(Reading time: 41 - 82 minutes)

னியா சுற்றி பார்த்தாள். எல்லோரும் அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியை பற்றி சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தனர். யார் கண்களிலும் உறக்கம் சற்றும் இல்லை. எல்லோரும் இங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தான் மட்டும் தனியே சென்று போன் பேசுவது நன்றாக இருக்காது என்று எண்ணி “நோ வே. எல்லாரும் இங்க ரொம்ப நல்ல மூட்ல பேசிட்டு இருக்காங்க. எப்படி தனியா வந்து பேசறது. நாளைக்கு பேசலாம் ப்ளீஸ்” என்று இரண்டு மூன்று ஸ்மைலீ போட்டு மெசேஜ் அனுப்பினாள்.

அவனும் சரி என்று அமைதியாகி விட்டான்.

ஜோதி ஏதேதோ பேசி அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தாள். பாலுவும் அவளோடு சேர்ந்து கிண்டல் செய்தான்.

இனியா “மாமா. யூ டூ” என்று யூ டூ ப்ரூட்டஸ் என்பது போல் கேட்டாள்.

எல்லோரும் அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

ராஜகோபால் அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் தலையை தடவி “இப்ப தான் நீங்க எல்லாம் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே வந்துடுச்சி, இப்ப உனக்கும் கல்யாணம் ஆக போகுது” என்றார்.

இனியா இமைக்காமல் அவள் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு காலத்தில் மனைவியை விட தங்கைகள் தான் முக்கியம் என்பது போல அவரின் தன்கைகளுக்கே முக்கியத்துவம் தந்தவர். அதற்காக அவர் மனைவியை கொடுமை படுத்தினார் என்று இல்லை. ஆனால் அவர் தரும் ஆதரவால் அவள் அத்தைகள் அவளின் அம்மாவை எத்தனயோ முறை இழிவுப் படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் ஜாக்கிரதையாக தந்தை இல்லாத போது செய்தார்கள். ஆனால் அவளின் தாயோ எதையும் கணவரிடம் கூறியதில்லை.

ஆனால் அவளின் அத்தைகளோ லக்ஷ்மி எங்களை எல்லாம் மதிக்கறதே இல்லை, இப்படி செஞ்சா, அப்படி செஞ்சா என்று தேவை இல்லாமல் போட்டுக் கொடுத்து அவரிடம் லக்ஷ்மியை திட்டு வாங்க வைத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டிருந்த தாயின் மேல் இனியாவிற்கு கோபம் என்று தான் சொல்ல வேண்டும். அவள் அதை தாயிடம் கேட்கும் போது லக்ஷ்மி “அவருக்கு அவங்க மேல பாசம் அதிகம் டீ. அவங்களை பத்தி தெரிஞ்சா அவர் கஷ்டப் படுவார். அவங்களும் தான் என்ன வருஷம் பூராவா இங்க இருக்க போறாங்க. ஏதோ ரெண்டு மூணு தடவை வருவாங்க. அப்ப தானே ஏதோ என்னை குறை சொல்லி திட்ட வைப்பாங்க. மீதி நாள்ல எல்லாம் நான் நல்லா தானே இருக்கேன். விடுடீ. ஒருத்தவங்க மேல பாசம் இருந்தா அவங்களுக்கு பிடிச்சவங்க மேலையும் நாம பாசம் வைக்கணும்” கூறிய வார்த்தைகள் தான் தாயின் மேல் அவளுக்கு அளவு கடந்த பாசத்தையும், தாயின் அன்பை புரிந்து கொள்ளாதவராக இருக்கிறாரே என்று தந்தையின் மேல் கோபத்தையும் உண்டாக்கியது.

இனியாவிற்கு எப்போதுமே அம்மாவோட அன்பை விட அப்பாவோட அன்பு குறைவு தான் என்ற எண்ணம் உண்டு.

அதை விட இதற்கு காரணமான அத்தைகள் மேல் இவர் இவ்வளவு பாசமாக இருக்கிறாரே என்ற கோபம் அதிகமாக உண்டு.

ஆனால் இன்றோ அவளின் அத்தைகள் வந்தும் அவர் அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அவர் அவர்களை கூப்பிடவில்லை என்பது கேள்விப்பட்ட பின்பு அவளுக்கு அதிர்ச்சி தான். அவளின் அம்மா தான் அவர்களை போனில் அழைத்தார்களாம். ஆனால் எப்போதுமே அவளின் அத்தைகள் வீட்டில், சின்ன பங்ஷனாக இருந்தாலும் நேரில் வந்து அழைக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். அதை விட அப்பா கூப்பிடாமல் அம்மா ஜஸ்ட் போனில் அழைத்ததற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது பெரிய விஷயம் தான். அதிலும் அவர்களே வந்து பேசியும் அவளின் தந்தை  பேசாதது அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.

“எங்க கிட்ட பேச மாட்டியா அண்ணா” என்று அவர்கள் கேட்டதற்கு அவர் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு “என் பொண்ணை பத்தி தப்பா பேசினவங்க கிட்ட எனக்கென்ன பேச்சு. பொறுமைக்கு ஒரு அளவு இருக்குன்னு நீங்க இன்னைக்காவது தெரிஞ்சிக்கணும். இன்னைக்கு என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். அந்த சந்தோசத்தை கெடுத்துடாதீங்க.” என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

அவர் இப்படி சொல்லி சென்ற பின் அத்தைகளின் முகத்தில் தெரிந்த வருத்தத்தை பார்த்தவளுக்கே வருத்தமாகி விட்டது.

அவர்கள் இனியாவிடம் வந்து “இந்த அத்தைங்களை மன்னிச்சிடு தாயி, ஏதேதோ பண்ணிட்டோம். தப்பு தான். மன்னிச்சிடு, நீ நல்லா இருக்கணும்” என்று கூறி விட்டு சென்று விட்டார்கள்.

இத்தனை வருடங்களில் அவரின் தங்கைகளை ஒரு வார்த்தை சொல்லாத தந்தை இன்று தனக்காக அவர்களிடம் முகம் திருப்பிக் கொண்டு போனதை என்னவென்று சொல்வது.

“தேங்க்ஸ் அப்பா” என்றாள்.

“என் பொண்ணு அவ அப்பாக்கே தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டா.” என்ற படி சிரித்தார்.

“பெண் குழந்தைன்றதை நினைச்சி நான் எப்பவுமே வருத்தப் பட்டதில்லை. பெருமையா தான் இருக்கும். ஆனா இன்னைக்கு ரெண்டு பொண்ணையும் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு அவங்க இல்லாம தனியா இருக்கணும்ன்னு நினைச்சா வருத்தமா தான் இருக்கும்மா” என்றார்.

“என்னப்பா இது இப்படி சொல்றீங்க. அக்கா இந்த ஊர்ல தான் இருக்கு. நானும் இங்க கிட்டவே தான் இருக்க போறோம். அதுவும் உங்க தங்கச்சி வீட்டுலையே மருமகளா போக போறேன். இதுக்கு போய் நீங்க வருத்தப் படலாமா. நானும் அக்காவும் மாத்தி மாத்தி ஷிப்ட் போட்டு வந்து இங்க தங்கிட மாட்டோம். உங்களுக்கு அப்படி எல்லாம் நாங்க ப்ரைவசி கொடுக்க மாட்டோம்ப்பா” என்று கூறி சிரித்து, அவரையும் சிரிக்க வைத்தாள் இனியா.

ஒரு வழியாக எல்லோரும் பேசி முடித்து கீழே இறங்கி செல்லும் போது மணி 11.35.

இனியா அவளின் தாயை கட்டி அணைத்து “தேங்க்ஸ் ம்மா” என்றாள்.

“இத்தனை நாள் உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காம இருந்தத்துக்கு நான் தான் சாரி சொல்லணும், நீ ஏன் மா தேங்க்ஸ் சொல்ற”

“ஐயோ அம்மா. நீங்களும் ஏதாச்சும் காரணத்துக்காக தான் வேண்டாம்ன்னு சொல்லுறீங்கன்னு எனக்கு தெரியும்மா”

“எது எப்படியோ, மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்குவார்ன்னு எனக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சி, பொண்ணை பெத்த அம்மாக்கு வேற என்ன வேணும் சொல்லு” என்று அவரின் மனதில் இப்போது எந்த சலனமும் இல்லை என்பதை மகளுக்கு தெரிவித்தார் லக்ஷ்மி.

னியா அவளின் அறைக்கு சென்று உறங்க முயற்சி செய்து தோற்று போய் கடைசியாக இளவரசனுக்கு போன் செய்தாள்.

அவள் போன் செய்த இரண்டாம் ரிங்கிலேயே அவன் எடுத்து விட்டான்.

“ஏய் என்ன. உடனே எடுத்துட்டீங்க. நீங்க தூங்கி இருப்பீங்களோ. பண்ணலாமா, வேண்டாமான்னு எல்லாம் யோசிச்சிட்டே பண்ணேன்”

“இன்னைக்கு என்ன மாதிரி ஒரு நாள். நானே தூங்க நினைச்சாலும் தூக்க வரமாட்டுது டீ”

“ஆமா இளா. நானும் வந்து தூங்க ட்ரை பண்ணேன். பட் முடியலை. அது என்ன இளா ரொம்ப சந்தோசமா இருந்தாலும் தூக்கம் வர மாட்டுது, ரொம்ப கஷ்டமா இருந்தாலும் தூக்கம் வர மாட்டுது”

“அது அப்படி தான். இப்ப அதெல்லாம் ஆராய்ச்சி பண்றதுக்கு டைம் இல்ல. பேச வேண்டியதே நிறைய இருக்கு”

“ஓஹோ. அப்படியா. எனக்கு கூட சண்டை போட வேண்டியது நிறைய இருக்கு”

“ஏண்டி உனக்கு நேரம் காலமே கிடையாது. பண்ணிரண்டு மணி ஆக போகுது. இப்ப கூட சண்டைக்கு அலையற”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.