(Reading time: 18 - 36 minutes)

மஞ்சுளாவின் கணவர் ஸ்ரீனிவாசன் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை, மஞ்சுளாவை அவர் காதல் மணம் புரிந்தார். அதற்கு ஸ்ரீனிவாசனின் தந்தை சுதர்ஷனிடம் இருந்து நிறையவே எதிர்ப்பு, தந்தையோடு உறவை முறித்துக் கொண்டு தான் மஞ்சுளாவை அவர் திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு சுதர்ஷன் ஏற்றுக் கொள்ளாததை தவிர, அவர்கள் வாழ்க்கை நல்லப்படியாகவே தான் சென்றது. படித்த படிப்புக்கு ஒரு வேலையை தேடிக் கொண்டவர், மனைவி, இரண்டு பிள்ளைகள் என்று அவரது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்க, திடிரென ஒருநாள் மாரடைப்பால் அவரை மரணம் ஆட்கொண்டது.

அப்போது விபாகரன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். ஸ்ரீனிவாசன் மறைவுக்கு பின் கொஞ்சம் காலம் தான் வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் போனது. அதன்பின் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் தான், இதில் பிள்ளைகள் படிப்பு வேறு இருக்க, மஞ்சுளாவின் பிறந்த வீடு பாண்டிச்சேரி பக்கம் என்பதால் அங்கே அவர்களிடம் அடைக்கலம் புகுந்து அங்கிருந்தப்படியே பாண்டிச்சேரிக்கு வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அர்ச்சனாவை தன்னுடன் அழைத்துச் சென்று அங்கேயே பள்ளியிலும் சேர்த்துவிட்டார்.

ஆனால் விபா பாதியில் படிப்பை விட முடியாது என்றவன், அங்கேயே கல்லூரி முடிய மீதி நேரம் வேலைப்பார்த்து, சில பேரோடு அறையில் தங்கி என்று சமாளித்துக் கொண்டான்.

இப்படியே மேற்படிப்பையும் முடித்து அன்னை, தங்கையோடு வந்தவன்,  நல்ல வேலை கிடைக்கும் வரை ஏதோ ஒரு வேலை என்று சேல்ஸ் ரெப் வேலை செய்துக் கொண்டிருக்கிறான். அவன் வேலைக்கு போக ஆரம்பித்ததுமே பாண்டியிலேயே வீடு பார்த்து குடியேறியவர்கள், அர்ச்சனாவிற்கும் படிப்பு முடியவே ஒரு நல்ல வரனாக பார்த்து திருமணமும் செய்து வைத்தனர்.

அர்ச்சனாவின் திருமணத்திற்கு பின் அவள் கணவன் சவூதியில் வேலை கிடைத்து சென்று விட, அர்ச்சனாவிற்கு கொஞ்சம் வாய் துடுக்கு என்பதால் அவளுக்கும் அவளது மாமியாருக்கும் ஒத்து வராததால் இங்கே தன் பிறந்த வீட்டிலேயே கணவன் வரும் வரை இருந்துக் கொள்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாள். அர்ச்சனாவின் மாமியாரும் ஆரோக்கியமாக இருப்பதால் உடன் தம்பி அஜயும் இருப்பதால், அர்ச்சனாவின் கணவனுக்கும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

அங்கிருந்து விஜய் இருவருக்குமே பணம் அனுப்புவான். அதை அர்ச்சனா அன்னையிடம் கொடுத்தால், “கல்யாணம் ஆயிட்டதால நீ வேத்து மனுஷி கிடையாது.. உன்னோட ஒருத்திக்கு என்ன அதிகம் செலவாகிட போகுது.. நீயே அதை வச்சிக்க.. வருங்காலத்துக்கு உதவும்..” என்று சொல்லிவிடுவார்.

அர்ச்சனாவிற்கும் திருமணம் முடிந்ததால் மஞ்சுளாவை வேலைக்கு போக வேண்டாம் என்று விபாகரன் சொல்லிவிட்டான். இருந்தும் வேலைக்கு போகலன்னா என்னமோ மாதிரி இருக்கும் என்று சொல்லி வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக இங்கே வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. இதில் விபாகரன் படிப்பு முடித்துவிட்டு வந்த நேரத்தில் தான் அவனது தாத்தாவிற்கு மிகவும் உடம்பு முடியாமல் சீரியஸாக இருப்பதாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்றிருந்தார்கள்.

மகன் உயிரோடு இருந்தவரை அவரை வேண்டாமென்று ஒதுக்கி வீம்பாக இருந்தவர், ஸ்ரீனிவாசன் இறந்த செய்தி கிடைத்த போது மனதளவில் மிகவுமே தளர்ந்து போனார். அதன்பின் அவருக்குமே கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் சரியில்லாமல் போனது. இதில் ஒரே மகனை ஒதுக்கிவிட்டு உறவினர்களை உடன் சேர்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும் அவர்களின் நடவடிக்கைகள் சுயநலமாக தெரியவே, இப்போதெல்லாம் பேரன் பேத்தி மீது தன் எண்ணம் சுற்றிக் கொண்டிருக்க, மஞ்சுளாவும் பிள்ளைகளும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாததால், அவர்களை தேடி கண்டுபிடிக்கவே நாட்கள் கடந்துபோக மஞ்சுளாவும் பிள்ளைகளும் அவரை பார்க்கும் போது அவர் உடல்நலம் மிகவும் மோசமாகியிருந்தது.

அதற்கு அடுத்து வந்த நாட்களிலேயே அவர் இறந்தும் போக அவருக்கு இறுதி சடங்குகள் செய்துவிட்டு இவர்கள் திரும்ப வந்துவிட்டார்கள்.

ஆனால் சுதர்ஷனுக்கு அவரின் சொத்துக்கள் அதன்பின் அவர் பேரன் பேத்திக்கு பேத்திக்கு சேர வேண்டும், சுதர்ஷன் க்ருப் ஆஃப் கம்பெனியை விபாகரன் எடுத்து நடத்த வேண்டும் என்பது தான் அவரின் கடைசி ஆசை, அதை அவர் நம்பத்தக்க சில பேரிடம் சொல்லி சென்றிருக்க, அதை அப்படியே மஞ்சுளாவிடமும் விபாகரனிடமும் அவர்கள் கூறினார்கள்.

“இதெல்லாம் எங்களுக்கு எதுக்கு.. விபு அப்பாவே இதெல்ல வேண்டாம்னு தானே வந்துட்டாரு.. அதனால எங்களுக்கும் வேண்டாம்..” என்று மஞ்சுளா சொல்ல,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நாம ஏன்ம்மா அதை வேண்டாம்னு சொல்லணும்.. இது நியாயமா அப்பாக்கு சேர வேண்டியது.. தாத்தாவும் அதை சொல்லிட்டு தானே போயிருக்கார். அதனால நாம உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கணும்..” என்றுக் கேட்டான்.

ஆனால் உறவினர்களோ, ஸ்ரீனிவாசன் எப்போதோ சொத்துக்கள் வேண்டாம் என்று பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததை காட்டி, இப்போது உரிமை கொள்ள முடியாது என்று கூறினார்கள்.

ஆனால் அதெல்லாம் செல்லாது என்று வழக்கறிஞர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்ட விபாகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான். அந்த வழக்கு தான் இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது. எப்படியோ வழக்கு இவர்கள் பக்கம் தான் ஜெயிக்கும் என்பதால், வழக்கறிஞரும் பணம் வாங்காமல் வழக்கு நடத்திக் கொண்டிருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுபாட்டுக்கு நடந்துக் கொண்டிருக்க, இவர்கள் பாட்டுக்கு ஒருப்பக்கம் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

“கேஸ் இப்போ எந்த நிலைமையில் இருக்குக்கா..” என்ற ரத்னாவின் கேள்வியில் மஞ்சுளாவும் நடப்பிற்கு வந்தார்.

“கேஸ்ல எப்படியும் நாங்க தான் ஜெயிப்போம்னு சொல்லியிருக்காங்க.. பார்ப்போம் கடவுள் விட்ட வழி என்று சொல்லியப்படியே வீடு வந்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.