(Reading time: 14 - 27 minutes)

மதுமிதாவிற்கு தன் தாயிடம் பிடித்த மிகச் சிறந்த ஒரு குணம் அது எதை கேட்டாலும் ஒளிவு மறைவின்றி சட்டென நினைத்ததை கூறிவிடுவார்.

“எதை நினைச்சும்மா?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லிட முடியாது மதும்மா..அது ஒரு மாதிரியான ஸ்ட்ரெஸ்..ஏன் எதுக்குனு சொல்ல முடியாத ஒரு விஷயம்.சம்மந்தமே இல்லாம கல்யாணமே பண்ணிருக்க வேணாமோ அப்பா அம்மாவோட குழந்தையாவே இருந்துருக்கலாமோனு தோணும்.அப்பறம் ஒரு தடவை அழுது தீர்த்துட்டா பாரம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.மத்தபடி கஷ்டபடுறேன்..அப்பா கொடுமை படுத்துராருனு எல்லாம் கிடையாது.”

“ம்ம் பொதுவா ஒரு பொண்ணு புருஷன்கிட்ட எதிர்பார்க்குறது என்னம்மா?”

“அது ஒவ்வொருத்தரை பொறுத்து மாறும் மது..பொதுவான ஒரு விஷயம்னு பார்த்தா அன்பா பாத்துக்கணும் நமக்கான நேரத்தை ஒதுக்கணும் இதுதான்.என்னை கேட்டா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருக்குறது தான் நல்லதுனு சொல்லுவேன்.

வெள்ளை காகிதமா மனசை வச்சுக்கணும் நமக்கானவரின் குணங்களையும் பழக்க வழக்கத்தையும் அதில் எழுதிடணும் ..வாழ்க்கையில பாதி பிரச்சனை அப்போவே முடிஞ்சுரும்.”

“ஆனா இதெல்லாம் நடக்குற விஷயமா மா..சாதாரணமாவே ஆயிரம் எதிர்பார்ப்பு இருக்கும் பொண்ணுகளுக்கு அதுலயும் தனக்கு வரப் போற புருஷன் விஷயத்துல எப்படிமா எதிர்பார்க்காம இருக்க முடியும்.ஒரு பாட்டோ படமோ பார்த்தா கூட அந்த ஹீரோ மாதிரி நம்மை பாத்துக்கணும் கேர் பண்ணிக்கனும்னு நினைக்க மாட்டாங்களா?அவ்வளவு ஏன் நானே கூட அப்படி தான்..”

“ம்ம் நீ சொல்றது தான் எதார்த்தம் ஆனா அதையும் மீறிய பக்குவம் வரணும்..இப்போனு இல்ல எல்லா காலத்துலயுமே ஒரு சினிமாலயோ கதையிலயோ வர ஹீரோ மாதிரியான ஒருத்தர் தான் புருஷனா வரணும்னு நினைப்பாங்க..

ஆனா அப்படியே எல்லாருக்கும் நடக்குமா சொல்லு..ஆனா அந்த காலத்திலே பிடிக்காத வாழ்க்கையா இருந்தாலும் குழந்தைகளுக்காக அனுசரிச்சு போய்ட்டு இருந்தாங்க.ஆனா இப்போ அப்படியா பிடிக்காத மாமியார் கைப்பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி கணவன் மனைவிகுள்ள அதிருப்தி வந்துட்டா ஒருத்தர் பண்ற எல்லாமே இன்னொருத்தங்களுக்கு தப்பா தான் தெரியும்.

மனகசப்பு அதிகமாகும்..சண்டை வரும் நிம்மதி போகும் கடைசில விவாகரத்து தான் ஒரே முடிவுனு பிரிஞ்சு போய்ட்றாங்க.பொறுமையும் பக்குவமும் ரொம்பவே குறைஞ்சு போச்சு இந்த காலத்துல..”

“என்னம்மா இப்படியெல்லாம் சொல்லி பயமுறுத்துற?கல்யாணம்னா இவ்ளோ கஷ்டமா..”

“சின்ன குழந்தை மாதிரி பேசாத மதும்மா..ஏற்றம் இறக்கம் இருந்தா தான் வாழ்க்கை.24 வருஷமா அம்மா அப்பா தான் உலகம்னு இருந்துட்டு திடீர்னு புது குடும்பம் புது உறவுகள்னு வாழ்க்கையையே மாத்துறது என்ன சாதாரண விஷயமா சொல்லு..

எல்லாத்தையும் சமாளிச்சு குடும்பத்தை தூக்கி கொண்டு வர்றதுதான் நமக்கான கடமையே..கஷ்டம் தான் ஆனா முடியாத காரியம் இல்ல கண்டிப்பா..”

“என்னென்னவோ சொல்லற ஒண்ணும் புரியல..”

“ஆளு தான் வளர்ந்துருக்கியே தவிர ஒண்ணும் தெரில டீ உனக்கு..இப்போ உதாரணத்துக்கு சொல்றேன் படத்துல புதுசா கல்யாணம் ஆன ஜோடினா எப்படி காட்டுவாங்க?”

“ம்ம் ஹனிமூன் டூயட்னு அவங்களுக்கே அவங்களுக்கான நேரம் இதை தான்..”

“கரெக்ட் ஆன நிஜத்துல எல்லார் வாழ்க்கையும் அப்படி இருக்குமானு கேட்டா கண்டிப்பா கிடையாது தான்.இப்போ என்னையே எடுத்துக்கோ கல்யாணம் முடிஞ்சு மாமியார் மாமனார் பாட்டினு கூட்டு குடும்பத்துக்கு தான் வந்தேன்.அப்படி இருக்கும் போது உங்கப்பா எப்பவுமே என் பின்னாடியே சுத்திட்டு இருக்கணும்னு நினைக்க முடியுமா..இல்ல எப்போ பார்த்தாலும் வெளில கூட்டிட்டு போவாங்கனு சொல்ல முடியுமா..

ஒரு பொண்ணுக்கு கண்டிப்பா அதுகூட ஏமாற்றம் தான்.ஆனா அதையே பெரிய விஷயமாக்கி தனிக் குடித்தனம் போறளவு எடுத்துட்டு போக கூடாது..அப்பா வீட்டுக்கு ஒரே பையன் அப்படியிருக்க அவரை அவங்க குடும்பத்துல இருந்து பிரிச்சு பெரியவங்க மனசை கஷ்டபடுத்தனுமா சொல்லு..

எனக்கு நிஜமாவே மாமியார் கொடுமை மாமனார் கொடுமையெல்லாம் இல்ல அதே நேரம் அவங்க ஒண்ணு ஒண்ணுத்துக்கும் உங்க அப்பாவ தான் எதிர்பார்ப்பாங்க..என்னை எங்கேயாவது கூட்டிட்டு போறேன்னு சொன்னாருனு நா கிளம்ப தயாரானா சில நேரத்துல அவங்க பாட்டிக்கு உடம்பு முடியாம போய்டும் ஹாஸ்பிட்டலுக்கு ஓடணும்.

இதெல்லாம் ஒருவிதத்துல நம்ம கடமை தான் மது..பெரியவங்களுக்கு நாம செய்றதுனால ஒருவிதத்துலயும் குறைஞ்சு போய்ட மாட்டோம்.இப்போ உனக்கே நாளைக்கு நாத்தனார் இருக்கா அவளுக்கு கல்யாணம் குழந்தைனு ஆயுசுக்கும் அண்ணணா உன் புருஷன் பண்ண வேண்டிய கடமைகள் நிறைய இருக்கும்.

அது எல்லாத்துக்கும் நீதான் பக்கபலமா இருக்கனும்.அன்பால எல்லாரையும் உன் கைக்குள்ள வச்சுகணுமே தவிர புருஷனை மட்டும் கைகுள்ள போட்டுக்கோனு எப்பவுமே நா சொல்ல மாட்டேன்.உனக்கு உன் புருஷன் மட்டும் போதும்னு நீ நினைக்கலாம் ஆனா உன் குழந்தைக்கு தாத்தா பாட்டி அத்தைனு அத்தனை உறவும் தேவை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.