(Reading time: 7 - 14 minutes)

“இங்க இன்னும் நிறைய சிறு சிறு தீவுகள் இருக்காம் தாத்தா. அங்கே யாரும் போனதே இல்லையாம். பேய் பிசாசு கதை எல்லாம் கூட கேட்டுட்டு வந்தேன்” தேன்மொழி அவள் அறிந்து வந்ததை தாத்தாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

“ஒரு ஆறு மாசம் இங்கே உள்ள ஏதாவது டைவிங் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்” பேத்தி சொல்லவும் அவள் முடிவை சந்தோஷமாக வரவேற்றார் தாத்தா.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதே நேரம் பத்து நாட்களும் பத்து நிமிடங்களாக கரைந்து போயின வானதிக்கும் இளங்கோவிற்கும்.

திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் இப்படி எந்த வித பொறுப்புகளும் இல்லாமல் அவர்கள் இருவர் மட்டுமாக தனித்து இருந்ததே இல்லை என்பதால் இருவரும் நேற்று தான் மணம் புரிந்தவர்கள் போலவே உணர்ந்தனர்.

அந்தி மாலை நேரத்தில் கடற்கரை மணலில் கணவனின் அணைப்பில் அவன் தோள் மீது தலை சாய்த்து அந்த இனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தவள் திடீரென தலையை நிமிர்த்தி விலகி இளங்கோவின் முகம் பார்த்தாள்.

“நீங்க ஸ்கூபா டைவிங் போய்ட்டு வந்தீங்களே. பாப்பா கூட வாய் வழியா மூச்சு விடணும்னு அந்த டிபூய் பத்தி சொன்னாளே. அது திடீர்னு கடலுக்குள் வேலை செய்யலைனா என்னாகும்” என மனைவி கேட்க இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வியை இளங்கோ எதிர்ப்பார்க்கவில்லை.

“கூட பயிற்சியாளர் இருந்தாங்க. அவங்க கிட்ட இருக்கும் ஆகிச்ஜன் டியூப் வச்சு ரெண்டு பேரும் சுவாசித்து உடனே மேலே வந்திடலாம்” பொறுமையாக மனைவிக்கு விளக்கம் கூறியவன் திடீரென இந்த சந்தேகத்திற்கு என்ன காரணம் என்றும் வினவினான்.

“நீங்க பத்து அடி வரை தான் போய் வந்தேன்னு சொன்னீங்க. பாப்பா நூறு இருநூறு அடி ஆழம் வரை போவான்னு தாத்தா அன்னிக்கு சொல்லிட்டு இருந்தார். அதுவும் அவ தனியா தானே போறா” என்றவளின் உடல் நடுக்கம் கொண்டது.

வானதியின் தோளில் கரம் பதித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் இளங்கோ.

“அவ ஆயிரம் அடி வரை கடலுக்குள் போகக் கூடிய அதிநவீன டைவிங் சூட், ஆக்சிஜன் டாங்க் எல்லாமே தருவிச்சாச்சு. அங்கே இருக்கும் டைவர் அசோசியேஷன்ல பேசிட்டேன். மெடிகல் டீம் பத்தியும் விசாரிச்சிட்டேன்” அவன் அனைத்தையும் சொல்ல சொல்ல வானதியின் மனம் நிம்மதி அடைந்தது.

“என்கிட்டே ஏன் முன்னாடியே சொல்லல. இவ்வளவு பயந்திருக்க மாட்டேன்ல” இப்போது செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

“இந்த ஏற்பாடு எல்லாம் செய்யாம பாப்பாவை அங்கே விட்டுட்டு வந்திருப்பேனா” அவன் பதில் கேள்வி கேட்டான்.

“இருந்தாலும் பயமா இருக்கு இளங்கோ” ஏனோ அவள் உள்ளுணர்வு சமாதானம் கொள்ள மறுத்தது.

“எப்போவுமே நீ தான் முதல் ஆளா பாப்பாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருப்ப. இப்போ என்னாச்சு” மனைவியின் தலையை மெல்ல வருடிக் கொடுத்து அவளின் பயத்தைப் போக்க  முயற்சி செய்தான்.

வானதியின் நினைவில் கடலை அப்படி ஒரு காதலோடு பார்த்த தேன்மொழியின் முகமும் அவளது பேச்சும் வந்து வந்து போயின.

அதைப் பற்றி கணவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பம் கொண்டு அவனையும் கலவரப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

கணவன் செய்த ஏற்பாடுகளில் தேன்மொழி பாதுகாப்பாய் இருப்பாள் என்று நிம்மதி கொண்டாள்.

தனது தமையன் செய்த ஏற்பாடுகளை அறியாத தேன்மொழி இந்து சாகரத்தின் அலைகளில் ஆனந்தமாய் மிதந்து கொண்டிருந்தாள்.

அத்தனை ஏற்பாடுகளும் செயலற்று போகும் நிலை வரும் என்றோ அப்படி செயலிழந்து போன நிலையை யாவருமே அறிய முடியாத தருணம் வரும் என்றோ அப்போது யாரும் நினைத்தும் பார்க்கவில்லை.

தொடரும்

Episode # 08

Episode # 10

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.