“ஒன்னும் வேண்டாம் ப்ரித்வி. நான் உங்ககிட்டே ஒன்னு கேட்கணுமே?” என்றார்.
“கேளுங்க சார்”
“நீங்க தினமும் கிருத்திகா வீட்டிற்கு வர வழியில் அவளைப் பின் தொடர்ந்து கொண்டு இருக்கீங்களாமே?”
“பின் தொடர்ந்து அவங்களை டிஸ்ட்ரப் பண்றேனா இல்லை பார்த்துட்டுப் போயிடறேனான்னு சொல்லிருப்பாங்களே?”
“ஹ்ம்ம். பார்த்துட்டுத் தான் போறீங்க. தொந்தரவு பண்ணலைன்னு தான் சொன்னாங்க”
“யார் சார் கிருத்திகாவா?”
“இல்லை. என் ஆட்கள்” என்றுக் கூற,
“ஹ்ம்ம். உண்மைதான்”
“ஏன்?”
“எனக்குக் கிருத்திகாவைப் பிடிச்சு இருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்.”
“ஒஹ்” என்று கேட்டவர் “எனக்குச் சம்மதம்” என்றுக் கூறவும் ப்ரித்வி ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“சட்டுன்னு எப்படி ஒத்துகிட்டீங்க சார்?”
“உங்களைப் போன்ற நல்லவர் என்றால் ஏன் தயங்க வேண்டும்?”
“ஆனால் கிருத்தியின் அப்பா, அம்மா இவர்களின் சம்மதம்?
“அவர்கள் இருவரும் நான் சொன்னால் ஒத்துக் கொள்வார்கள்.”
“கிருத்திகாவின் சம்மதம்?”
“கிருத்திகாவிற்கு அதில் சம்மதம் இருப்பதால் தான் உங்களை விட்டு வைத்து இருக்கிறாள்” என , ப்ரிதிவிப் புரியாமல் பார்த்தான்.
“கிருத்திக்கு இது பிடிக்கவில்லை என்றால் அவளே ஆக்ஷனில் இறங்கி இருப்பாள். இல்லை என்னிடம் கூறி இருப்பாள். இரண்டும் இல்லாமல் உங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டாள்.”
ப்ரித்வி சற்று வெட்கம் கலந்த சிரிப்பு சிரிக்கவும், பிரதாப்பும் கட கடவென சத்தமாக சிரித்தார்.
பின் “சீக்கிரம் எங்க வீட்டிற்கு பொண்ணுக் கேட்டு வாங்க?” என்றார்.
“கிருத்தி என்ன நினைக்கிறாள் என்றுத் தெரியவில்லையே. ஒருவேளை அவள் மேலே படிக்கவோ, வேலைப் பார்க்கவோ விரும்பினால் என்ன செய்வது?” என்றுக் கேட்டான்.