(Reading time: 13 - 26 minutes)

நாராயணனின் எண்ணங்கள் பயத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க, வசந்தும் அமேலியாவும் காதல் உலகில் சிறகடித்து பறக்கத் தொடங்கினார்கள். உடல் மட்டும் அங்கிருக்க உள்ளங்கள் மகிழ்ச்சி கடலில் நீந்திக்கொண்டிருந்தன.

வசந்த் மெதுவாக அமேலியாவின் கைகளை பிடித்தான். அமேலியா பயந்தாள். கைகளை உதறினாள். வசந்தின் கண்கள் எல்லோரையும் ஒரு முறை நோக்கிவிட்டு பின் மீண்டும் அமேலியாவின் கைகளை பிடித்தான். இந்த முறை அவள் தடுக்கவில்லை. பயத்தோடு ஒரு முறை சுற்றி நோக்கிவிட்டு அமைதியானாள்.

"அமேலியா" மேகலா அதட்டலோடு அழைக்க அமேலியா அதிர்ந்தாள். நிமிர்ந்து மேகலாவை பார்த்தாள்.

"என்ன சாப்பிடாம இருக்க? சீக்கிரம் சாப்பிடு" என்று சைகையால் விளக்கினாள்.

அமேலியா சாப்பிட முயன்றாள். மெதுவாகவே சாப்பிடு என வசந்தின் பிடி அவளுக்கு கட்டளையிட என்ன செய்வதென்று அவள் விழித்தாள்.

இதுவரை இரவில் குடும்பத்தோடு வெளியே சென்று உண்டது கிடையாது. வசந்தோடு சில நாட்கள் இரவில் கழித்தாலும் இன்று கிடைக்கும் சந்தோசம் அன்று ஏனோ வாய்க்கவில்லை.

சிறுவயதில் பெற்றோருடன் என்றோ இரவில் சாப்பிட்டதாக அவளுக்கு நினைவு. அது கனவாக கூட இருக்கலாம். திடீரென அவளுக்கு பெற்றோரின் நினைவு வரவே மெதுவாக சாப்பிட்டதையும் நிறுத்தினாள். வசந்தின் பிடியையும் விலக்கினாள்.

வசந்த் ஆச்சர்யமடைந்தான். அமேலியாவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் சோகமே உருவாக இருந்தது. திடீரென எதற்காக அவள் வருந்துகிறாள் என வசந்திற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஒருவேளை தன்னால் தானோ? வெளி இடத்தில் தான் நடந்துகொண்டது தவறு என எண்ணுகிறோளோ என நினைத்தான்.

யாரும் பார்க்காத நேரத்தில், என்ன ஆச்சு என்பது போல் சைகையால் கேட்க. அவள் வசந்தின் முகத்தைப் பார்த்து எதுவும் பேசாமலிருந்தாள்.

"வசந்த்" நாராயணன் அழைத்தார்.

திடுக்கிட்ட வசந்த் சுதாரித்தான். "என்னப்பா?"

"விளம்பரப் படம் எடுக்குறேன்னு சொன்னியே, அதைப் பத்தி எந்த செய்தியும் காணும்?"

எதை மறக்க அவன் துடித்துக்கொண்டிருந்தானோ அதையே நாராயணன் நினைவுபடுத்த வசந்தும் வெறுப்படைந்தான். பதிலேதும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டான்.

"என்ன பதிலையே காணும்?" நாராயணன் மீண்டும் கேட்டார்.

"கதையை முடிக்க இன்னும் சில நாள் ஆகும்ப்பா"

"அன்னைக்கு கதையை சொல்லி தான வாய்ப்பு வாங்குன. திரும்ப கதையை தயார் செய்யணும்னு சொல்லுற"

வசந்த் பொறுமையிழந்தான். இருந்தும் வரம்பு மீறாமல் பொறுமை காத்தான். "சினிமா இண்டஸ்ட்ரினா அப்படி தான்ப்பா எல்லாத்தையும் மாத்திக்கிட்டே இருக்கணும்"

நாராயணன் வசந்தை பார்த்தார். "இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பீல்டுல நீ இருக்கணுமா? இதுல எங்க நிம்மதியிருக்கும்னு சொல்லு. நடக்குமா நடக்காதான்னு பயத்துல நீ இருக்க"

வசந்த் சாப்பிடுவதை நிறுத்தினான். "அப்பா, பிளீஸ்! இதைப் பத்தி இப்போ பேச வேணாமே"

"வேற எந்த நேரத்துல பேசணும்பா? உன் போக்குல விட்டதால தான் நீ இன்னும் தொடங்காம இருக்க. உன் கூட படிச்ச பசங்க எல்லாம் செட்டில் ஆகிட்டு இருக்காங்க. ஆனா நீ?"

"ஐயோ! ரெண்டு பேரும் சண்ட போட்டு அமேலியாவ மாட்டிவிட்டு நம்மளையும் மாட்டிவிட்ருவிங்க போல" என மேகலா இருவரையும் தடுக்க அவர்கள் அமைதியானார்கள்.

யாருக்கும் சாப்பிட விருப்பமில்லை. சரி கிளம்பலாம் என முடிவுக்கு வந்து கிளம்ப ஆயத்தமானபோது வசந்தின் தோள்களில் ஒரு கை விழுந்தது.

சந்த் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான். அவனுக்கு மேலும் அதிர்ச்சி. அவனுக்கு மட்டுமல்ல அவன் குடும்பத்தாரும் ஒரு கணம் மிரட்சியடைந்தனர்.

"என்ன வசந்த் நல்லாயிருக்கியா?" என்று தோளில் கை போட்டபடி அமர்ந்தார் விளம்பர கம்பனியின் ஓனர்.

வசந்திற்கு ஆத்திரமும் வெறுப்பும் ஒரு சேர வந்தது. தன் குடும்பம் மட்டும் அங்கே இல்லாமலிருந்திருந்தால் இந்நேரம் அவரை உண்டு இல்லை என்று செய்திருப்பான். ஆனால், இப்பொழுது எதுவும் செய்ய இயலாதவனாய் பொங்கி வரும் கோபத்தை கட்டுபடுத்த முடியாதவனாய் அமர்ந்திருந்தான்.

"வசந்த் உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன். ஏன் பேயறைஞ்ச மாதிரி பாத்துட்டு இருக்க? ஓகே, நானே என்னை அறிமுகப்படுத்திக்கிறேன்" என எல்லோரையும் பார்த்தவர், "என் பேரு ஃப்ராங்க்ளின். விளம்பர கம்பனியின் ஓனர்" என்றார்.

"வாவ்! அப்போ உங்க கம்பனியில தான் மாமா படம் எடுக்குறாரா?" என நிலா துள்ளளோடு கேட்டாள்.

ஃப்ராங்க்ளின் சிரிப்பை மட்டுமே பதிலாக்கி வசந்தை நோக்கினார்.

"வசந்த், உன் பேமிலிய அறிமுகப்படுத்தமாட்டியா?"

திடுக்கிட்ட வசந்த், நிலமையை சரி செய்ய முன் வந்து, "சாரி சார். இது என் அப்பா. பேரு நாராயணன் அப்புறம் என் அக்கா மேகலா இது அக்காவோட பொண்ணு"

"என் பேரு நிலா" என கூறிய நிலா சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.