(Reading time: 18 - 36 minutes)

ஜகதீஷும் அவளும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஒரே பள்ளியில் படித்தவர்கள், யாதவி அளவுக்கு இல்லையென்றாலும் சக்தியும் அழகி தான், அதனால் அவளை காதலிப்பதாக ஜகதீஷ் கூறினான். இப்போது தோழிகள் சொன்னது போல் அழகானவன், பணம் உள்ள பார்ட்டி என்பதாலேயே அவளும் அதை ஏற்றுக் கொண்டாள்.

வீட்டுக்குத் தெரியாமல் இரண்டு வருடமாக காதலித்து வந்தார்கள். அந்த நேரம் இருவருக்கும் பிரச்சனை வந்து அவள் காதலை முறித்துக் கொண்டார்கள். அதற்குள் பள்ளிக் காலம் முடிந்து கல்லூரி வாழ்க்கையும் ஆரம்பித்தாகிவிட்டது.

அதற்குள் அவன் மேல் இருந்த கோபம் குறைந்த சக்தி, ஜகதீஷ் இந்த கல்லூரியின் சேரப் போவது அறிந்து அவளும் சேர்ந்துக் கொண்டாள். கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல்நாளே யாதவி, சக்தி, இன்னும் இரண்டு பேர் என நால்வரும் உடனே நட்பு பாராட்ட ஆரம்பிரத்தனர்.

அடுத்த இரண்டு நாட்களில் ஜகதீஷ் யாதவியிடம் காதல் கடிதம் நீட்டியதை கண்டு சக்தி அதிர்ந்துப் போனாள். ஒருநாளைக்கு முன்னர் தான் ஜகதீஷை பற்றி யாதவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அதான் ப்ரேக்அப் ஆயிடுச்சே அப்புறம் என்னடி.. அவனை விட்டுட்டு வேற பாய் ப்ரண்ட் பிடிக்கிறது தானே என்று மற்ற தோழிகள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போதும் யாதவி எதுவும் சொல்லியிருக்கவில்லை. இப்போது ஜகதீஷ் யாதவியை காதலிப்பதை நினைத்து சக்திக்கு வருத்தமாக இருந்தாலும், யாதவிக்கு தான் நடந்தது தெரியுமே அதனால் அவள் ஜகதீஷின் காதலை மறுத்துவிடுவாள் என்று சக்தி நினைக்க, இதோ முதல் செமஸ்டரே இன்னும் சிறிது நாட்களில் முடியப் போகிறது. ஆனாலும் ஜகதீஷ் யாதவியின் பின் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவளும் அதை கண்டும் காணாமல் இருக்கிறாள்.

இதைப்பற்றி சக்தி பேசினால், அவன் நினைத்த பெண்ணிடம் எல்லாம் காதல் சொல்லிக் கொண்டு இருக்கிறான். அவன் உனக்கு வேண்டுமா? என்று கேட்பாள். உண்மையில் சொல்லப் போனால் யாதவி சொல்வது சரிதான், தோழியின் மீதுள்ள அக்கறையில் அதை சொன்னால் பரவாயில்லை, ஆனால் யாதவியிடம் எப்போதும் உள்ள ஒரு அலட்சியம் அவள் திமிராக மற்றவர்களிடம் பேசுவது போல் இருக்கும், இதில் யாதவியின் அழகு குறித்து அவளுக்கு பெருமை வேறு, அதனால் ஜகதீஷ் அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் போல் என்பது சக்தியின் எண்ணம், அதுவே சக்தியின் மனதில் யாதவியின் மேல் ஒரு வன்மம் உண்டாக காரணமாய் அமைந்தது.

மஞ்சுளா வேலை முடிந்து ரத்னாவை தேடி வந்தார். இருவரும் ஒரே பருப்பு கம்பெனியில் தான் வேலை பார்க்கின்றனர். சிறிது நாட்களாக ரத்னாவும் மஞ்சுளாவும் வெவ்வேறு பிரிவில் வேலை பார்ப்பதால் வேலை நேரத்தில் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் வேலை நேரம் முடிந்ததும் ரத்னா மஞ்சுளா வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு தான் செல்வார்.

மஞ்சுளாவின் வீடு கம்பெனிக்கு அருகிலேயே இருந்தது. நடந்து போகும் தூரம் தான், ஆனால் ரத்னாவின் வீட்டிற்கு செல்ல கம்பெனியிலிருந்து அரைமணி நேரம் ஆகும், முன்பு புதிதாக இந்த ஊருக்கு வந்து இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த போது அதிக பேரின் அறிமுகம் கிடைத்திருந்தாலும், மஞ்சுளாவோடு தான் ரத்னா நெருக்கமாக நட்பு பாராட்ட ஆரம்பித்தார்.

தன் பிரச்சனைகளை மஞ்சுளாவிடம் சொல்லி தான் அவர் ஆதரவு தேடிக் கொள்வார். மஞ்சுளாவும் ரத்னாவிற்கு ஆறுதல் பேச்சுக்கள் பேசுவதால் இருவருக்குள்ளும் அழகான நட்பு பூக்க ஆரம்பித்தது. முன்பு ஒரே இடத்தில் வேலை செய்வதால் ஏதாவது பேசிக் கொண்டே வேலை பார்ப்பர். ஆனால் இப்போது அப்படி முடியவில்லையென்பதால் மஞ்சுளாவின் வீட்டில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் ரத்னாவிற்கு ஆறுதலாக இருக்கும்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்தனர். ரத்னா ஏதோ யோசனையோடு வந்துக் கொண்டிருந்தார். “என்ன ரத்னா ஏதாச்சும் பிரச்சனையா? உன் வீட்டுக்காரர் திரும்பவும் உன் பொண்ணை நடிக்க வைக்கும் முயற்சில இருக்காரா என்ன?” என்று மஞ்சுளா கேட்டார்.

“நான் கொஞ்சம் கண்டிச்சு வச்சிருக்கேன் க்கா.. அதனால இப்போதைக்கு எந்த பிரச்சனையுமில்லன்னு தான் நினைக்கிறேன்.. இது வேற பிரச்சனைக்கா.. யாதவிக்கு பரிட்சைக்கு பணம் கட்டணுமாம்.. இப்போதைக்கு கையில் பணம் இல்ல.. யார்க்கிட்டயாவது கைமாத்தா கடன் வாங்கணும்.. யார்க்கிட்ட கேக்கறதுன்னு தான் புரியல..”

“என்ன ரத்னா.. நான் உன்னோட ஞாபகத்துக்கு வரவே இல்லையா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் " காதல் காதலித்த காதலியை காதலிக்கும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“எத்தனையோ முறை உங்கக்கிட்ட வாங்கியாச்சு.. திரும்ப திரும்ப கேக்கறதுக்கு சங்கடமா இருக்குக்கா..”

“இங்கப்பாரு வாங்கிட்டு திரும்ப கொடுக்காமலா இருக்க.. திருப்பி கொடுக்கற தானே, அப்புறம் என்ன.. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இல்லன்னா எப்படி.. அவர் போனதுக்கு பிறகு நானும் இந்த ஊருக்கு பிழைப்பை தேடி வந்தப்போ, இந்த கஷ்டமெல்லாம் அனுபவிச்சிருக்கேன்.. அதனால தான் உன் கஷ்டமெல்லாம் எனக்கு புரியுது.. நீ என்ன பெரிய தொகையாவா எங்கிட்ட கடனா கேக்கற, ஐநூறு தானே, அப்புறம் இப்படி பேசினா என்ன அர்த்தம்..”

“நீங்களும் இருக்கப்பட்டவங்களா இருந்தா பரவாயில்லக்கா.. விபு தம்பிக்கு தினம் வண்டில அலையற வேலை.. அர்ச்சனாவோட கல்யாண கடனையும் அடைக்கணுமே.. இதுல இப்படி நான் வேற தொந்தரவா இருந்தா எப்படிக்கா..”

“அர்ச்சனா கல்யாண கடன் கொஞ்சம் தான் இருக்கு..  விபு இப்பவே நீ எதுக்கு வேலைக்கு போயிட்ருக்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.. அர்ச்சனா வீட்ல பார்த்துக்கிறதால பொழுது போகணும்னு சொல்லிக்கிட்டு தான் வேலைக்கு வந்துட்ருக்கேன்.. இப்போ நான் வேலைக்கு போகலன்னாலும் விபுவால சமாளிக்க முடியும் போது இந்த ஐநூறு, ஆயிரம் உனக்கு கொடுக்கிறதால உனக்கும் ஒன்னும் ஆயிடாது..” என்றவர்,

“இருந்தும் விபுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்.. இப்படி வண்டில சுத்தி சேல்ஸ் ரெப் வேலைப்பார்த்து பிள்ளை கஷ்டப்பட்றான்.. இல்ல அந்த கேஸ்லயாவது ஜெயிக்கணும்..” என்று சொல்லிக் கொண்டவரின் சிந்தனை எங்கேயோ பயணித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.