”ஈசனை மறந்துட்டியா”
“அவரை நான் மறக்கலை”
”அப்போ என்னை தெய்வம்ங்கற”
”என்ன செய்றது, வரம் தர்றவங்களை தெய்வம்னுதானே சொல்வாங்க, இப்போதைக்கு உன்கிட்ட நான் வேண்டறது ஒண்ணுதான் என் அப்பா அம்மாவை அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க அனுமதி தரனும் ப்ளீஸ்” என கெஞ்ச அவளோ சில நிமிடங்கள் பலமாக யோசித்தாள், எங்கே அவள் முடியாது என்பாளோ என நினைத்து கொம்பனும் பயந்தபடி நின்றான். முடிவில் அவளே
”நீ சொன்ன காரணம் சரின்னு பட்டதால மட்டுமே உன் அப்பா அம்மாவை அனுப்ப அனுமதி தரேன், இதுல ஏதாவது வில்லங்கம் வைச்சிருந்த அப்புறம் பாதிக்கப்படப்போறது நீயில்லை உன்னை பெத்தவங்கதான் அதை மனசுல வைச்சிக்க”
”சரி சரி அப்படி ஏதும் நடக்காது”
”அவங்க கிளம்பறதுக்கு ஏற்பாடு செய்”
”சரி இப்பவே செய்றேன்” என சொல்லியவன் சந்தோஷமாக கிளம்பி தன் தாய் தந்தையிடம் விவரத்தை கூறி அவர்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யலானான்.
அதற்குள் காவேரி குளித்து முடித்துவர கொம்பனின் தாயார் தயாராக டிபன் செய்து அவளுக்கு பரிமாறவும் அவளும் அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டு முடித்தாள். இனி அவளது மாமனார் மாமியார் கிளம்ப வேண்டும், வீட்டிற்கு வெளியே கொம்பன் கண்கள் கலங்கியபடி நின்றிருக்க அவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தனர் அவனது பெற்றோர்கள்