்கு மனம் ஒப்பவேயில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.