(Reading time: 17 - 33 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

“நீ என்ன வேணா செய்துக்கோ.” என்றவாறு அவள் பேசாமல் இருந்தாள்.

சுகன்யாவிற்கு தோழியிடம் ஏதோ சரியில்லை என்று புரிந்தது.

“லட்சுமி. என்னாச்சு?” விளையாட்டை விட்டுவிட்டு தோழியின் அருகில் அமர்ந்தாள்.

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“சொல்லு லட்சுமி.”

“அவருக்கு என்னைப் பிடிக்கலையோன்னு நினைக்கிறேன்.”

என்றாள் மெதுவாய்.

“முட்டாளா நீ? யாருக்காவது உன்னைப் பிடிக்காமல் இருக்குமா? அண்ணன் உன்கிட்ட வந்து சொன்னாரா உன்னைப் பிடிக்கலைன்னு.”

“இல்லை.” என்றாள்.

“அப்புறம் என்ன? உனக்கு ஏன் இந்த சந்தேகம்?”

“தெரியலை. ஆனால் எனக்கு அப்படித்தான் தோணுது.”

அவன் தன்னிடம் நடந்துகொண்ட முறையை அவளிடம் கூற மனம் வரவில்லை.

“இதப்பாரு லட்சுமி. நீ தேவையில்லாமல் உன்னைக் குழப்பிக்கிறே. வீட்டில் எல்லாரும் நல்லா யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பாங்க. அண்ணனுக்கும் உன்னைப் பிடிக்கலைன்னா வெளிப்படையா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லியிருப்பாங்க. ஆனால் அண்ணன் அப்படி சொல்லலை. நானும் கேள்விப்பட்ட வரையில் அண்ணனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்றாங்க. நீ கவலைப்படாமல் இரு லட்சுமி. இது எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய கவலைதான்.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கடைக்குச் சென்றிருந்தவர்கள் திரும்பி வந்துவிட்டனர்.

“லட்சுமி. நீ ரொம்ப கொடுத்து வச்சவ. மாப்பிள்ளை என்னமா புடவை பார்த்து பார்த்து எடுத்தார் தெரியுமா? அதிலேயே அவர் உன்னை எப்படி கவனிச்சுப்பார்னு தெரிஞ்சுடுச்சு. நீ அதுக்காகதான் வரலையா?” என்றவாறே வந்தாள் அவளுடைய இளைய சிற்றன்னை.

“ஆமா லட்சுமி. அண்ணன் செலக்ட் பண்ண புடவையை நான் போட்டோ எடுத்துட்டு வந்திருக்கேன். உன் அண்ணனும் இருக்காரே.” என்று அலுத்துக்கொண்டாள் மூத்த அண்ணி.

“மாப்பிள்ளை கையோடு உன் அளவு ஜாக்கெட்டையும் எடுத்துட்டு வரச்சொல்லிட்டார்.”

அவளுக்கு தன் அண்ணி காட்டிய புகைப்படத்தை பார்க்கும் எண்ணமே வரவில்லை.

எல்லோர் முன்பும் தன் மேல் அன்பு இருக்கிறதாக ஏன் அவன் நடிக்க வேண்டும்? இத்தனைக்கும் இவர்கள் தானே அவனை மாப்பிள்ளையாக தேர்தெடுத்தார்கள்? அவன் வலிய இவளைத் தேடி வரவில்லையே. அப்படியிருந்தும் ஏன் அவன் நடிக்க வேண்டும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.