(Reading time: 17 - 34 minutes)

ந்தை மேல் இருக்கும் கோபத்தில் சாத்விக்கிற்கு வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை. இருந்தாலும் தன் அன்னை சுமதி இங்கு இருப்பதினால் மட்டுமே அவன் இங்கு இருக்கிறான். இல்லை எப்போதோ வேறு வீட்டிற்கு சென்று குடியேறியிருப்பான்.

இதோ இப்போதும் இந்த இரவு நேரத்திலும், இன்று அவன் வீடு திரும்புகிறான் என்று தெரிந்து உறங்காமல் அவனுக்காக காத்திருந்தார்.

பன்னீர் காரை அதன் இருப்பிடத்தில் நிறுத்திவிட்டு அங்கே அருகில் அவருக்காக கொடுக்கப்பட்ட அவுட் ஹவுசிற்கு சென்று விட, வீட்டிற்குள்ளே வந்த சாத்விக் தனக்காக காத்திருக்கும் அன்னையை பார்த்து,

“என்னம்மா நான் வந்து சாப்பிட்டு தூங்கப் போறேன்.. எதுக்காக தூங்காம முழிச்சிக்கிட்டு இருக்கீங்க..?” என்றுக் கேட்கவும்,

“இத்தனை நாள் உன்னை பார்க்கலல்ல, இன்னைக்கு தான் வர, அதான் முழிச்சிருந்து பார்க்கலாம்னு, அப்பாக்கூட அவன் வர எவ்வளவு நேரம் ஆகுமோ தூங்குன்னு சொன்னாரு, ஆனா எனக்கு தான் தூக்கம் வரல..” என்றார்.

அதுவரை அன்னையை கண்டு கொஞ்சம் இலகிய மனம் தந்தையை பற்றி சொன்னதும்,

“மத்தவங்களுக்கு வேதனையை கொடுத்திட்டு அவர் நிம்மதியா தூங்கறாரா?” என்று அவன் திரும்ப கோப மனநிலைக்கு மாறி கேட்கவும்,

சுமதிக்கு புரியாமல் “என்னப்பா..” என்றுக் கேட்டார்.

“எந்த விஷயத்தை தான் அவர் என்னோட விருப்பத்துக்கு செய்றார்.. இன்னைக்கு என்ன செஞ்சார் தெரியுமா ம்மா..

சுஜனா இந்த நைட் நேரத்துல என்னைப் பார்க்க ஏர்ப்போர்ட்க்கே வந்துட்டா..” என்றதும்,

“யாருப்பா அந்த சுஜனா?” என்று தெரியாமல் கேட்டார்.

அவனுக்காவது சுஜனா அவன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் என்று சொன்னார். ஆனால் தன் அன்னையிடம் அந்த தகவலை கூட அவர் தெரிவிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. எப்போதும் இப்படித்தானே, எந்த ஒரு விஷயத்திலும் அவரே தான் முடிவெடுப்பார். மனைவியிடமோ மகனிடமோ கேட்க வேண்டும் என்று அவர் என்றுமே நினைத்ததில்லை.

சுமதி என்றுமே வாயில்லாப்பூச்சி, கணவன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டியே பழகிவிட்டாள். எதற்கும் எதிர்த்து கேள்வி கேட்டதில்லை. அதுவே அவருக்கு சாதகமாகிவிட்டது. அன்னையின் அரவணைப்பிலேயே வளர்ந்ததாளோ என்னவோ, சிறு வயதில் அவனும் தந்தை சொல்வதற்கு சரியென்று தலையசைத்தவன் தான், அதுவே இப்போதும் நடக்க வேண்டும் என்று வசந்தன் எதிர்பார்க்கிறார். ஆனால் இந்த முறை அதை நடக்க விடக் கூடாது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டான்.

இன்னும் சுமதி அவனது பதிலை எதிர்பார்த்தப்படி நிற்க, “சுஜனா தான் அப்பா எனக்காக பார்த்திருக்கும் பொண்ணு.. அவளை இதுவரை பார்த்ததில்லை என்பதால சுஜனாவை எனக்கு யாருன்னே தெரியல.. இதுல எனக்கு தெரிஞ்சவரோட அவ நிக்கறப்போ அது யாருன்னு நான் அவர்க்கிட்டேயே கேக்கறேன்..

அவருக்கு சுஜனாக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சிருக்கு, ஆனா எனக்கு தெரியல.. அந்த நேரம் சுஜனாக்கு அந்த சூழ்நிலை எப்படி இருந்திருக்கும்னு தெரிஞ்சுக்கோங்க..

எல்லா விஷயத்திலேயும் அவரோட முடிவுக்கு தலையாட்டினேன் ஓகே, ஆனா என்னோட கல்யாண விஷயத்துல கூட இப்படியே நடந்தா எப்படி? என்னை கேக்காமலேயே ப்ரஸ்க்கு நியூஸ் கொடுக்கிறது, எனக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சும் சுஜனாவை என்கூட பேச வைக்கிறது, இதெல்லாம் என்னம்மா?” என்று கோபமாக கேட்டபோது, உண்மையிலேயே அவன் அன்னையிடம் அதற்கு பதில் இல்லை.

அது தெரிந்துமே அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்தவன், அமைதியாக குளித்துவிட்டு வருவதாக சொல்லி அறைக்கு வந்துவிட்டான். உண்மையிலேயே அவன் மனதிற்குள் இப்போது இருக்கும் பயம், யாதவி அந்த செய்தித் தாள்களில் வந்த செய்தியை படித்திருப்பாளா? அதை படித்து அவள் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? என்ற சிந்தனை தான் பெரிதாக தெரிந்தது.

ஏற்கனவே அவனை ஏமாற்றுக்காரன் என்று தான் நினைத்திருப்பாள். அதனால் தான் ஒதுங்கியிருக்கிறாளோ என்னவோ, இதில் இந்த செய்தியை படித்தால், தன்னை ஒரு அயோக்கியன் என்று நினைத்து அவள் சுத்தமாக வெறுத்துவிடுவாளோ என்று அவனுக்கு மிகவுமே பயமாக இருந்தது. மற்றப்படி அவன் உள்ளுணர்வு அவளுக்கு எதுவும் தவறாக நடந்திருக்காது என்று நம்புவதால், அந்த தைரியத்தோடு தான் அவன் நடமாடிக் கொண்டிருக்கிறான்.

“எங்க இருக்க யாதவி? என்னைப்பற்றி நியூஸ் பேப்பர்ல வந்த நியூஸை நீ பார்த்திருப்பியா? என்னை வெறுத்துட மாட்டியே..” என்று தனக்குள்ளேயே அவளிடம் பேசிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.