(Reading time: 18 - 36 minutes)

ற்கனவே சுடரை கண்டால் அருள்மொழிக்கு பிடிக்காது.. இதில் இன்று ஏதோ குழப்பத்திலேயே இருந்தவளுக்கு சுடரின் வார்த்தையை கேட்டு கோபம் வந்து,

“ஆமாம் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கும்.. எனக்கு கல்யாணம் நடந்தா தானே உனக்கும் மகிக்கும் கல்யாணம் நடக்கும்.. அதனால சந்தோஷமா தான் இருக்கும்..

ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத.. ஏதோ மகி உன் கழுத்தில் தாலி கட்டிட்டான்னு தான் நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர முடியுது புரியுதா? இல்லன்னா உன்னை யாரும் விரும்பில்லாம் தங்களோட வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்க மாட்டாங்க..

மகி மட்டும் உன்னை மனசார விரும்பியா உன் கழுத்தில் தாலி கட்டிருப்பான்.. ஏதோ உன் மேல இரக்கப்பட்டு தான் அப்படி செஞ்சான்.. அன்னைக்கு என்கிட்ட பேசும் போது கூட நான் செஞ்சது தப்புன்னு அவனே ஒத்துக்கிட்டான் தெரியுமா?” என்ற அவளது பேச்சில் சுடர் மிகவுமே காயப்பட்டு போனாள்.

ஏற்கனவே அனைவரும் தன்னை ஒதுக்கிகிறார்களோ என்று நினைத்தப்படி வருந்தி கொண்டிருந்தவளுக்கு, அருளின் பேச்சு இன்னும் அவளை வருந்த வைத்தது. கண்களில் கண்ணீர்  பார்வையை மறைக்க, அங்கே நிற்க பிடிக்காமல் அவள் அந்த அறையை விட்டு வெளியேறும் போது அறை வாசலில் அமுதன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை பார்த்து சில நொடி தயங்கி நின்றவள், பின் அவனிடமும் பேசாமல் சென்றுவிட்டாள்.

அருள் மணமேடையிலிருந்து போனதுமே அமுதனும் நண்பர்களோடு பேசி முடித்திருந்தான். பின், “அருள் அறைக்குச் சென்றிருக்கிறாள்.. கூட்டிட்டு வர சொல்கிறேன்..” என்று பூங்கொடி சொல்லவும்,

நிச்சய தேதி குறித்ததிலிருந்தே அவளிடம் தனிமையில் பேச துடித்துக் கொண்டிருக்கிறானே, அதனால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, “இல்லை நானே போய் சுடரை கூட்டிட்டு டைனிங் ஹாலுக்கு வரேன்..” என்று சொல்லிவிட்டு வந்தவன் தான், இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டான்.

அருளுக்கு சுடரை பிடிக்காது என்பது போல் சுடர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் நேரில் பார்க்கிறான். ஏற்கனவே சுடர் அவன் மீது இன்னும் கோபமாக இருப்பதை உணர்ந்திருந்தவன், நிச்சயதார்த்தம் முடிந்ததும் தான் அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறான். அப்படியிருக்க இப்போது அருள் சுடரை பேச்சால் காயப்படுத்தியதை பார்த்தவன்,

“சுடர் மேல இருக்க கோபம் இன்னும் உனக்கு போகலையா மொழி? எதுக்கு அவளை இப்படி பேசின.. அதுல உனக்கு என்ன கிடைச்சது.. சுடரும் நானும் செஞ்சது தப்பு தான்.. அதுக்கு ரொம்பவே ஃபீல் பண்ணிருக்கோம் தெரியுமா? என்னத்தான் சுடர் என்கிட்ட சொல்லி தான் நான் செஞ்சேன்னாலும் எனக்கு எங்க போச்சு புத்தி.. நான் அப்படி செஞ்சிருக்க கூடாதில்ல.. ஆனா என்னையே நீ மன்னிச்சதால தானே இப்போ நம்ம நிச்சயதார்த்தம் நடக்குது.. என்னை மன்னிச்ச நீ சுடரையும் மன்னிக்க கூடாதா? என்று அவன் கேட்க,

“உங்களை யாரு மன்னிச்சா.. நீங்களும் அவளும் செஞ்சதை என்னால மறக்கவும் முடியாது.. மன்னிக்கவும் முடியாது.. அப்படியிருந்தும் உங்களை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன்னா அதுக்கு காரணம் எங்கம்மாவும் உங்கம்மாவும் தான், அவங்களுக்காக மட்டும் தான் நான் உங்களை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன்.. ஏன் நீங்க மட்டும் என்னவாம்.. உங்கம்மாக்காக மட்டும் தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க.. இல்லை பழைய பஞ்சாங்கம்னு சொன்ன என்னை திரும்ப கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டதுக்கு வேற காரணம் என்னவாக இருக்க முடியும்?” என்ற அவளது கேள்வியில் அவன் அப்படியே ஸ்தம்பித்து போனான்.

“மொழி..” என்று அவன் ஏதோ சொல்ல வரவும்,

“ப்ளீஸ் கொஞ்சம் என்னை தனியா விட்டுட்டு போங்க..” என்று அவன் முகத்தில் அடித்தாற் போல் கூறினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நிச்சய தேதி குறிக்கும் போது இவன் அலைபேசியில் பேசிய போது இப்படி தானே அவனை தவிர்த்தாள். அதன்பின் ஒவ்வொரு முறையும் பேச முயற்சிக்கும் போதெல்லாம் அது முடியாமல் போனதே, நிச்சயதார்த்த புடவை எடுக்கும் போது அவள் வரவில்லையே, அப்படியென்றால் மொழிக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை.. இருவரது அம்மாக்காக மட்டும் தான் சம்மத்திருக்கிறாள் என்று தெரியும் போதே மனம் வேதனையில் துடித்தது. அதே வேதனையோடு அவன் அறையை விட்டு வெளியே முகத்தை தொங்கப் போட்டப்படி வரும்போது அங்கே இலக்கியா நின்றுக் கொண்டிருந்தாள்.

அருள் சுடரை கூட்டிக் கொண்டு சென்ற கொஞ்ச நேரத்திலேயே இலக்கியாவும் அவளைப் பார்க்க அறைக்கு வரும்போது அமுதனும் இன்னொரு வழியில் அங்கு வந்ததால், இந்த நேரம் அங்கே போக வேண்டாம் என நினைத்து அங்கேயே நிற்கும் போது தான் அருள் சுடரிடம் பேசியதை அமுதன் கேட்டது போல் அவளும் கேட்டாள்.

அருளின் பேச்சு இலக்கியாவிற்கே கஷ்டமாக இருந்தது. அவளுக்கு சுடரை பிடிக்காது என்பதெல்லாம் இல்லை, ஆனாலும் இங்கு வந்தால் அருள்மொழியுடனே அதிக நேரம் இருப்பதால் சுடரிடம் அவள் அதிகம் பேசி பழகியதில்லை தான், அருள் விஷயத்தில் சுடர் செய்ததற்கு அவளும் சுடர் மீது கோபப்பட்டாள் தான்,  ஆனாலும் இப்போது சுடர் மகியின் மனைவி, இனி அவளும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி அல்லவா, இப்போது பிரச்சனைகள் சுமூகமாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அருள் சுடரிடம் பேசியது சரியில்லை என்பது போல் அவள் நினைத்துக் கொண்டிருக்க,

அடுத்து அமுதனிடமும் அவள் இப்படி பேசுவதை பார்த்த போது, அருளின் மனநிலையை அவளால் கொஞ்சம் யூகிக்க முடிந்தது. அவள் ஒருவேளை இங்கே ஊரில் இருந்திருந்தால் அருளின் மனநிலை புரிந்து ஏதாவது பேசி சரி செய்திருப்பாள். ஆனால் மாணிக்கத்திற்கு முக்கியமான வேலை இருந்ததால் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு கிளம்பும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவர்கள் ஊரிலிருந்து வந்திருந்தனர். அப்போதும் மணி, மலர் எல்லாம் உடன் இருக்கவே அருளிடம் ஒன்றும் பேச முடியாமல் போனது.

இப்போதோ அருளிடம் பேசுவதை விட அமுதனிடம் பேசுவது தான் சிறந்தது, என்பதை புரிந்துக் கொண்டவள், “ப்ரோ கொஞ்சம் அந்தப்பக்கம் வாங்க..” என்று அழைத்துச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.