(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 18 - ஜெய்

Gayathri manthirathai

க்தி கல்லூரியிலிருந்து திரும்பி தன் அல்லக்கைகளுடன் t20 கோலி மேட்ச் விளையாடிய களைப்பில் ஹாலில் இருந்த சோபாவில் அனந்த சயனத்தில் இருக்கும்போது காயத்ரி உள் நுழைந்தாள்.... அவள் தன் இல்லத்தில் தங்க ஆரம்பித்ததிலிருந்து பிக் அப் அண்ட் ட்ராப்பை தன் அன்னைக்கு பயந்து நிறுத்தி இருந்தான் சக்தி....

அவள் காரில் வந்து இறங்கியதிலிருந்தே ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவன் அவள் உள்நுழைந்ததும் படக்கென்று sleeping பொசிஷனிலிருந்து sitting பொஷிஷனிற்கு வந்தான்....

அவனின் சேட்டைகளை பார்த்து முறைத்தபடியே வந்தமர்ந்தார்  செங்கமலம்...

“வாம்மா... காலேஜ் நல்லா போச்சா.... களைச்சு போய் தெரியற..”

“இன்னிக்கு ரெண்டு மணி நேரம் லேப்... அதனால நின்னுட்டே இருக்க வேண்டியதா போச்சு ஆன்ட்டி.... அதான் கொஞ்சம் களைப்பா இருக்கு...”

காயத்ரி சொல்லி முடிப்பதற்குள் குடு குடுவென்று சமயலறைக்கு ஓடிய சக்தி அவளுக்கு காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தான்.... என்னவோ ஏதோ என்று பயந்து போய் பார்த்தாள் காயத்ரி....

“டேய் என்னதுடா அது....”

“அது காயு களைச்சு போய் வந்திருக்கா இல்லம்மா அதான் காபி கலந்து எடுத்துட்டு வந்தேன்.... வாங்கிக்க காயு....”

“அடப்பாவி உனக்கு நம்ம வீட்டுல சமையலறை எந்த பக்கம் இருக்குன்னு கூட இம்புட்டு நாளா தெரியாதுன்னு இல்லை நினைச்சேன்.... நீ எப்படா காபியெல்லாம் போட ஆரம்பிச்ச....”

“அதெல்லாம் கல்யாணம் ஆனா பொறுப்பு தானா வந்துடும்மா...”

“அடேய் இந்த பொறுப்பு பருப்பெல்லாம் இம்புட்டு நாளா எங்கடா போச்சு.... பெத்த தாய் எனக்கு ஒரு நாளு காபி வேணாம்... தண்ணியாச்சும் கொண்டு வந்து கொடுத்திருக்கியா...”

“ஏம்மா அமைச்சர் இதெல்லாம் உனக்கு செய்யறதில்லையா... கூப்பிடு அவரை... ஒரு விசாரணை கமிஷன் வைப்போம்...”

“ஏண்டா உன்னை கேள்வி கேட்டா அதுக்கு நீ பதில் சொல்லு... எதுக்கு என் வீட்டுக்காரரை வம்புக்கு இழுக்கற.... அவரு தங்கம்டா.... பொண்டாட்டியை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பாரு....”

“அவரு தங்கமோ இல்லையோ... உங்க மாமியா தங்கமோ தங்கம்... இருபத்துநாலு காரட் சொக்கத்தங்கம்.... புள்ளைக்கிட்ட இருந்து பொண்டாட்டிய பிரிக்காத நல்ல மனுஷி... ஆனா சில மாமியாருங்க இருக்காங்களே... அய்யயோ தொல்லை தாங்காது....”

“டேய் நீ எப்படி வளைச்சு, மறிச்சு, நேரடியா மறைமுகமா எந்த வழில பேசினாலும் வேலைக்காகாதுடா மகனே... காயு upstairs, நீ downstairsதான்.... அதனால ஒழுங்கா படிச்சு உருப்படற வழியைப் பாரு...”

“ஏம்மா புள்ள குட்டிங்கள படிக்க வைக்கற வயசுல என்னைய படிக்க சொல்றியே இது உனக்கு அடுக்குமா...”

மாறி மாறி அன்னையும், மகனும் பேசுவதை வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள் காயத்ரி....

“காயு பேபி, காபி ஆறுது பாரு மொதல்ல குடி... என் கையால நானே போட்டது... எப்படி இருக்குன்னு குடிச்சுட்டு சொல்லு...”, சக்தி அவளிடம் காபி கப்பை நீட்டினான்....

அதை வாங்குவதா வேண்டாமா, வாங்கினால் எங்கே சக்தியை பிடித்திருக்கிறது என்று செங்கமலம் எண்ணி விடுவார்களோ என்று பயந்தபடியே அவரைப் பார்த்தாள்...

“தைரியமா வாங்கி குடிம்மா.... இதுனால எல்லாம் இவனை உனக்கு பிடிச்சிருக்குன்னு நான் நினைக்க மாட்டேன்... உங்க காலேஜ் கான்டீன்ல மாஸ்டர் கையால காபி வாங்கி குடிக்கறதில்லையா.... அப்படி நினைச்சுக்கோ....”, செங்கமலம் சொல்ல நிம்மதியுடன் காபி கப்பை வாங்கிக்கொண்டாள்....

“அம்மா இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்... அவங்க காலேஜ் டீ மாஸ்டரும் நானும் ஒண்ணா....”

“ச்சே ச்சே அப்படி சொல்லி நான் அந்த டீ மாஸ்டரை குறைச்சு மதிப்பிட மாட்டேன்....”, செங்கமலம் சொல்ல காயத்ரி காபியை குடித்து விட்டு சிரித்தபடியே மாடி ஏறினாள்....

“மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே....”, காயத்ரி செல்வதை ஏக்கத்துடன் பார்த்தபடியே பாடினான் சக்தி...

“நான் அடிச்ச தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட... மோதி பாரு வீடு போயி சேர மாட்ட....”, சக்தியின் பாடலுக்கு எசப்பாட்டு பாடினார் செங்கமலம்...

“என்னடா அம்மாவும், புள்ளையும் பாட்டுக்கு பாட்டு நடத்திட்டு இருக்கீங்களா... கேட் வரைக்கும் கேக்குது....”, இவர்களின் கச்சேரியை கேட்டபடியே வந்தமர்ந்தார் அமைச்சர்....

“நைனா அம்மா பண்றது நல்லாவே இல்லை சொல்லிட்டேன்.... அவங்க மட்டும் உங்களை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்... ஆனா நான் மட்டும் என்னோட காயுவை பார்க்க கூடாது, பேசக்கூடாது இது எந்த ஊரு நியாயம்....”

“மானத்தை வாங்கதடா மகனே... உங்கம்மா என்னை கரெக்ட் பண்ணலைடா... காதல் பண்ணினாடா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.