(Reading time: 29 - 58 minutes)

ந்த வீட்டினுள் இருப்பதே பவித்ராவிற்கு ஏதோ தண்டனை அனுபவிப்பது போல் இருந்தது. ஆனால் என்ன முயற்சி செய்தும் அவளால் அங்கிருந்து எங்கும் செல்ல இயலவில்லை.

அவள் தான் ப்ராஜெக்ட் செய்வதற்கு பெரியப்பா வீட்டில் தங்கி இருக்கப் போகிறேன் என்று அடம் பிடித்து வந்தாள். இனியா அக்கா எப்போதுமே அவளுக்கு மிகவும் பிடித்த அக்கா. தனக்கு ஒரு தோழியாய் வழிகாட்டியாய் திகழ்பவள். ஜோதி அக்காவும் அவளுடன் இனிமையாக பழகுபவள்.  அவர்களுடன் சிறிது நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்று தான் அவள் இங்கு வந்தாள். ஆனால் இங்கே வந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறி விட்டது.

வந்த முதல் நாளே சந்துருவை பார்த்த உடனே ஏனோ அவளுக்கு அவனை பிடித்து போய் விட்டது. அதை அவள் காதல் என்றெல்லாம் எண்ணவில்லை. அது தான் அவனை பார்த்த சிறிது நேரத்திலேயே அவளின் எண்ணம் இடிந்து போய் விட்டதே. ஏதோ பஸ்லயோ இல்ல வேற ஏதாவது இடத்துல யாரையாச்சும் பார்க்கும் போது நமக்கு ஏதோ க்ளோஸ் ஆனவங்க மாதிரி ஒரு பீல் வரும், ஆனா அவங்க நமக்கு பழக்கமானவங்களா இருக்க மாட்டாங்க. அது மாதிரி இதை எடுத்துக்க அவ தயாரா தான் இருக்கா. ஆனா அவன் வீட்டுலையே தங்கிக்கிட்டு அவனை ஒவ்வொரு முறையும் பார்க்கறதை அவளால தாங்கிக்கவே முடியலை.

அவனும் ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி கொடுக்கிற பார்வையை அவளால பார்க்க முடியலை. ஒவ்வொரு முறையும் அவன் முதல் முதலா தனியா பேசிக்கிட்டு நின்னானே அது தான் அவ கண் முன்னாடி வந்து நிக்குது.

இந்த எண்ணங்களை மறக்கறதுக்கு கொஞ்சம் டைம் அவளுக்கு தேவைப்படுது. ஆனா அவங்க அப்பாவோ அக்கா திரும்ப கிடைச்ச சந்தோசத்துல இருக்கார். இப்ப அவர் எதையும் காது கொடுத்து கேட்கற மன நிலையில கூட இல்லை.

வெகு நேரமாக ஜோதி வீட்டிற்கு கிளம்பி போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அவளால் யாரிடமும் சென்று பெர்மிஷன் கேட்க முடியவில்லை. அட்லீஸ்ட் ஒரு இரண்டு நாட்களாவது அவளுக்கு இங்கிருந்து வெளியே சென்று தங்க வேண்டும் போல் இருந்தது.. ஆனால் இங்கு யாரும் அவளுக்கு அந்த தனிமையை கொடுப்பதாக இல்லை. எனவே ஜோதியின் வீட்டிற்கு சென்று விட்டு உடனே வந்து விடுவதாக சொல்லி விட்டு, அங்கு சென்று ஜோதியை விட்டு இவர்களிடம் பெர்மிஷன் வாங்க வேண்டும் என்றெல்லாம் பிளான் போட்டு விட்டாள்.

ஆனால் அதற்கு முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டுமே. அவள் தந்தையும் வெகு நேரமாக எங்கோ வெளியில் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அவரின் அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தான் ஜோதியின் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னால் அவரே அழைத்துக் கொண்டு போய் திரும்ப கூட்டிக் கொண்டு வந்து விடுவார் என்று எண்ணி அவளும் அவள் தந்தை சென்றவுடன் போய் அத்தையிடம் கேட்டு விட்டு கிளம்பலாம் என்று எண்ணிக் காத்திருக்க அவள் தந்தையோ அக்காவை விட்டு விலக பிடிக்காதவராக பேசிக் கொண்டிருக்கிறார்.

ரு வழியாக அவர் கிளம்பி சென்றவுடன் அவர் எப்போது செல்வார் என்று மாடியின் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா ஒரு ஐந்து நிமிடமாவது போகட்டும் என்று எண்ணி காத்துக் கொண்டிருக்க அதற்குள் இளவரசன் வீட்டிற்கு வந்து விட்டான்.

அப்போது தான் கீழே வர காலெடுத்த பவித்ரா அப்படியே நின்று விட்டாள். இப்போது போனாலும் அவளின் அத்தை இளவரசனை கொண்டு விட்டு திரும்ப கூட்டிக் கொண்டு வர சொல்லி விடுவார் என பயந்தாள்.

சிறிது நேரத்தில் அவனும் கிளம்பி விட இந்த முறை சிறிது நேரம் கூட வெயிட் செய்யாமல் கீழே வந்தாள் பவித்ரா.

“அத்தை”

“சொல்லு மா. ஏதாச்சும் வேணுமா”

“இல்ல அத்தை. நான் ஜோதி அக்கா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா”

“நாளைக்கு போயிட்டு வாயேன் மா. உன்னை கூட்டிட்டு போயிட்டு வர கூட யாரும் இல்லையே. இப்ப தான் இளவரசன் வந்து போனான். கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லிருக்கலாம் இல்ல”

“பரவால்ல அத்தை. அதனால என்ன. நான் போயிக்குவேன் அத்தை. ஒன்னும் பிரச்சனை இல்ல”

“இல்லம்மா. உன்னை எப்படி தனியா அனுப்ப முடியும். உனக்கே இந்த ஊரு புதுசு. நீ எப்படி போவ”

“இல்ல அத்தை. நான் போயிக்குவேன். ப்ளீஸ் அத்தை. வரும் போது வேணும்னா பாலு மாமா கூட வரேன் அத்தை”

“இல்லம்மா” என்று அவர் திரும்ப மறுத்து கூறிக் கொண்டிருக்கும் போதே சந்துரு உள்ளே நுழைந்தான்.

அவனை பார்த்து புன்னகைத்த ராஜலக்ஷ்மி “சரியான டைம்க்கு தான் வந்திருக்க டா. இப்ப தான் இந்த பொண்ணு ஜோதி வீட்டுக்கு போகணும்னு ஒரே அடம். புது ஊரு, எப்படி தனியா அனுப்பறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ளே நீயே வந்திட்ட. இப்ப தான் நிம்மதியா இருக்கு. நீ கொஞ்சம் இவளை ஜோதி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு இருந்து நீயே திரும்ப கூட்டிட்டு வந்திடு. சரியா” என்றார்.

அதைக் கேட்ட உடனே இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்தனர்.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

“இல்ல அத்தை” என்று பவித்ரா ஆரம்பிக்கும் போதே,

சந்துருவும் “இல்ல மா கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.

“என்னடா வேலை. பவித்ராக்கு இந்த ஊரு புதுசு, அவளை தனியா அனுப்ப முடியாதுன்னு சொல்றேன். அவளை விட்டுட்டு வேணும்னா நீ உன் வேலையை பார்த்துட்டு திரும்ப போய் அவளை கூட்டிட்டு வந்திடு” என்று ஆணை போல் கூறவும் அவனால் எதுவும் சொல்ல இயலவில்லை.

“ம்ம். சரி” என்று முணுமுணுத்தான்.

பவித்ராவாலும் எதுவும் சொல்ல இயலாமல் அமைதியாக அவனுடன் சென்றாள்.

பவித்ரா காரின் அருகில் சென்று சிறிது தயங்கி பின்பு முன் பக்கம் அமர்ந்தாள். சந்துருவும் அவளின் தயக்கத்தை கவனித்தான்.

ஓரிரு பார்வை பரிமாற்றங்கள் தவிர, இருவரும் ஏதும் பேசிக் கொள்ளாமல் அமைதியாகவே அந்த பயணம் சென்றது.

பவித்ராவிற்கோ முதலில் கலகலவென பேசியவன் இப்போது அமைதியே வடிவாக வருவதை அவளால் தாங்க இயலவில்லை. அவன் நார்மலாக பேசினாலாவது தானும் நார்மலாக இருக்க முயற்சி செய்யலாம். ஆனால் அவனோ வாயை திறந்தால் தானே.

சந்துருவோ யாரென்றே தெரியாத நிலையில் வாயை மூடாமல் பேசியவள் இப்போது வாயை திறக்க கூலி கேட்பவள் போல அமைதியாக வருகிறாளே என்று வருத்தமாக இருந்தது.

இருவரும் இப்படி மனதில் எண்ணிக் கொண்டார்களே தவிர வாய் திறந்து பேசவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.