(Reading time: 12 - 23 minutes)

ஒருநொடியாயினும் நஸீம் அதை கண்டுகொண்டான்.அது அவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட நந்தவனம்.அதில் அவர்கள் இருவருக்குமன்றி யாருக்கும் அனுமதியில்லை என்பது புரிந்தது.

அறையின் நடுவிலே மிகப்பெரிய பஞ்சணை போடப்பட்டிருக்க சற்றே தொலைவில் சிறு திவானோடு முக்காலியும் போடப்பட்டிருந்தது.அரண்மனையின் மற்ற பகுதிகளை விட இதன் கட்டிட கலையும் உள்ளிருந்த அலங்காரங்களும் அத்தனை ரம்மியமாய் இருந்தது.

அறையில் பார்வையை சுழற்றியவளையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் நஸீம்.அதை உணர்ந்து கொண்டவளுக்கு அப்படியாய் ஒரு பதட்டம் மனதிற்குள்.மெதுவாய் அவளருகில் வந்தவன் ஓர் விரல் அளவு இடைவெளி விட்டு நின்றவாறு அவள் செவிகளில் மென்மையாய்,

பிடித்திருக்கிறதா கங்கா!!நமக்காகவே..  நமக்கான, வடிவமைக்கப்பட்ட அறை.”

அத்துனை தெம்பும் தளர்ந்து கால்கள் தரையிலிருந்து நழுவுவதாய் உணர்ந்தவள் சட்டென அங்கிருந்து இரண்டடி எடுத்து வைத்திருந்தாள்.அப்போது தான் மூச்சே சீரானதை போன்ற பிரமை அவளிடத்தில்.

அவளின் நிலை உணர்ந்தவனோ சிறிது சிறிதாய் தன் வசம் இழந்து கொண்டிருந்தான்.காது மடல் சிவக்க நின்றிருந்தவளின் வதனம் அவனை பித்தாக்க ஆரம்பித்திருந்தது.இருந்தும் அவளின் அனுமதியின்றி விரல் கூட படக்கூடாது என்பதில் வெகு கவனமாய் இருந்தான்.

சரி போகட்டும் இங்கு தான் எனக்கான ஓவியத்தை வரைந்து தர வேண்டும் தருகிறாயா?”

நிச்சயம் தருகிறேன்.என்ன மாதிரியான ஓவியம் வேண்டும் என்று கூறினால்..”

கூறுவதென்ன நேரடியாகவே காண்பிக்கிறேன்”,என்றவன் அவளை வருமாறு அழைத்து நிறுத்தி அவள் முன் இருந்த திரையை விலக்க ஆளுயரக் கண்ணாடி இருந்தது.அதில் தெரிந்த தன் உருவத்தைக் கண்டு அவள் அதிசயித்து நிற்க அதையும் கடந்து போகும் வகையில் அவன் வார்த்தைகள் ஒலித்தன.

இப்போது உன் கண் முன் பார்க்கும் இரு உருவங்களையும் கண்களை மூடிக் கொண்டு எனக்காக வரைந்து தர வேண்டும்.”

என்ன!!!”

என்னவயிற்று என்னையும் என் நாட்டின் அரசியையும் வரைந்து தரச் சொல்லி கேட்கிறேன்.முடியாதா?”

சிவகங்காவதிக்கோ மனமெல்லாம் ஒருவித பரவசம் பொங்கி எழுகிறது.குழப்பங்கள் கூட சற்று பின்தங்கி விட்டதாய் தோன்றியது.இத்துனை அன்பு வைத்திருக்கிறானா தன் மீது என தன்னையே கேட்டுக் கொண்டாள்.

இப்போதே உனக்குத் தேவையான அனைத்தும் இங்கு வரவழைக்கப்படும் சற்று நேரம் காத்திரு”,என்றவன் பணிப்பெண்களுக்கு உத்திரவிட்டான்.

அனைத்தையும் கொண்டுவந்து  வைத்துவிட்டு அவர்கள் சென்றபின் அங்கிருந்த வஸ்திரத்தை கொண்டு வந்தவன் அவளுக்குப் பின் நின்று கண்களை கட்டினான்.தன் கைகளால் கண்களின் மேல் வருடியவள் செய்வதறியாது நின்றிருந்தாள்.

இதோ உன் முன் நீண்டிருக்கும் என் கரத்தைப் பிடித்துக் கொள் எங்கு வரைய வேண்டுமோ நான் அழைத்துச் செல்கிறேன்

விரல்களில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டிருக்க மென்மையாய் அவன் கரத்தைப் பற்றியவள் அவனைப் பின் பற்றி நடக்க ஆரம்பித்தாள்.

தங்கள் படுக்கைக்கு எதிர்புறம் இருந்த சுவறருகே அவளை நிற்க வைத்தவன் தூரிகையை அவள் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட ஆழ்மூச்செடுத்தவளாய் மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியம் தீட்டத் தொடங்கினாள்.

சில நொடிகளுக்கு அவளுக்கு ஒன்றுமே புரியாமல் போனது.மீண்டும் மீண்டும் கண்ணாடியில் தெரிந்த அவர்களின் பிம்பமே கண்முன் தோன்றியது.மீண்டும் மனதை நிலைப்படுத்தி வண்ணம் தீட்டுவதை தொடங்க நஸீமோ அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு அவளையே பார்த்திருந்தான்.

எத்தனை நாள் அவா அவளை தன்னருகில் வைத்து யாரின் இடையூறுமின்றி காண வேண்டுமென்பது!இன்று அது நடக்கும் என்று சிறிதும் எண்ணியிருக்கவில்லை.அவளின் உயரமும் தோரணையும் அவனை வெகுவாய் கவர்ந்தது.

தன் முன் நின்றவளை தன்னோடு சேர்த்து கண்ணாடியில் பார்த்தபோது தனக்காகவே பிறந்தவள் இவள் அன்றோ என்ற எண்ணமே மேலோங்கியது.அதற்கும் மேலாக தன் அருகாமையில் அவளின் தடுமாற்றம் அவனுக்கு மேலும் உவகையூட்டுவதாய் அமைந்தது.

மனதில் தன்மீது அன்பு இல்லாமல் இருந்திருந்தால் அந்த தடுமாற்றம் ஏற்பட்டிருக்காதே!அப்படியானால் அவளும் என்னை முழு மனதோடு ஏற்றுக் கொள்வாளா?! என்று தன்னுள் கரைந்த நேரம் சிவகங்காவதி அவனை அழைக்கும் ஒலியில் நினைவு பெற்றிருந்தான்.

எங்கே இருக்கிறீர்கள்??நான் அழைப்பது கேட்கிறதா?கண்களின் கட்டை அவிழ்க்கப் போகிறேன்..”,என்றவள் கண்களைத் திறந்து பார்த்தபோது சுவற்றில் இருந்த ஓவியத்தை இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்தான் நஸீம்.

அவனைக் கண்டவள் தலைத் திருப்பி தான் வரைந்ததைப் பார்க்க சற்றுமுன் பார்த்த அவர்களின் பிம்பம் அற்புதமான சித்திரமாய் அந்த அறையை அலங்கரித்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.