மிருதுளா இன்னிக்கு நீ செய்த சமையல் நல்லாயிருந்தாலும் நான் இன்னிக்கு தந்த போட்டியில நீ முதல்லயே தோத்துட்ட கொடுத்த பணத்தில சிக்கனம் செய்ய முடியலைன்னாலும் பரவாயில்லை. குறைவா வாங்கி வைக்க வேண்டியதை அளவுக்கு அதிகமா வாங்கியிருக்க இந்த பழக்கம்தான் மற்ற விசயங்கள்லயும் வரும்.
எல்லாத்திலயும் நீ இப்படி ஆடம்பரமா செலவு செய்துக்கிட்டு இருந்தா ரொம்ப கஷ்டம் இப்பவே கொஞ்சம் மாறிக்க பாரு. தேவைக்கேத்த மாதிரி செலவு செய். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்வாங்க. அசைவம் சாப்பிடற பழக்கத்தை கொஞ்சம் குறைச்சிக்க இல்லைன்னா அதுவே உன்னை வீழ்ச்சியடைய வைச்சிடும்” என சொல்லிவிட்டு நந்தினியை பார்த்தார்
”இன்னிக்கு உன்னோட புத்திசாலித்தனம் கண்கூடாவே தெரிஞ்சிருக்கு இந்த ஊரு உனக்கு புதுசுன்னாலும் டிரைவர்கிட்டயும் உன் கூட வந்த வேலையாள் கிட்டயும் நீ எதையும் கேட்காம சொந்தமா முயற்சி பண்ணி பொருட்களை வாங்கியிருக்க. அதை வெச்சி நல்லாவே சமைச்சும் போட்டிருக்க ரொம்ப சந்தோஷம் இன்னிக்கு உன்னோட புத்திசாலித்தனத்துக்கும் ப்ளஸ் சமையலுக்கும் முழு மதிப்பெண்கள் தரேன்” என சொல்லவும் நந்தினிக்கு இருப்பு கொள்ளவில்லை அவள் சந்தோஷத்தில் மிதந்தாள்.
அந்நேரம் ஒரு வேலையாள் கையில் பெரிய சைஸ் கருப்பு போர்டு ஒன்றை கொண்டு வந்து நீட்ட அதைப்பார்த்தவர் அதை ஹாலில் ஒரு முக்கியமான மூலையாக பார்த்து வைக்க சொல்லிவிட்டு அர்ஜூனை அழைத்தார்
”அர்ஜூன் இந்த டைரியில இருக்கற மாதிரி கட்டங்கள் வரைஞ்சிடு. நான் மார்க் எழுதறேன்” என சொல்லவும் அர்ஜூனும் அந்த கருப்பு போர்டில் கட்டங்கள் வரைந்து அதிலிருந்த மாதிரியே எழுதி வரைந்து முடித்தான். அவன் முடித்த கையோடு தாத்தா அவரவர்களின் மார்க்குகளை அதில் எழுதினார்.