(Reading time: 41 - 82 minutes)

ஜோதி “என்ன மாப்பிள்ளை சார் ரெண்டு நாள் முன்னாடி நிச்சயம் பண்ணிட்டு இப்ப போய் இந்த கேள்வி கேட்கறீங்க” என்றாள்.

“நான் இதை சொல்லலைங்க. நிச்சயம் ஒரு பக்கம் இருக்கட்டும், அது இல்லைன்னாலும் நான் உங்க தங்கச்சிக்கு என்ன முறை”

“அது உங்களுக்கு தெரியாதாக்கும், சரி, மாமா முறை. அதுக்கு என்ன இப்ப”

“அதுக்கு ஒன்னும் இல்ல, நீங்க சொன்னதுக்கு தேங்க்ஸ்” என்று கூறி விட்டு இனியாவிடம் திரும்பி “கேட்டியா, உங்க அக்காவே சொல்லிட்டாங்க” என்று சொல்லி விட்டு அவளிடம் நெற்றிக் கண்ணை திறப்பதை போல் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜோதி சிரிக்க, இளவரசன் திரும்பி “ஹிஹிஹி” என்றான்.

பின்பு எல்லோரும் சேர்ந்து சிடியை போட்டு பார்க்க அதில் போட்டோவே தேவலாம் என்று அவர்களின் ஒவ்வொரு அசைவும் தென்பட்டது.

அதை பார்த்து இனியா தலையில் அடித்துக் கொள்ள இளவரசன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வீடியோவையும் பார்த்து முடித்து விட்டு பெரியவர்கள் ஒரு புறமும், சிறியவர்கள் ஒரு புறமும் பேசிக் கொண்டிருந்தனர்.

இளவரசன் “இனியா உன் லேப்டாப் எங்கே” என்று கேட்டான்.

“ஏன் என் ரூம்ல தான் இருக்கு”

“சரி வா. வந்து எனக்கு இந்த சிடியை பென்டிரைவ் ல காபி செஞ்சி குடு” என்றான் சுவாதீனமாக.

அதைக் கேட்டு இனியா அதிர அவன் சிரித்தான்.

இனியா முடியாது என்பதாக தலையசைக்க, அவன் திரும்ப ஜோதியிடம் பஞ்சாயத்து வைத்து அனுமதி பெற்று அவளின் அறைக்கு சென்றான்.

இனியா லேப்டாப்பை எடுத்து சிடி போட்டு அதை காபி செய்ய ஆரம்பிக்க இளவரசன் பொறுமையாக அவளின் அறையை பார்வையிட்டான்.

“சிடில இருந்து காபியாக கொஞ்ச நேரம் ஆகும்”

“அதான் தெரியுமே” என்றவாறு கண் இமைக்கும் நேரத்தில் அவளருகே வந்து அவளை அப்படியே தூக்கினான் இளவரசன்.

திடீரென்று அவன் தூக்கியதில் ஒன்றும் புரியாமல் விழித்தவள் “இளா என்ன பண்றீங்க. ப்ளீஸ் இறக்கி விடுங்க.” என்றாள்.

“நோ டார்லிங். அதெல்லாம் விட முடியாது. இந்த நிமிசத்துக்காக நான் எப்படி காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா” என்றவனின் குரல் மோகத்தில் மிதந்து வந்தது.

அந்த நிமிடத்தில் அவனை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் விழித்தாள் இனியா.

“விடுங்க இளா. ப்ளீஸ்”

ஏதும் பேசாமல் அவளின் முகத்தருகே அவன் முகத்தை கொண்டு வர, இனியா அவன் கையில் இருந்து எகிறி குதித்து தொலைவில் போய் நின்றாள்.

அவன் அவளருகே செல்ல, அவள் கட்டிலின் மேலேறி இந்த புறம் வந்தாள்.

திரும்ப திரும்ப இந்த விளையாட்டே தொடர்ந்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அவன் அவளைப் பிடித்து அவன் கை வளைவில் கொண்டு வந்தான்.

அவளோ அவனை தள்ளி விட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

கடைசியாக அவனிடம் “ப்ளீஸ் இளா. யாராச்சும் வந்துட போறாங்க. ப்ளீஸ்” என்றாள்.

“அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க.”

“ஐயோ வந்துட்டா என்ன பண்ணுவீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் இளா”

“நீயும் பாவம் கெஞ்சற” என்று கூறி விட்டு அவள் “அப்பாடா” என்று மூச்சு விடும் நேரத்தில் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவன் கையில் இருந்து விடுபட்டு “உங்களை” என்று கத்தினாள் இனியா.

“சொல்லு டா செல்லம். மாமாவை என்ன பண்ணணும்” என்றான்.

“போங்க இளா. என்ன நினைப்பாங்க நம்மளை, வெளியில இருங்க. நான் அது காபி ஆகி முடிஞ்சதும் எடுத்துட்டு வரேன்”

“சரி சரி டென்ஷன் ஆகாத செல்லம். நான் போறேன். நீ வா”

ராஜலக்ஷ்மி பவித்ராவை அவர்கள் வீட்டிற்கு அழைக்க, ஜோதியோ “அவ என் கூட இருக்கட்டும் அத்தை” என்று கூறிக் கொண்டு இருந்தாள்.

“இல்லம்மா. நான் என் கூட கூட்டிட்டு போறேன், அவ வந்ததுல இருந்து இங்க தான் ரொம்ப நாள் இருந்திருக்கா, பாரு, இப்ப கூட அவ அப்பா என் வீட்டுல இருக்கும் போது இவ இங்கிருக்கா”

“சரி அத்தை. ஒரு ரெண்டு நாள் என் கூட இருக்கட்டும், அதுக்கு அப்புறம் நானே கூட்டிட்டு வந்து விடறேன்” எனவும் ராஜலக்ஷ்மியும் ஒத்துக் கொண்டார்.

பவித்ராவோ ஜோதியை கேள்வியாக நோக்க, ஜோதி நான் பார்த்துக்கறேன் என்றவாறு கண் இமைத்தாள்.

இவை எல்லாவற்றையும் சந்துரு பார்த்துக் கொண்டிருந்தான்.

ரண்டு நாள் கழித்து காலையிலேயே ஜோதிக்கு போன் செய்தான் சந்துரு.

“சொல்லு சந்துரு”

சிறிது தயங்கினான் சந்துரு.

“என்ன சந்துரு”

“அண்ணி. நான் குஜராத் போக போறேன்”

“எப்ப சந்துரு. ஏன் திடீர்ன்னு”

“இன்னைக்கு மதியம் போறேன் அண்ணி”

“அதான் ஏன் சந்துரு”

“அண்ணி. என்னால தான் பவித்ரா எங்க வீட்டுக்கு வரலைன்னு எனக்கு தெரியும். நான் போறேன் அண்ணி. என் அம்மாக்கு பவித்ராவை ரொம்ப பிடிக்கும். அம்மா பவித்ராவை நல்லா பார்த்துப்பாங்க. என்னால அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம் அண்ணி. நான் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க”

“சந்துரு என்ன இது. ஏன் இந்த மாதிரி டெசிஷன் எல்லாம் எடுக்கற, வெயிட் பண்ணு, நான் உங்க வீட்டுக்கு வரேன், நீ, நான், உங்க அண்ணன் எல்லாரும் பேசுவோம், அப்பறம் டிசைட் பண்ணலாம்”

“அண்ணி ப்ளீஸ். அண்ணன் கிட்ட நீங்க எதுவும் பேச வேண்டாம். நீங்க கண்டிப்பா இதைப் பத்தி அண்ணன் கிட்ட பேசக் கூடாது. நான் பண்றதுல எனக்கு எந்த தப்பும் தெரியலை. ஆக்சுவலா இது தான் சரியான டெசிஷன். நான் வச்சிடறேன் அண்ணி. நான் சாரி கேட்டேன்னு மட்டும் சொல்லிடுங்க” என்று வைத்து விட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.