நன்றியுடன் ஒரு பார்வை பார்த்ததையும் பார்த்தான்.
ஹும்… மயிலுக்கு போர்வை தந்தான் வள்ளல் பேகன்… ! ப்ச்… ஒரு வெறுப்புடன் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பை ஆன் செய்தான். ஜெமியை பார்ப்பதைவிட உருப்படியாக வேறு எதையாவது செய்வோம்!
அப்போது சத்யனை தேடி வந்த ரஞ்சன் ஒரு முடிவோடு இருந்தான்.. அவனிடம் முக்கியமான விஷயம் பேசியே ஆகவேண்டும் . சத்யன் தன்னுடைய அறையில் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும்... கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்.
"சொல்லுப்பா என்ன விஷயம் ?" என்று சத்தியன் கேட்டான்
"இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று ரஞ்சன் கேட்டான்.
"அந்த சப்ளையர்கள் கொட்டேஷன்களை சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரியான சப்ளையர் தெரிந்தால் தானே நாம் அடுத்த ஆறு மாதத்திற்கு உரிய ஆர்டரை தர முடியும். இந்த குஜராத்தில் கொஞ்சம் குறைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தந்து விடலாமா என்று அப்பாவிடம் டிஸ்கஸ் செய்ய வேண்டும்" என்றான்.
"நல்லது… கொட்டேஷன் விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட்டாய்போல… மற்ற விஷயங்களில்தான் உன்னால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லையோ?"
"இதுக்கு குறிப்பறிவுறுத்தல் என்று இலக்கியத்தில் சொல்லுவாங்க. எதையோ குறிப்பா நீ சொல்ற... என்னன்னு தெளிவா சொன்னாதான் என்னால் சரியான பதிலை சொல்ல முடியும்" என்று சத்யன் சிரித்தான்.
"உன் வேலைய முடிச்சுட்டு சொல்லு. நாம் உட்கார்ந்து அமைதியா பேசலாம் "என்று அவன் பீடிகை போட்டான்.
"எஸ் முடிச்சாச்சு… இப்ப உட்கார்ந்து பேசலாம்" என்று ரஞ்சனுக்கும் இருக்கையை தந்து அமர வைத்தான்.
" இப்ப சொல்லு" என்றான்.
"ஆமா அந்த ஜெமி மேல உனக்கு என்ன கோபம்?"
"அவன் மீது எனக்கு என்ன கோபம்?. ஏதோ அவனை கட்டிப் பிடித்து தரையில் உருண்டு சண்டை போட்டபோது… பிரித்து விட்டு விட்டு கேட்பது போலப் பேசுகிறாயே?"
"நீ இவ்வளவு நீளமாக பேசும்போதே புரிகிறது. உனக்கு அவன் மேல் கோபம் இருக்கிறது."
" அப்படியா அதை நீ எப்போது உணர்ந்தாயாம்"
" நாம் காரில் இருந்து இறங்கும் பொழுது ஜெமி உன்னைக் கூப்பிட்டான். நீ ஆனால் திரும்பி கூட பார்க்காமல்… காது கேளாதது போல் விறுவிறு என்று வீட்டுக்குள் வந்து விட்டாய்"