(Reading time: 28 - 55 minutes)

லூசாடா நீ?... முறைப்பொண்ணு இருந்தா இப்படி பேசுறது வழக்கம் தான… அதை தானே நானும் உன் மாமாவும் செஞ்சோம்… அதுவும் இல்லாம கண்ணன் நம்ம வீட்டு பையன்… அவன் நம்ம வீட்டு பையன் மட்டும் தான்…. என்று அழுத்தி சொன்னார் கோதை…

அப்பா, அத்தை சொல்லுறது தான் சரி… எனக்கு அனு முறைப்பொண்ணு தானே… அப்போ கண்ணனுக்கு என் தங்கச்சி முறைப்பொண்ணுதானேப்பா… நீங்க ஏன் கண்ணனை வேற யாரோவா பார்க்குறீங்க… எல்லாருக்கும் முன்னாடி அவன் மேல அதிக பாசம் வைச்சது நீங்க தான்… அதை மறந்துட்டு பேசாதீங்கப்பா… -ஷ்யாம்

நீ சும்மா இருடா… என்று மகனை அதட்டியவர், முடிவா சொல்லுறேன்க்கா ஆதர்ஷிற்கு தான் நான் என் பொண்ணை கட்டி கொடுப்பேன்… வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன்… என்று ராசு சொல்ல…

சுந்தரம், பட்டென்று அவன் யாரோ இல்லை… என் மகன்… என் இரண்டாவது பையன்… என்று சொன்னதோடு விடாமல், என்னைக்கு இருந்தாலும் மயூரியை கல்யாணம் பண்ணிக்கப்போறது என் பையன் கண்ணன் தான்… என்று சொல்ல…

ராசுவிற்கு ஆத்திரம் மூண்டது… ஓ… சொந்தமான எங்கிட்ட யாரோ பெற்ற பையனுக்காக சண்டைக்கு வரீங்களா?... என்னைவிட ஒசத்தியா போயிட்டானா உங்களுக்கு அந்த அநாதைப்பய???... என்று வார்த்தைகளை கொட்டிவிட,

யாருடா அநாதை… அவன் என் பையன்…. என் பையனை பற்றி இனி ஒரு வார்த்தை பேசின, அவ்வளவுதான்…  சொல்லிட்டேன்… என்று சுந்தரம் தன் நண்பனின் மகன் தன் மகன் என்ற உரிமையில் கர்ஜிக்க, அதை ராசு தவறாக எண்ணி,

ஓஹோ… இப்போதான் புரியுது… அவனை இங்கேயே தத்து எடுத்து வளர்த்தப்ப கூட ஏதோ பரிதாபம்னு நினைச்சேன்… ஆனா, இப்போதான் என் மரமண்டைக்கு விளங்குது… அவன் உண்மையில் உங்களுக்கு பிறந்தவன் தான்… அந்த உண்மை தெரிஞ்சு தான் உங்க நண்பர் செத்துப்போயிட்டார்…. என்று அவர் வார்த்தைகளை துச்சமென வெளியிட…

சுந்தரம் தட்டென்று அமர்ந்துவிட்டார்… கணவரின் அந்த நிலையை காண சகிக்காத அவரின் தர்மபத்தினி யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன நீ???... என்று ஆத்திரம் மிக ராசுவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்துவிட்டார்…

அறைந்தவர் கணவரின் அருகே வந்து அவன் பண்ணின தப்புக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்… என்னை மன்னிச்சிடுங்க… என்றவர் கதறி, சுந்தரத்தின் கால்மாட்டில் விழுந்து அழ, அவர் மனைவியிடம் அழாதே என்றபடி, கண் இமைத்தார்… இமைத்தவரின் கண்ணீர் துளிகள் கோதையின் முகத்தை நனைத்தது….

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஷ்யாமிற்கு தன் மாமனை அசிங்கப்படுத்திய தந்தையின் மேல் வெறுப்பு உண்டானது….

மாமா… அவர் பண்ணின தப்புக்கு என்னை வேணும்னாலும் வெட்டிப்போட்டுடுங்க… இப்படி உடைஞ்சி போய் உட்கார்ந்துட்டீங்கன்னா, எங்களுக்கு யார் மாமா இருக்கா ???... என்று அவன் அவர் கைப்பிடித்து அழ, அவர் மருமகனின் கையில் ஆதரவாக தட்டிக்கொடுத்தாரே தவிர, ஒரு வார்த்தை பேசவில்லை…

ராசுவிற்கு தான் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரிய சில நிமிடங்கள் தேவைப்பட்டது… தான் செய்த தவறு புரிந்த நேரத்தில், தன் தமக்கையே தன்னை அறைந்துவிட, அவர் செயலற்று நின்றார்… மகனின் செய்கையும் அவருக்கு வலி தர, இது அத்தனைக்கும் காரணம் அவன் தானே… அந்த கண்ணன் தானே… என்ற எண்ணம் மனதில் வேரூன்றி தான் செய்த தவறும் அவருக்கு மறந்து போனது…

பெற்ற தகப்பன் அசிங்கப்பட்டு நிற்கிறானேன்ற வருத்தம் உனக்கிருக்காடா கொஞ்சமாச்சும்… அதை விட்டுட்டு பெருசா மாமன்னு உறவு கொண்டாடிட்டிருக்கிற… எனக்கு அக்காவே இல்லைன்னு நான் முடிவெடுத்த பின்னாடி இன்னும் என்னடா மாமன் உறவு உனக்கு???... என்று அவர் மேலும் வார்த்தைகளை சிந்திய நேரம்….

இனி ஒரு வார்த்தை பேசாதீங்க… பேசுனீங்க,,, நான் செத்துடுவேன் இந்த இடத்திலேயே.... இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க… இனி உங்களுக்கு பையன் இல்லவே இல்லை… இந்த நிமிசத்துல இருந்து நீங்க யாரோ… நான் யாரோ…. இனி எனக்கு என் மாமாவும் அத்தையும் தான்… என்றவன், அனுவைப் பார்த்து இதோ இங்கே நிற்கிறாளே இவ தான் எனக்கு மனைவி… அதையும் உங்க முன்னாடியே சொல்லிட்டேன்… என் தங்கச்சி என்னைக்கு இருந்தாலும் கண்ணனுக்கு தான்… என்னைக்கு நீங்க பண்ணின தப்பு உங்களுக்கு உறைக்குதோ, அன்னைக்கு இந்த வீட்டு வாசல் படி மிதிங்க… அதுவரை என் முகத்தில் விழிக்காதீங்க…

என் தாய்க்கும்  தங்கைக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன்… ஆனாலும் நீங்க இருக்குற இடத்துக்கு நான் வரமாட்டேன் இனி…. விதி என்னைக்கு என் வாழ்க்கையில என் தங்கையை பார்க்க இடம் கொடுக்குதோ அன்னைக்கு நான் பார்த்துக்கறேன்… அப்படி நான் அவளைப் பார்க்கும்போது அவ உங்க பொண்ணா இருக்காமாட்டா… என் தங்கையா இருப்பா… அதுவரை நான் என் தாயையும் தங்கையையும் கூட பார்க்க வர மாட்டேன்… என்று அழுத்தம் திருத்தமாக பேசியவன், தன் மாமனையும் அத்தையையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்லும் முன், தந்தையின் அருகே நின்றிருந்த தாயைப் பார்த்து கண் மூடி நீர் சிந்தி, என்னை மன்னிச்சிடும்மா… என்று கூறியவன் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டான்…

மகன் சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப அவர் காதுகளில் ஒலித்தது… தன் உடன் பிறந்தவளின் உறவை முறித்து, தகப்பன் ஸ்தானத்தில் இருந்த மாமனை மரியாதைக்குறைவாய் பேச வைத்து, இப்போது என் மகனையும் என்னைவிட்டு பிரித்து விட்டானே… இதற்கெல்லாம் காரணம் அவன் தானே… அவன் ஒருவன் தானே அனைத்திற்கும் காரணம்… என்று மனதினுள் பதிய வைத்துக்கொண்டவருக்கு தான் பேசிய வார்த்தைகள்தான் முழுக்க முழுக்க காரணம் என்பது உறைக்கவே இல்லை சிறிதும்… 

மௌனமாக மனைவி, மற்றும் மகளுடன் மீண்டும் தஞ்சைக்கே வந்தவர், அங்கே ஜனாவுடன் ஒரு மாதம் இருந்தார்… பின்பு அங்கே இருந்து பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் தஞ்சம் புகுந்தார்…

அதன் பிறகு இரு குடும்பங்களுக்கு இடையிலும் பேச்சு வார்த்தை என்ன தொடர்பே அற்று போனது…

ராசு மகனின் பாசத்திற்கு ஏங்கினார்… அது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது… ஆனாலும், மகன் பேச்சை மீறி அவனைப் பார்த்தால் அவன் சொன்னதை செய்திடுவான் என்று அஞ்சி மகனைப் பார்க்கும் எண்ணத்தை மனதிலே போட்டு புதைத்துக்கொண்டார்…

செல்வியோ இரவில் கண்ணீர் வடித்தே காலத்தைக் கடத்தினார்…. அறியாத வயதில் நடந்த அத்தனையையும் மயூரிக்கு விவரம் தெரிந்ததும் செல்வி தெரியப்படுத்தினார் அவளிடத்தில்… தெரிந்து கொண்டு என்ன செய்ய முடிந்தது அவளால்?... தன் கண்ணனுக்காக காத்திருப்பதை தவிர???....

அதே வேளை… இங்கே கண்ணன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட முகிலன் என்ற முகிலேஷிடம் யாரும் எதையும் சொல்லவில்லை… அவனும் அறியாத வயதில் நடந்த அத்தனையையும் மறந்தே போனான்….

ஆதர்ஷிற்கு ஒரு நாள் லக்ஷ்மியின் நியாபகம் ஒரு புகைப்படத்தில் பார்த்த போது நினைவு வர, அவள் எங்கே என்று விசாரித்த போது கோதை அவனிடத்தில் அனைத்தையும் சொல்லி மயூரியை எப்படியாவது நம் முகிலனுக்கு திருமணம் செய்திட வேண்டும் என்று மகனிடம் வேண்டி கேட்டுக்கொண்டார்… அவனும் அன்று முதல் மயூரி பற்றிய தகவல்களை மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் சேகரித்தான்… அவள் பொறியியல் துறை தேர்ந்தெடுக்க அவன் தான் முதற் காரணம்… ஆனால் அது யாருக்கும் தெரியாது அவனையும், மயூரியையும் தவிர… அவள் பத்தாம் வகுப்பு முடித்த போது, அடுத்த வருடம், அவள் எந்த குரூப் எடுத்து படிப்பது என்ற குழப்பத்தில் இருந்த போது, அவன் தான் அவளுக்கு வழி காட்டினான்… தான் தான் ஆதர்ஷ் என்ற உண்மையையும் கூறி… அதன் பிறகு, அவள் அவனிடம் பேசிக்கொண்டே தான் இருந்தாள் ராசுவிற்கு தெரியாமல்… அவள் கல்லூரி படித்து முடித்த போது, முகிலனின் அலுவலகத்திலே அவளுக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்திருந்தான்…. ஆனால் அவன் முகிலனை முதல் நாளே சந்தித்தது, காதல் வயப்பட்டது அனைத்தும் இறைவன் தயவால் நடந்தவை…

இவன் தான் உன் கண்ணன் என்று முகிலனின் புகைப்படத்தை மயூரியிடம் ஆதர்ஷ் ஏற்கனவே கொடுத்திருந்தான்…. ஆனால், முகிலனுக்கு தெரியாது தான் சின்ன வயசில் செல்லமாக அழைத்த முறைப்பொண்ணு மயூரி தான் என்பது… முகிலனிடத்தில் சமீப காலத்தில் தான் சொன்னான் ஆதர்ஷ்…. மயூரி நம் மாமா பெண் என்றும், அப்பாவுக்கும், மாமாவுக்கும் கொஞ்சம் மனக்கசப்பு… அதான் நாம் பிரிந்திருக்கிறோம் என்று…… ஆனால், அவன் பிறப்பு ரகசியத்தை மட்டும் மறைத்திருந்தான்… அதை முகிலனிடத்தில் யாருமே சொல்லிக்கொள்ளவில்லை… சொல்ல வேண்டும் என்றும் தோன்றவில்லை யாருக்கும்… எதற்காக சொல்ல வேண்டும்???... அவன் கோதை சுந்தரத்தின் மகன், ஆதர்ஷிற்கு தம்பி, ஹரி மற்றும் அவ்னீஷிற்கு அண்ணன், அனுவிற்கு என்றும் செல்லமான தம்பி, ஷ்யாமின் மனங்கவர்ந்த மச்சினன்… எனில் அவன் அவர்கள் வீட்டுப்பிள்ளை தானே….. கடவுளே வந்து நீ வேற்று ஆள் என்று சொன்னாலும் கூட முகில் குடும்பம் அதனை ஒப்புக்கொள்ளுமா என்ன???....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.