"அதற்கு நான் என்ன செய்வது…" இயலாமையுடன் கேட்டார்.
"அதில் இன்னும் ஒரு சிக்கல் இருக்கிறது. முக அமைப்பின் வரையறைபடி ஏழு வகையான அமைப்புகள் உள்ளன. உங்கள் பெண்ணுக்கு எந்த வகையோ அந்த வடிவத்தில் உள்ள டோனர்தான் வேண்டும்…அதுவும் சீக்கிரமாக வேண்டும்."
இதற்கு அவர் எங்கு போவார்…?
"அப்படி கிடைக்கவில்லை எனில்…" தீனமான குரலில் கேட்டார்.
"செப்டிக் ஆகிவிடும். முகத்தின் தசைகள் சேதமாகி விட்டதால் கிருமிகள் எளிதில் தாக்கும்… முக்கியமான நரம்புகளும் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களும் பாதிக்கப்படலாம்… சுருக்கமாக சொன்னால் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவாகி விடும்."
அவருக்கு வாய்விட்டு 'ஓ'வென்று கதற வேண்டும் போல இருந்தது… இத்தனை முயற்சித்தும் அவரால் ரேச்சலை காப்பாற்ற முடியாதா..
"உங்களுக்காக ஒரு விஷயம் சொல்கிறேன். இதே விபத்தில் அடிபட்டு இறந்துபோன பெண் இங்குதான் வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் முக வடிவம் உங்கள் பெண்ணுக்கு பொருந்தும்.." மதுசூதனன் சொல்லும்போதே மேத்யூஸ் ஊகித்து விட்டார்… மீரா…
"மீரா… இறந்து விட்டாளா?" வாய்விட்டு சொன்னார்.
"உங்களுக்கு தெரியுமா… உங்கள் உறவினரா?"
"இல்லை… அதுவந்து" அவர் தடுமாறினார். மீரா அவருடைய தம்பி மகள் என்று சொல்ல ஆதாரம் எதுவும் இல்லையே… அவளுடைய கணவன்தானே முழு உரிமை உள்ளவன்…
"எனக்கு தெரிந்த பெண். அவளுடைய கணவர் போன் நம்பர் இருக்கிறது… அவருக்கு தெரிவித்து விடுகிறேன்."
"இதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி… நீங்கள் அவருடைய கணவரிடம் பேசி சம்மதம் வாங்குங்கள். நான் மும்பையிலிருந்து ஸ்பெசலிஸ்ட்டை வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன்" மருத்துவர் பரபரப்பானார்.
மீரா… அவள் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி… உயிரை காப்பாற்ற ஓடி வந்து.. விபத்தில் சிக்கி உயிரை விட்டு விட்டாள்… மேத்யூஸால் மீராவிற்காக அழத்தான் முடிந்தது.
"இப்படி அழ இது நேரம் இல்லை மேத்யூஸ். நீங்க அவங்கள்ட்ட பேசுங்க. இந்த உயிரையாவது காப்பாத்தணும்" மதுசூதனன் மருத்துவராக பேசினார்.
அவர் சத்யனிடம் தொடர்பு கொள்ள முடியாமல் காத்திருக்க மீராவின் அப்பா என்று சொல்லிக் கொண்டு தங்கதுரை வந்து விட… வேறுவழியில்லாமல் அவர் தங்கதுரையிடம் பேசினார்…