இதைக் கவனித்த இளவரசன் தன் மறைவிடத்திலேயே நின்றுக் கொண்டான். ஒருவேளை கிரண் தேவி வெளியில் வரும் சமயம் எதுவும் பிரச்சினை நடந்தால், மறைந்து இருந்து தாக்கலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே நின்றுக் கொண்டான்.
நேரம் சென்றுக் கொண்டிருக்க, சில நாழிகைகள் கடந்து ராணி கிரண் தேவியின் சிவிகை வெளியே வந்து , ராஜபுத்திர வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் ஜோதா அரண்மனை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அங்கேயே கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த இளவரசன், தானும் சிவிகை சென்ற பாதையில் சென்றான்.
ஜோதா அரண்மனை வருமுன் , ஓரிடத்தில் சிவிகையை நிறுத்தச் சொல்ல, நிறுத்தி விட்டு வீரர்கள் சற்று நகர்ந்து சென்றனர். தன் சிவிகை அருகில் நடந்து வந்து கொண்டு இருந்த பணிப்பெண்ணை அழைத்தாள் ஜோதா ராணி.
பணிப்பெண் அருகில் வரவும்,
“கிரண், பதேபூர் விட்டுத் தப்பித்து ராணாவிடம் சென்று விடு. இதற்கு மேலும் நீ இங்கிருந்தால் உன் உயிருக்கு மட்டுமல்ல, உன்னை வைத்து ரானாவையும் சிறைப்படுத்த முயற்சிப்பார் அரசர். எனவே இந்த இடத்தில் இருந்து நீ கிளம்பி விடு” என்றுக் கூறவும், கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு திகைப்பாக இருந்தது.
ஆம் அது கிரண் தேவியே. அக்பரின் கோட்டைக்குள்ளிருந்து ஜோதா ராணி வெளியேறும் சமயம், அந்தப் பணிப்பெண்களில் ஒருவராக கிரண்தேவியும் வெளியேறி விட்டாள். யாரும் கவனிக்கவில்லை என்று இருக்க, ஜோதாவின் கண்களில் தான் அகப்பட்டுக் கொண்டோமே என்று திகைத்தாள்.
“ராணி, தங்களுக்கு நான் உடன் வருவது எப்படித் தெரிந்தது?” என்றுக் கேட்டாள்.
“யார், யார் என்னுடன் வந்தார்கள் என்ற விவரம் நான் அறிவேன். மேலும் நம் ராஜபுத்திர வீரமும், விவேகமும் எனக்கும் உள்ளது சகோதரியே” என்றுக் கூறவும், இன்னும் திகைத்தாள் கிரண் தேவி.
“ராணி, நான் யார் என்று தெரியுமா?”
“ ஆம். முதலில் அறியவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினைக்குப் பின் தெரிந்துக் கொண்டேன்”
“எனில், என்னைச் சிறைப்படுத்தாமல் தப்புவிப்பது ஏன் சகோதரி?”
“நானும், நீயும் ஒரே ரத்தம் தானே கிரண் தேவி. உன்னைக் கண்டதில்லையேத் தவிர, நம்