(Reading time: 13 - 26 minutes)

ஷ்யாமிடம் திரும்பிய மைதிலி, “என்ன ஷ்யாம் இது? அவளைப் பற்றித் தெரியாதா? இன்றைக்குக் கூட சேகர்க்கு உங்க பிரைட் ரைஸ்ன்னா ரொம்ப பிடிக்கும்மா. அவருக்கும் சேர்த்து ஒரு பாக்ஸ் வைங்கன்னு சொல்லியிருந்தா” என்று வருத்தப் பாடவும்,

“மச்.  விடுங்கம்மா” என்று மட்டும் கூறினான்.

ஆனால் மித்ராவோ அவளின் பிரெண்ட்டைத் திட்டினதில் ஷ்யாம் அவளின் கணவன் என்பது கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்க,

“ஏன் அத்தான்? எதுக்கு சுமியைத் திட்டினீங்க? அவள் எப்போதும் ஜாலியா பேசுறது தானே. “ என்று ஷ்யாமைக் கேள்விக் கேட்டாள்.

“ஏன் உன் பிரெண்டச் சொன்னால், உனக்குக் கோபம் வர மாதிரி தானே, எனக்கும் என் பிரெண்டச் சொல்லும் போது வரும். அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு எங்கிட்ட பேசறத விட்டுட்டு , உன் வேலை என்னவோ அதை மாட்டும் பார்த்துட்டுப் போ” என்று சுமித்ராவிடம் பேசியதை விடவும் கடுமையாகப் பேசவும், ஷ்யாமின் வீடு அன்று இரண்டாம் முறையாக ஸ்தம்பித்தது.

மைதிலி “ஷ்யாம் “ என்று அதிர்ச்சியோடுக் கூற வர, ராம் கையைப் பிடித்துத் தடுத்தான்.

ராமின் முகம் பார்க்க, அவன் வேண்டாம் என்பது போலே தலையசைக்கவும், அப்படியே நின்றாள்.

மித்ராவிற்கோ ஷ்யாமா தன்னைத் திட்டியது என்ற அதிர்ச்சியில் அவன் முகம் தவிர எதையும் பார்க்கவில்லை.

எல்லோரும் தன்னைப் பார்க்கவும், அதற்கு மேல் சாப்பிடத் தோன்றாமல், எழுந்து சென்று விட்டான் ஷ்யாம்.

மித்ரா அப்போதும் அப்படியே அமர்ந்து இருக்கவும், மைதிலி அவளின் தோளைத் தொட, மெதுவாக எழுந்துக் கைக் கழுவிக் கொண்டு வந்தவள், நேராக தங்கள் அறைக்குச் செல்லாமல், வெளியே தோட்டத்திற்குச் சென்று விட்டாள்.

ஷ்யாமும் அறையிலிருந்து வெளியில் வந்தவன், யாரையும் பார்க்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் கார் வெளியில் செல்வதைப் பார்த்த மித்ராவோ, ஒன்றும் தோன்றாமல் அமர்ந்து இருந்தாள்.

மைதிலி ராமிடம் “ஏன் ராம்? என்னைத் தடுத்தீங்க? ஷ்யாம் கிட்டே என்னன்னு கேட்டு இருப்பேனே? என்று ஆற்றாமையுடன் கேட்டாள்.

“இல்லை மிது. அவன் கிட்டே ஏதோ சரி இல்லை. சுமித்ராவைத் திட்டியதே அவன் இயல்பு கிடையாது. மித்ராவைப் பேசியதோ அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம். அவன் இப்படி செய்து இருக்கிறான் என்றால், ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று அர்த்தம். கொஞ்சம் ஆற விட்டால் அவனே அதை சரி செய்து விடுவான்.”

“ம்ச். சுமித்ராவாவது அவன் பேசியதை மறந்து விடுவாள். ஆனால் மித்ரா? சாதரணமாகவே அவள் பயந்த சுபாவம் கொண்டவள். இன்னும் அவள் இயல்பாக இருக்கிறாள் என்றால், அது ஷ்யாமிடம் மட்டுமே. மற்றபடி எல்லோரிடத்திலும் ஒரு பயத்தோடவே தான் இருப்பாள். இப்போது அவனிடமும் அதே பயம் கொண்டாள் என்றால், அவளின் இயல்பே மறைந்து விடுமே”

“எனக்கு ஷ்யாமை விட, மித்ரா பேசியது தான் ஆச்சர்யம். பழைய மித்ராவாக இருந்தால், அவன் சுமியைத் திட்டியதற்கு அவளும் சுமித்ராவோடு எழுந்து சென்று இருப்பாள். ஆனால் இருந்து அவனிடத்தில் கேள்வி கேட்ட இந்த மித்ரா புதிது”

“ம். நீங்கள் சொல்வதும் சரிதான். மித்ராவின் இந்த மாற்றமும் நல்லதற்கே. தொட்டதுக்கு எல்லாம் பயப்படும் சுபாவம் மாறி இருக்கிறது தான். அது அவள் வேலையில் நன்றாகவேத் தெரிகிறது.”

“ஹம்ம். நீ எதற்கும் மித்ராவைப் பார்த்துப் பேசு. தேவைப்பட்டால் அவளைச் சமாதனப் படுத்து”

“சரிங்க. நீங்களும் ஈவ்னிங் முடிஞ்சா சுமியச் சமாதனப் படுத்திக் கூட்டிட்டு வாங்க”

“சரி மைதிலி. நானும் ஆபீஸ் கிளம்பறேன்”

ராம் ஆபீஸ் கிளம்பவும், மித்ராவைத் தேடி மைதிலி தோட்டத்திற்கு வந்தவள்.

மைதிலி மித்ராவின் தோள் தொட்டு,

“மிது “ என்றழைத்தாள்.

அதில் சுதாரித்துத் திரும்பிய மித்ரா,

“ஆபீஸ்க்கு கிளம்பலாமா அத்தை” என்று வினவினாள்.

“உனக்கு ஓகேன்னா கிளம்பலாம்” என்றார் மைதிலி.

“எனக்கு என்ன அத்தை?

“இல்லை . ஷ்யாம் திட்டினது பற்றி?

“சுமித்ராவும் தான் திட்டு வாங்கினாள். அதை அப்படியே விட்டு விட்டு ஹாஸ்பிடல் கிளம்பி விட்டாள். நானும் அதையே செய்கிறேன்” என்றவள்,

“கொஞ்சம் ரெப்ரெஷ் செய்து பத்து நிமிஷத்தில் வந்துர்றேன் அத்தை” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.