முடிந்தவரை அதிர்ச்சியான சம்பவங்களை கூற வேண்டாம் என டாக்டர் சொன்னதால் சம்யுக்தாவை பற்றி அவரிடம் சொல்லாமல் இருந்தார்கள் ஆனால், அவரோ மீண்டும் மீண்டும் அவளைப் பற்றியே கேட்க கேட்க அவர்களால் என்ன செய்வதென தெரியாமல் சம்யுக்தாவை பற்றி கூற அவருக்கு அதிர்ச்சியில் மீண்டும் நெஞ்சு வலி ஏற்படவே அனைவரும் அதிர்ந்தார்கள்.
அவருக்கு மீண்டும் வைத்தியம் பார்த்தனர் வைத்தியர்கள். 2 நாட்கள் கழித்து மீண்டும் அவரின் உடல் நிலை சரியானது. இப்போது அவர் தன் மகளை நினைத்து வருந்தினார்
”அவள் எதுக்காக அங்க போகனும், தில்லையே ஒரு தாதா, என் பொண்ணு தெரியாம அவன்கிட்ட போய் மாட்டிகிட்டாளே, அவளை யாராவது காப்பாத்தக் கூடாதா” என புலம்ப அதற்கு சுற்றியிருந்தவர்களும் அவருக்கு சமாதானம் செய்தார்கள்
”போகலாம்னு நினைச்சேன் ஆனா, எங்க போக விட்டானுங்க, அந்த தில்லையோட அடியாளுங்க நம்மளை இங்கயே பிடிச்சி வைச்சிட்டானுங்க, இதுல தில்லைக்கு தெரிஞ்சவன்தான் உங்களுக்கு ஆப்ரேஷன் செஞ்சி பிழைக்க வைச்சான்” என்றார் கைலாசம்
”அப்படியா“ என சந்தேகமாக கேட்க
”ஆமாம் போலீஸ்கிட்ட போவோம்னு சொன்னாகூட அவங்க பயப்படலை, தாராளமா போங்க உங்க பொண்ணுதான் தில்லையை பார்க்கப் போனா, அவளே திரும்பி வருவா, அதுவரைக்கும் நீங்க அமைதியா இருங்க இல்லைன்னா உங்க பொண்ணுக்குதான் ஆபத்துன்னு மிரட்டறாங்க” என சிவரஞ்சனி சொல்ல அதைக் கேட்டு சிவசங்கரன் குழம்பினார்
”கல்யாணத்தை எதுக்காக நிறுத்தனும், என்னை எதுக்காக காப்பாத்தனும், சம்யுக்தாவை எதுக்காக இத்தனை நாளா தன்கூடவே வைச்சிருக்கனும், இதுல ஏதோ விசயம் இருக்கு ரஞ்சினி”
”அப்படி எதுவும் இல்லை நம்ம பொண்ணு மேலதான் தப்பு”
”இல்லை முதல்ல தில்லை எதுக்காக நம்ம பொண்ணு கல்யாணத்தை நிப்பாட்டனும், எனக்கும் அவனுக்கும் பெரிசா தொடர்பு இல்லையே”