“ம்ம் வீண் வாதம் எதற்கு நான் கூறுவதற்கு நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு தேவையான தகவல்களை நான் தருகிறேன்..அவ்வளவே”
அதரம் வளைத்துப் புன்னகைத்தவன் அதற்கு மேல் யோசிக்காது அவளை விடுவித்து வாளை அவளிடத்தில் தூக்கியெறிந்தான்.அத்தனை வேகமாய் எறிந்த போதும் அவள் அதை சரியாய் பிடித்தவிதத்தை மனதினுள் மெச்சிக் கொண்டாலும் தன்னை ஒருவன் வெல்லுவதா, என்றும் நடக்காத விடயம் என்று தீர்மானித்தவனாய் கூடாரத்தை விட்டு வெளியே வந்தான்.
சிவகங்காவதிக்கோ மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.நாட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஒருபுறம் எனில் தன்னை இவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவே இந்த வாள் வீச்சில் அவனை வென்றாக வேண்டியது அவசியம்.அனைத்தும் கணப் பொழுதில் மூளையை ஆக்கிமித்திருக்க அதற்குள் பின்னிருந்து ஒருவன் அவளை வெளியே செல்லுமாறு தள்ளினான்.
அத்துனை வீரர்களும் சூழ்ந்து நிற்க இஷான் கையிலேந்திய வாளோடு அவளையே நோக்கியவாறு நின்றிருந்தான்.நிர்மலமான முகம் அதிலிருந்து அவன் என்ன யுக்தியை கையாளப் போகிறான் என்று அணு அளவும் கணிக்க இயலவில்லை சிவகங்காவதியால்.
இத்தனை நாள் நடந்த வாள் வீச்சு போட்டிகளில் அவளின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.நாம் என்ன யுக்தியை கையாளப் போகிறோம் என்பதை விட எதிராளியின் யுக்தியை அறிந்து விட்டால் அதை முறியடிக்க வேண்டிய வழியை எளிதில் கண்டு கொள்ளலாம்.
இத்துனை நாளும் அனைவரும் செய்த பிழையை இன்று தன் மனக் குழப்பத்தால் சிவகங்காவதி செய்தாள்.தன் முக பாவத்தால் தன் யுக்திகளை கணித்துவிடும் சலுகையை இஷானிற்கு கொடுத்திருந்தாள்.
போட்டி ஆரம்பமாகத் தொடங்கிய நொடி அத்தனை ஏளனப் பேச்சுகளும் பார்வைகளும் அடங்கி அந்த இடமே அமைதியாகிவிட்டிருந்தது.முதல் இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே இஷானின் கையில் சிறு கீறலிட்டிருந்தாள் சிவகங்காவதி.
அடுத்தடுத்த நிமிடங்கள் பரபரப்பாய் நகர தன் முதுகில் பட்டிருந்த காயத்தின் வலி மெது மெதுவாய் அதிகரிக்க ஆரம்பித்திருந்து அதற்குள் கிடைத்த சந்தர்பத்தை இஷானும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற ஆரம்பித்திருந்தான்.
கண்களின் காட்சிகள் மறைக்க ஆரம்பிக்க தடுமாற ஆரம்பித்தவளின் வேகமும் குறையத் தொடங்கியிருந்தது.அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன் போட்டியிடுவதை நிறுத்திவிட்டு அவளை நோட்டமிட ஆரம்பித்தான்.
அப்போது அங்கிருந்த வீரர்களில் ஒருவன் அவளது பின்புறத்தில் அம்பினால் ஏற்பட்ட காயத்தைப் பற்றிக் கூறினான்.இரு வீரர்களை அனுப்பி அவளுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி பணிக்க தன் அருகில் வந்து தன்னை பிடிக்க வந்த வீரர்களிடமிருந்து வேகமாய் ஒதுங்கி நின்றாள்.
இஷானின் பார்வையின் தீவிரம் இன்னுமாய் அதிகரித்தது.சிவகங்காவதியோ அரை மயக்க நிலையில் அவனை நோக்கி நின்றாள்.
“நான் தங்களிடம் தனிமையில் பேச வேண்டும்”
“எதைப்பற்றி?”
“என்னைப் பற்றி”
அங்கிருந்த அனைத்து வீரர்களுக்குமே இஷானின் நடவடிக்கை ஆச்சரியத்தை அளித்தது.இத்தனை பொறுமையை அவன் யாரிடத்திலும் கையாண்டதில்லை.இருப்பினும் எதோ ஒரு காரணத்திற்காகவே அமைதி காக்கிறான் என்றுணர்ந்தவர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.
“ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு உள்ளே வா”,என்றவன் வேகமாய் கூடாரத்திற்குள் நுழைந்து கொண்டான்.
மெதுவாய் அவன் பின் சென்றவள் தன் தடுமாற்றத்தை சமாளித்தவளாய் அங்கிருந்த கம்பைப் பற்றியவாறு நின்றாள்.
“கூற வந்ததை சீக்கிரம் கூறு.இப்படியே சிகிச்சை பெறாமல் இருந்தால் மூர்ச்சை ஆகிவிடுவாய்.அது மட்டுமன்றி இந்த நொடி உன் உயிர் எனக்கு முக்கியம்.எனக்கான வேலை முடிந்த பின் நிச்சயம் உன்னை கொன்றுவிடுவேன் ஆனால் இப்போது நீ சாகக் கூடாது.சொல் யார் நீ?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“என் பெயர் சிவகங்காவதி.பாளைக்காரர் சேதிராயனின் மகள்.”
“சபாஷ்!!ஒரு வழியாய் உன்னை உன் வாயாலேயே அடையாளப்படுத்திக் கொண்டாய்.எதற்காக இந்த ஆள்மாறாட்ட நாடகம்?”
“என் நாட்டை எம் மக்களை உனைப் போன்ற கயவர்களிடம் இருந்து காப்பதற்கு.”
“அந்தோ பரிதாபம் நீ அதுவும் ஒரு பெண் என்னிடமிருந்து நாட்டை காப்பாற்ற போகிறாயா?”,என்றவன் சிங்கமாய் கர்ஜித்துச் சிரித்தான்.
“இந்த இஷான் நஸீமை என்னவென்று நினைத்தாய்.நீ புத்திசாலி தான் ஒத்துக் கொள்கிறேன்.ஆனாலும் என்னை மிஞ்சியவள் இல்லை.நீ உள் நுழைந்த அடுத்த நொடியே கண்டுகொண்டேன் நீ சேதிராயனின் மகள் என்பதை.சற்று விளையாடிப் பார்க்க ஆசைப்பட்ட காரணத்தினாலேயே அமைதி காத்தேன்.