(Reading time: 9 - 17 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

பாறைகளின் இடுக்கில் நீர் இருக்கக் கூடும். ஆனால் ஆர்வக் கோளாறில் அப்படியே அருந்துதல் கூடாது. அதை சுத்தபடுத்த வேண்டும். அதற்கு நெருப்பு அல்லது சூரிய ஒளி அவசியம். அதனால் இப்போதைக்கு இரவை கழிக்க மட்டுமே மனதை ஒருமுகப் படுத்துவோம் என்று அவள் பாறைகளையே போர்வையாக உடுத்திக் கொண்டாள்.

உடலின் அசதி உறக்கத்திடம் தஞ்சம் புகுந்தது.

‘நாளை வருகிறேன்’ என்று நிலவு விடை பெற்று செல்ல சூரியனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தது வைகறை.

கதிரவனின் கதிர்கள் பூமியை ஆலிங்கனம் செய்து கொள்ள தேன்மொழியின் இமைக்கதவுகள் திறந்து கொண்டன.

அவளுக்கு முன்னிரவில் நடந்த அனைத்தும் உரைத்தது.

“ஆதி என்ன ஆனானோ. என்னைக் காணவில்லை என்று தாத்தா தேடுவாரே. அம்மா அப்பா அண்ணாக்கு எல்லாம் சொல்லியிருப்பாரோ” என்று அவள் மனம் பலவாறு கேள்விகளை தொடுத்து பதில் காண முடியாமல் தவித்தது.

பிரியமானவர்களின் பிரிவே பலவீனம் மனிதனுக்கு.

அப்படி தான் பலவீனமாக உணர்ந்தாள் தேன்மொழி.

இரவில் அவளை அச்சுறுத்தாத அந்தத் தீவு பகலில் பயம் காட்டியது.

நீரோ உணவோ கிடைக்குமா என அத்தீவு முழுக்க சுற்றி களைத்துப் போனது தான் மிச்சம்.

அவளுக்கு இன்னும் அதிகமாக தாகம் எடுத்தது.

மீண்டும் பாறை மீது வந்து அமர்ந்தாள். அவள் மேல் சூரியனுக்கு என்ன கோபமோ. அவளது மேனியை சுட்டெரித்தான்.

“எப்படியும் தாத்தாவும் ஆதியும் தேடி வருவார்கள். என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள். அது வரை நான் உயிர் வாழ வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் என்ன தான் மனதில் உரு போட்டுக் கொண்டே இருந்தாலும் தொண்டை காய்ந்து போயிற்று.

தேகம் வதங்கிப் போனது.

சுடும் பாறை மீது டைவிங் சூட்டை விரித்து அதில் சாய்ந்து படுத்திருந்தாள்.

இது போல தீவுகளில் சிக்கிக் கொண்டவர்கள், அல்லது அங்கே விடப் பட்டவர்கள் கதைகளில் எல்லாம் அத்தீவுகளில் மரங்கள், செடி கொடிகள், பழங்கள், உயிரினங்கள் என்று உயிர் வாழ தகுதியாக இருந்தனவே.

இது என்ன இப்படி ஒரு தீவில் வந்து சிக்கிக் கொண்டோம் என்று மனம் நொந்து போனாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.