தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 06 - ராசு
“கந்தசாமி. இது என்ன இப்படி ஒரு அடம்? அப்ப இப்படித்தான் இத்தனை நாளும் இருந்தியா? சாப்பிட்டாத்தானே தெம்பாயிருக்கலாம். வேதா இதை இத்தனை நாளும் என்கிட்ட மறைச்சு தப்பு பண்ணிட்டே.”
மகாலட்சுமி கண்டிப்புடன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் வளர்மதி.
தாயைக் கண்டதும் அமைதியானாள்.
“கல்யாணம் முடியும் வரை நீ வெளியில் எங்கும் போகவேண்டாம்” என்று வளர்மதி அவளிடம் கூறிவிட்டாள். அதனால் அவள் மீது மகாலட்சுமிக்கு கோபம்.
தான் அத்தனை எடுத்துக்கூறியும் அன்னை தன்னை நம்பவில்லையே என்ற கோபம்.
அவள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சொன்னபோதே அவள் தன் மறுப்பைத் தெரிவித்தாள்தான்.
“அப்ப என்னை நீ நம்பலையாம்மா?”
மகள் குரலில் வலியுடன் கேட்டபோது அந்தத் தாயுள்ளம் துடித்துப்போனது. ஆனால் மகள் தனது கிறுக்குத்தனத்தை விடாமல் மீண்டும் திருமணத்தை நிறுத்த ஏதாவது முயற்சி செய்தாளானால்?
நல்லவேளை. ஏற்கனவே நடந்தது எதுவும் வீட்டில் உள்ளவர்களுக்கு உள்ளவர்களுக்குத் தெரியாது. மகாலட்சுமிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் துடித்துப்போவார்கள். மாமனார் கந்தசாமி பேத்தியின் திருமணத்தைப் பார்த்துவிட்டு கண்ணை மூடவேண்டும் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அவள் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்வது தெரிந்தால் அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் மனவேதனை.
அதனால் மகாலட்சுமி தாயுடன் பேசவில்லை.
தாயைக் கண்ட உடன் அமைதியாகிவிட்ட பேத்தியை பெரியவர்கள் இருவருமே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தனர். வளர்மதி அறையை விட்டுச் சென்றுவிட்டாள்.
“என்னடா? உன் அம்மா மீண்டும் உன்னை ஏதாவது சொன்னாளா?” வேதாம்பாள் பேத்தியின் கன்னத்தை மென்மையாக வருடிக் கொண்டே கேட்டார்.
“ஆமாம் வேதா. உன் மருமகளுக்கு வேற வேலையே இல்லை. என்னை சீக்கிரமா வீட்டை விட்டு விரட்டனும்னு நினைக்குது.”
“அப்படி எல்லாம் அம்மாவை சொல்லக்கூடாதுடா. அம்மா உன் நல்லதுக்குத்தானே சொல்றா.” என்று மருமகளுக்குப் பரிந்து பேசினார் வேதாம்பாள்.
“ஊர் உலகத்தில் சண்டை போட்டுக்கிற மாமியார் மருமகளைத்தான் பார்த்திருக்கிறேன். நீ என்னன்னா உன் மருமகளுக்கு சப்போர்ட் பண்றே வேதா?” என்று செல்லமாய் அலுத்துக்கொண்டாள்.