(Reading time: 20 - 40 minutes)

காதல் நதியில் – 20 - மீரா ராம்

ர்ஷ்... என்ன யோசனை... உள்ளே வா... என்றபடி அவனை இழுத்துச் சென்றாள் பள்ளியினுள் அபி...

அவனுக்கோ மனதில் பெரும் சஞ்சலம்... யாரோ போன்ற அவளின் பார்வை, சிரிப்பை தொலைத்த அவள் உதடுகள், வெளிறிய அவள் முகம்... இதை எல்லாம் பார்க்கும் துணிவு அவனுக்கு கொஞ்சமும் இல்லை... இருந்தாலும் வேறு வழி இல்லையே... இப்போது பள்ளிக்குள்ளேயும் வந்தாயிற்று... அவளை முடிந்த வரை பார்க்காமல் இருந்திட வேண்டும்... என்று மனதினுள் உரு போட்டுக்கொண்டவனை அவன் மனம் கேலி செய்தது... நீ... உன்னவளை… பார்க்காமல்... விந்தையாக இல்லை உனக்கே உன் எண்ணம்... என்று...

அபி போன்று குழந்தைகளும் அவர்களுடன் வந்தவர்களும் ஒரு அறையில் அமரவைக்கப்பட்டனர்... பின் குழந்தைகளை மட்டும் வந்து ஒரு மிஸ் அழைத்துச் சென்றார்... அரை மணி நேரம் கழிந்தது... ஆனாலும் மீட்டிங்க் ஆரம்பித்த பாடு இல்லை... சரி ஷன்வியிடமே சென்று கேட்போம் என்று அந்த அறையை விட்டு வெளியே வந்தவன், இமைக்க மறந்து தான் போனான்...

kathal nathiyil

கொள்ளை கொள்ளும் அழகும், வசீகரிக்கும் புன்னகையும், முகத்தில் கொஞ்சி விளையாடிய கற்றைக்கூந்தலும், பார்த்தவுடன் வசியமிழக்க வைக்கும் மை தீட்டிய விழிகளும், கொண்ட மங்கையோ, தேவதையோ, தன் மனங்கவர்ந்த காதலியோ... என்று ஆதர்ஷ் வியக்கும் வண்ணம் இருந்தாள் சாகரி...

சில அடி தொலைவில் இருந்த அந்த சறுக்கு விளையாட்டில், மழலைகளை மேலே தூக்கி வைப்பதும் அவர்கள் வழுக்கி மேலிருந்து கீழே வரும்போது லாவகமாக பிடித்துக்கொள்வதுமாய், அவர்களுடன், சிரித்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவனின் காதலி...

முதன் முதலில் அவளைக் கண்ட போதும் அவளிடம் இதே புன்னகை தான்... இப்படி வசமிழக்க வைக்கும் தோற்றத்தில் தான் அவளைக்கண்டான்.. இன்று மீண்டும் அதுபோல் காண்கிறான் அவளை... அவனின் காதல் கொண்ட நெஞ்சத்தை அவள் மொத்தமாக அள்ளிச் சென்றாள் மீண்டும் இப்போது...

“மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்...

நீயே எந்தன் சுகவாசல்...

கல்லில் செதுக்கிய சிற்பங்களிலும் ரசிக்கும் காதல் இருக்கிறது என்று கோவிலில் வடித்திருக்கும் கலை வண்ணங்களை ஆசை தீர பார்க்க செய்து காதல் செய்தாள் அவனை அன்று... இன்று அவன் அவளை ஆசை தீர பார்க்கின்றான்... கல்லென ஆக்கியிருந்த அவள் மனதில் இன்று சந்தோஷத்தை செதுக்கிய அவளை அவன் இமை கூட அசைக்காது புன்னகையுடன் பார்த்து பூரிக்கின்றான்...

“கல்லும் மண்ணும் கண்டாலும் உண்மை காதல் வாழும்...

உன்னில் நானே கண்ட வேதம்...

மெல்ல அவளருகில் சென்றான்... அது பள்ளி என்பதையும் மறந்து... அவன் மாய வலையில் சிக்குண்டதை போல் அவளருகில் சென்ற நேரமும் ஒரு நன்மை அவனுக்கு நடக்கத்தான் செய்தது... அவள் ஒரு சுட்டிப்பையனை மேலிருந்து கீழே இறக்க முயற்சி செய்து அவன் செய்த அடாவடித்தனத்தினால் அவனை தூக்கியவள், சற்றே தடுமாற, அவனுக்கு அடிபடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனை நெஞ்சோடு சேர்த்தணைக்க, அந்த சுட்டி வாண்டு திமிற, அவனது சேட்டையினால் பிடிமானம் ஏதும் இல்லாமல் அவள் பின்னோக்கி சாய, பூமாலையென அவளை தாங்கிக்கொண்டான் தன் மார்பில் அவளின் ஆதர்ஷ்...

பூ தான் மோதியதா தன் மேல்... என்று அந்த நிமிட நினைவுகளை பொக்கிஷமாய் தன் நெஞ்சில் சேமித்து வைத்துக்கொண்டிருந்தான் ஆதர்ஷ்...

“பனிப்பூவாய் என் மேல் விழுந்தாய்.... உயிரே உறையுதடி...”

அவள் அவன் மார் மீது சாய்ந்திருக்க, அவள் கரம் அந்த குட்டிப்பையனை அணைத்திருக்க, அவன் திமிறாத படி, ஆதர்ஷும் அவனைப் பிடித்துக்கொண்டான்... பார்ப்பவருக்கு ஆதர்ஷ்  தன் சுட்டிப்பையனை அடக்கும் வழி தெரியாது திணறிக்கொண்டிருக்கும் மனைவியை உள்ளத்தில் முகாமிட்ட ஆசையுடன் பார்ப்பது போல் இருந்தது அந்த காட்சி...

அவனுக்குமே அவளை அப்படி கையில் குழந்தையுடன் பார்த்த போது, தன் மகனை அவள் இதுபோன்று கெஞ்சி கொஞ்சி மிரட்டி விளையாடி அவனின் சுட்டித்தனத்தை அடக்க முடியாது திணறி அவள் நின்ற தோற்றம் கவிதையாய் அவன் உணர்ந்தான்...

“இதற்கும் மேலாக ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி...

என் கவிதையில் சேருதடி...

அவன் கரம் அவள் மேல் படவில்லை தான்... ஆனால் அவள் அவனின் மேல் தான் ஒன்றியிருந்தாள்... அந்த ஸ்பரிசம் நிகழ்காலத்தை உரைக்க, அவள் சட்டென்று பதறி விலகி அவனின் முகம் பார்த்தாள்... வெட்கம் கொண்டு விழி தாழ்த்திய அவள் செய்கை, அவனை இம்சித்தது மிக...

அந்த செய்கை தன் காதல் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறது என்று அவனுக்கு சொன்னது... அவளை எண்ணி மட்டுமே வாழ்ந்த அவனின் ஜீவனுக்கு அன்று உயிர் வந்தது மீண்டும்...

“உண்மை காதல் மறையாது... பாதை கூட தவறாமல்

ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்...

தேங்க்ஸ்... என்ற ஒற்றை வார்த்தையில் அவன் இதயம் தொட்டாள் மீண்டும் அவள்.. பேசிவிட்டாள்... அவனுக்கு என்னென்னவோ செய்தது மனதினுள்... அவன் தலையை மட்டும் மெதுவாக அசைக்க, அவளோ அவனை கடந்து சென்றாள் புன்னகை மாறாமலே...

“எந்த காலம் பிறந்தாலும்... காலம் சொல்லும் பதிலாக…

தெய்வீகமே இந்த காதல்...

செல்கிறாளே ஒன்றும் சொல்லாமல்... என்று தவிப்புடன் அவன் பார்க்க, இரண்டடி எடுத்து வைத்தவள், மெல்ல திரும்பி அவனை நோக்கி வந்து, நீங்க ஆதர்ஷ் தானே... அபி வந்திருக்காளா?... எங்கே அவள்... நான் போய் பார்க்கிறேன்... நீங்களும் வாங்க... மீட்டிங்க் அங்கே தான்... என்றவள், அச்ச்ச்சோ  மீட்டிங்கிற்கு லேட் ஆச்சு... போச்சு... போச்சு... என்றவள் ஓடினாள் பதறி... உதடு குவித்து சொன்ன விதம், அவளின் பதட்டம், எல்லாவற்றையும் அணுவணுவாய் ரசித்தான் அவன்... மேலும், அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ள விழைந்தது அவன் உள்ளம்...

“தாயை போலே நான் அள்ளிக்கொள்வேன்

உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே...

மெல்ல அவளை பின் தொடர்ந்து சென்றவன் மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியேறும்போது அவனால் அவளைப் பிரிய முடியவில்லை... உன்னோடே இருந்துவிடுகிறேனே காலம் முழுவதும்... ப்ளீஸ்... என்று உள்ளுக்குள் ஆயிரம் முறை சொல்லிக்கொண்டான்...

“விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா

நானும் நீயும் வாழ்க்கை தோறும்...

அவன் மனமில்லாமல் அறையை விட்டு வெளியே வர, அங்கே அவள் நின்றிருந்தாள் எதிரே... கண்ணில் மின்னும் காதலுடன், சிறு விழி அசைவில் அவள் வா என்று அழைக்க அவன் நிலை குலைந்தான் மொத்தமாய்... தரையில் துடிக்கும் மீனாக அவன் நெஞ்சம் சாய்ந்தது அவளிடத்தில் மேலும்...

“மின்னல் ஒன்று கணை வீச, நெஞ்சம் ஒன்று குடை சாய...

மின்னல் நீயே... நெஞ்சம் நானே...

அவன் ஓரடி எடுத்து வைக்கையிலே, அபி அவனைக் கடந்து அவளை நோக்கி ஓடினாள்... அவள் வருவதை உணர்ந்து, அவள் உயரத்திற்கு முட்டிபோட்டு அமர்ந்த சாகரியை அணைத்துக்கொண்டாள் அபி...

ரிகா மிஸ்... நீங்க தான் இந்த தடவை நான் நிறைய மார்க் எடுக்க காரணம்... தேங்க்யூ... என்றபடி சாகரியின் கன்னத்தில் முத்தமிட்டாள் அபி... பதிலுக்கு சிறிதாக உதட்டில் உருவான புன்னகைப்பூவுடன், அபியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சாகரி... அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷிற்கு அவள் தென்றலென சற்று முன் பூப்போல மோதியதும், அவள் கூந்தல் தன் மார்பை முத்தமிட்டதும் நினைவுக்கு வர, அது ஓசையின்றி தூங்கிக்கொண்டிருந்த அவனது மனக்குதிரையை தட்டி எழுப்பி கடிவாளமிடாத ஆசைப்பாதையில் பயணிக்க வைத்து அவனது ஆசைத்தீயை மேலும் மூட்டியது...

“தென்றல் வந்து முத்தமிடும்... கோரத்தீயும் பூவாய் மாறும்...

தீயும் நானே... தென்றல் நீயே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.