"அவளுடைய உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லையே டாக்டர்?"
"இப்போது எதுவும் சொல்ல முடியாது. கால் கைகளில் எலும்பு முறிவு… வயிற்றில் அடிபட்டிருக்கு… இதையெல்லாம் சரி செய்து விடலாம். ஆனால்…"
"ஆனால் என்ன டாக்டர்?'
"சாலை ஓரத்தில் இருந்த பொடி ஜல்லி கற்கள் அவங்க முகத்தை துப்பாக்கி குண்டுபோல துளைத்திருக்கின்றன. ரொம்ப டேமேஜ். முழு முகத்திலும் அடிபட்டிருக்கு…. அந்த இடத்தில் இரத்தம் நிற்கவில்லை…"
"ஆபரேஷன் எதுவும் செய்ய முடியுமா?"
"இது போன்று முகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் அடிபட்டிருந்தால் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து சீர் செய்யலாம். இவங்களுக்கு முகத்தில் பாதி பகுதியே காணவில்லை… கட்டுபோட்டிருக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் டாக்டர் மதுசூதனனை பாருங்கள்." என்று அனுப்பி வைத்தார்.
ரேச்சலை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மேத்யூஸும் மதுசூதனிடம் ஆலோசனை செய்தார். அவர் நேரடியாகவே சிக்கலை விளக்கினார்.
"இது போன்ற நிலையில் முகமாற்று அறுவை சிகிச்சைதான் சிறந்த வழியாக இருக்கும்."
"எனக்கு தெளிவாக சொல்லுங்கள் டாக்டர்"
"பழுதான நுரையீரல்.. இதயத்தை ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்வதுபோலத்தான் இதுவும்… முகமாற்று சிகிச்சை… "
"உடனே அதை செய்யுங்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்… எனக்கு என் மகள் நலமாக வேண்டும்"
"இது பணம் மட்டுமே முடிவு செய்யும் விஷயமில்லை மேத்யூஸ் சார். இந்த வகையான அறுவை சிகிச்சை இந்தியாவில் செய்யப்படுவதில்லை. அதற்கான ஸ்பெஷலிஸ்ட் இங்கில்லை. மும்பையில் உள்ள மருத்துவமனையுடன் எங்களுக்கு தொடர்பு உண்டு. அங்கு வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வருவார்கள். அவர்கள் மூலம் ஸ்பெஷலிஸ்ட்டை வரவழைத்து விடலாம்."
"வேறு என்ன செய்ய வேண்டும் டாக்டர்?"
"மற்ற ப்ளாஸ்டிக் சர்ஜரிபோல இது இல்லை. முழு முகத்தையும் மாற்ற வேண்டும். அதற்கு டோனர் வேண்டும். அதை இறந்துபோன உடலில் இருந்துதான் பெற முடியும். இறந்து போனவரின் முகத்திலிருந்து வாய்… மூக்கு இவற்றை உள்ளடக்கிய முக்கோண வடிவ மேல் உறை வேண்டும். அதனை இந்த நோயாளிக்கு பொருத்தினால் உயிர் பிழைக்கலாம்."