கண்டறிந்த தீர்வையும் சொல்ல உதயமூர்த்தி அவளின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டார், அப்போதே அவள் கேட்கும் தகவலை தந்து உதவினார்.
இது இப்படியிருக்க மறுபக்கம் கோவலனோ கோபத்துடன் கம்பெனிக்குள் நுழைந்தான், அங்கு அனைவருமே எழுந்து அவனுக்கு மரியாதை தர அவனோ அதை வெறுத்து விட்டு தன் அறைக்குச் சென்றான், அவனது இந்த கோபத்தைக்கண்டதும் மாதவிக்கு சிரிப்பே வந்தது
”ஐ சூப்பரு, கண்ணகி காலேஜ்க்கு பாடம் எடுத்த மாதிரி தெரியலை தாளாளருக்கு பாடம் எடுத்த மாதிரியிருக்கு, இனி தினம் தினம் முதலாளிக்கு ஆப்புதான், ஏற்கனவே அவரோட முகம் சிடுமூஞ்சியாட்டம் இருக்கும் இப்ப பாரு தேவாங்கு மாதிரியிருக்கு, எது எப்படியோ என்னை பாடாய்படுத்தினதுக்கு இது அவருக்கு தேவைதான், அனுபவி ராஜா அனுபவி” என அவள் நினைத்து மகிழ்ந்த நேரம் உடனே அவளுக்கு அவனிடம் இருந்து அழைப்பு வர நொந்துப் போனாள்
”போச்சிடா என்னை எதுக்கு வரசொல்றான்னு தெரியலையே நேத்துதானே ப்ராஜெக்ட் முடிச்சேன் மறுபடியும் என்னவாம் அந்த தேவாங்குக்கு” என மனதுள் திட்டிக் கொண்டெ சென்றாள்.
அறையில் கோவலனோ இருக்கையில் அமராமல் கல்லூரியில் நடந்ததை நினைத்து நினைத்து வெறுப்புற்று அங்கும் இங்கும் நடக்கலானான். மாதவி கதவை தட்ட
”உள்ள வா” என எரிந்துவிழ அவளோ
”ஆஹா ஆரம்பமே இப்படியிருக்கே, இன்னிக்கு நான்தான் பலியாடா, ஷ்ஷ் யப்பா எதுக்கும் நாம திடமா போகலாம், எதையும் தாங்கும் இதயம் பெண்களுக்கு படைச்சதாலயோ என்னவோ இந்த ஆண்கள்கிட்ட மாட்டிக்கிட்டு அல்லாட வேண்டியதா இருக்கு”
”உள்ள வான்னு சொன்னேன்” என அவன் கத்த
“இருடா வரேன் அவசரகுடுக்கை நிம்மதியா மனசுக்குள்ள புலம்ப கூட விடமாட்டேங்கறான்”