நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”
வைத்துவிட்டான்.
இதையே சொல்லி மிரட்டிக்கிட்டு இருக்கானே. அப்படி என்னதான் செய்யப்போகிறான்?
சிறிது நேரம் கழித்துத்தான் சுகன்யா வந்துசேர்ந்தாள்.
“ஏய் எங்கேடி போய்த்தொலைஞ்சே எருமை?”
“நீயும் அண்ணனும் ரொமான்ஸ் பண்றதைப் பார்த்துட்டு இந்த கன்னிமனம் தடுமாறிடுச்சுன்னா. அதான் அதைப் பத்திரமா பார்த்துக்கிறதுக்காக வெளியில் ஓடிட்டேன். அப்படியே கிச்சன்ல காரப்பனியாரம் செஞ்சுக்கிட்டிருந்தாங்களா? வாசம் இழுத்துடுச்சு. ஒரு பிடி பிடிச்சுட்டு உனக்கும் கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு.”
‘ஆமா. உன் அண்ணன் அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டாலும்.’ முணுமுணுத்தாள்.
“என்ன சொன்னே?”
“இல்லை. எனக்குப் பனியாரம் வேண்டாம்னேன்.”
“ஆமா ஆமா. உனக்கு எப்படி இப்ப சாப்பாடு இறங்கும்?” என்று கிண்டல் செய்தாள் அவள். வீட்டினர் வரும் வரையில் அவளுடன் இருப்பதற்காக தன் அன்னைதான் அவளை இங்கே வரச்சொல்லியிருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.
“கொண்டா லட்சுமி. பாவம் அந்தப் பனியாரம். அது கொடுத்து வச்சது அவ்வளவுதான். நான் சாப்பிடதான் அதுக்கு கொடுத்து வச்சிருக்கு.”
அவளிடம் கொடுத்த பனியாரத்தட்டை தான் வாங்கி மீண்டும் உண்ண ஆரம்பித்தாள்.
“நீ கவலைப்படாதே லட்சுமி. உன் கல்யாணம் முடிகிற வரைக்கும் தினமும் இங்கே வந்து உன்னைப் பார்க்கிறேன்.”
“அதுக்கப்புறம் வர மாட்டியா?”
“அப்ப உனக்கும் அண்ணனுக்கும் இடையில் நான் நந்தி மாதிரி வரமாட்டேன்ப்பா.”
பெரிய மனது செய்து விட்டாள்.
“என்ன பெரிசா அண்ணன் அண்ணன்னு சொல்றே? உனக்கு அவரைப் பத்தி என்ன தெரியும்?”
அவனைப் பற்றி அவள் ஏதாவது அறிந்திருக்கிறாளா? என்று தெரிந்துகொள்வதற்காக கேட்டாள்.
“என் வாயால அண்ணனைப் பத்தி கேட்கனும்னு ஆசைப்படறியா? கள்ளி. உனக்குத் தெரியாததா எனக்குத் தெரியப் போகுது. தோழியோட கணவராகப் போறவர். அதான் அண்ணன்னு சொன்னேன். அப்படி சொல்லக்கூடாதா?”
“நான் ஒன்னும் அப்படி சொல்லலை.”
“அதானே பார்த்தேன். எங்கே நான் அவரை வேற மாதிரி கூப்பிட்டுடுவேனோன்னு உனக்குப் பயம்.” கிண்டல் செய்தாள்.