“நீயே யோசிச்சுப் பாரு, சிபாரிசுல வேலைக்கு சேர்ந்தா நல்லா இருக்குமா? அதைப் பத்தி தெரிஞ்சவங்க நான் ஒரு லீடா எடுக்குற முடிவுகளை மதிப்பாங்களா??”
சரவணன் நட்புடன் மனோஜின் முதுகில் தட்டினான்.
“எனக்குப் புரியுது மனோஜ்! நானும் இதே போல தான் யோசிப்பேன்... நீங்க எடுத்த முடிவுல எந்த தப்பும் கிடையாது...”
சரவணனின் சப்போர்ட் கிடைத்த நிம்மதி உணர்வை மனோஜ் முழுவதுமாக அனுபவிக்கும் முன்,
“ஏன் மனோஜ், இதை நீங்க என் கிட்ட முதலேயே சொல்லலை???” என்ற அமுதாவின் கேள்வி வில்லாக சீறிப் பாய்ந்து வந்தது!
விட்டால் அடித்து விடுபவளைப் போயல அமுதா கேட்கவும், சரவணன் மனைவியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்...!
மனோஜுக்கு இப்போதும் சிரிப்பு வந்தது... இந்த தடவை அதை மறைக்க முயலாமல் புன்னகைப் புரிந்தான்...
“தேங்க்ஸ் சரவணன்...” என்றவன், அமுதாவிடம்,
“ஃபர்ஸ்ட் டே புது ஜாப்ல ஜாயின் செய்திருக்கேன்... அன்னைக்கே என் பாஸ் மனைவி கிட்ட நான் தான் ரூடா பேசி அவங்க ரெகமென்ட் செய்த வேலை வேண்டாம்னு சொன்னேன்னு எப்படி சொல்றது அமுதா? சொல்ல ரொம்ப தயக்கமா இருந்தது... இப்போ கூட இதை நான் சொல்லக் காரணம் மஞ்சுவுக்காக தான்... நீ அவளோட க்ளோஸ் ஃபிரென்டா இருந்தாலும் நீ அவ மேல இப்படி கோபப் படுறது எனக்கு சுத்தமா பிடிக்கலை...”
மனோஜ் பக்கம் தீயாக ‘லுக்’ ஒன்றைக் கொடுத்தாள் அமுதா...