(Reading time: 17 - 34 minutes)

சில நிமிடம் அமைதியாக அந்த புரியாத பாஷையை கேட்டு பார்த்த மிஹிரும் காதில் ஹெட்ஃபோனை சொருகிக்கொண்டு கண்கள் மூட, இவளுக்குத்தான் என்ன செய்யவென்று தெரியவில்லை.

எவ்வளவுதான் வெளியே வேடிக்கை பார்த்தாலும் அந்த ஒஃபிலியாவின் கிர் குரல் காதில் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.   மனம் மீண்டும் மீண்டும் காருக்குள்ளேயே வட்டமிட்டது.

சோதனை மேல் சோதனை....கிர்ர்ர்ர்ர்ர் குரலால் வேதனை.....

 கண்கள் வியன் முகத்தை தேடியது.

அவனோ இப்பொழுது ஒஃபிலியாவிடம் கர்ம சிரத்தையாக கதை அளந்து கொண்டு இருந்தான்.

வாராய்.....நீ வாராய்.....வர்றப்ப இதுக்கு கணக்கு தாராய்...... நீ தாராய்.......

முதலில்  வியனும் மிஹிரும் தங்க இருக்கும் அப்பார்ட்மென்டை அடைந்தவர்கள் மிஹிரையும், இவளது உடைமைகள் தவிர அனைத்து உடைமைகளையும் அங்கு இறக்கிவிட்டு மூவருமாக ஒஃபிலியாவின் வீட்டை அடைந்தனர்.

இவள் தங்க இருக்கும் அறையை இவளுக்கு காண்பித்துவிட்டு, இவளது உடைமைகளை அங்கே வைத்துவிட்டு, இவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு,  மீண்டுமாக வியனும் அந்த சி.வெ அதாங்க அந்த சின்ன வெங்காயமும்  வரவேற்பறையில் சென்று அமர்ந்து அரட்டையை தொடர்ந்தார்கள்.

சற்று நேரத்தில் இவளுக்கு படு போரடிப்பது போல் உணர்வு. வியனை தேடி சென்றாள் மிர்னா. இவள் அறை வாசலிலிருந்து அவனைப் பார்க்க, அவன் இவளை கண்டுகொள்ளவே இல்லை. படு சீரியஸாக எதையோ பேசிக்கொண்டிருந்தான்.

ஒரே ஒரு நாள் இவர்கள் சந்தித்த அந்த முதல் நாள் இவளிடம் வியன் அதிக நேரம் தொடர்ந்து பேசியதுண்டு....என்பது ஞாபகம் வந்தது மிர்னாவிற்கு. அதன் பின் என்றும் அளவு சாப்பாடு கதைதான் அவன் பேச்சு........இங்கானால்...சின்னவெங்காயத்துடன் ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு மொக்கை.....????

பி.கே என் கையால வெங்காய  பாயாசம் ரிசர்வ்ட் உனக்கு....

மூன்று படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மென்ட் அது.  மெல்ல மொத்த வீட்டையும் சுற்றிப்பார்த்த மிர்னா எரிச்சல் நீங்க குளித்துப் பார்த்தாள். மீண்டுமாக வரவேற்பறைக்கு வரும்போது ஓரத்திலிருந்த டைனிங் டேபிளில் உணவு தாயாராக இருந்தது.

இவளை அந்த சி.வெ சாப்பிட அழைக்க வியன் சுற்றுபுறம் எதுவும் கருத்தில் பதியாத அளவு  லாப்டாப்பில் தலையை நுழைத்திருந்தான்.  அதுவும் இவளுக்கு முன்னதாக சாப்பிட அமர்ந்திருந்தவன் இவள் தன் உலகத்தில் இருப்பதாக காட்டிகொள்ளவே இல்லை.

சி.வெ மூவருக்குமாக உணவு பரிமாறியவள் இவளை சாப்பிட சொல்லிவிட்டு வியன் தலையை நுழைத்திருந்த லாப்டாப்பில் சிலவற்றை காட்டியபடி கிர்ர்ர் குரலில் மீண்டும் ஸ்பீச்.....

சி.வெ பேச்சே இப்படி இருக்கே...இவ பாடினா.....

மிர்னா நினைத்த அதே நேரம் ‘ஃஸ்ஃஸ்ஃஸ்ர்க்” தடுமாறி சருக்கி விழுந்தாள் ஒஃபிலியா. வியனின் வல புறமாக நின்று அவனை தாண்டி இட புறமிருந்த உணவு பாத்திரத்தை கையாள முயன்றவள் அந்த பளபள தரையில் ஃஸ்லிப்பாகி விழுந்திருந்தாள்.

மிர்னாவிற்கோ சிரிப்பு அள்ளிக்கொண்டு வந்தது. நாம படுனா தான் ஜெகமே ஸ்லிப்பாகும்...இவ பாடுனான்னு நினச்சா அவளே ஆடிபோயிடுறாளே.....

எதோ சொல்லியபடி விழுந்திருந்த ஒஃபிலியா எழும்ப உதவிய வியன் இவளைப் பார்த்து முறைத்தான். அவள் விழுந்ததிற்கு இவள் சிரித்தால்....?

ஆனால் விழுந்திருந்த ஒஃபிலியாவே சிரித்து கொண்டே எழுந்ததால் நிலமை மீண்டும் சுமுகமாகிவிட....மீண்டும் சாப்பிட அமர்ந்தனர் மூவரும்.

தன் முன்னால் தட்டில் இருந்த அந்த சிவப்பும் கருப்புமான கோனல்மாணலான உருண்டைகள் என்னவென்றே புரியவில்லை மிர்னாவிற்கு. அதை எப்படி சாப்பிட வேண்டும்?

நிமிர்ந்து வியனைப் பார்த்தாள்.

அவன் காரியமே கண்ணாக கம்ப்யூட்டரே கடமையாக....

இவள் பார்வையின் பொருள் உணர்ந்து “இப்படி உதுத்துகோங்க மிர்னா “ என்றபடி தன் தட்டிலிருந்த உருண்டைகளை உதிர்த்து காண்பித்தாள் ஒஃபிலியா.

இவள் அப்படியே உடைக்க தொடங்க...எழுந்து வந்து இவளுக்கு உதிர்த்து கொடுத்துவிட்டு போனாள் அவள்.

இவள் ஒஃபிலியா வை ‘பே’ என பார்க்க,

வியனோ  தட்டையும் கவனிக்காமல்,  ஒஃபிலியாவையும் கவனிக்காமல் கண்களால் லாப்டாப்பை பார்த்தபடி ஒரு கையால் எதை சாப்பிடுகிறோம் என கண்டுகொள்ளாமல் சாப்பிட்டான்.

மிர்னாவுக்கு அன்று டில்லியில் வியன் இவளுக்கு மீன் பிட்டு கொடுத்த விதம் ஞாபகம் வந்தது.

ஒஃபிலியா இவளிடம் பழகுவது நட்பானால் அதுவும்..நட்பு தானோ...?

மெல்ல எழுந்து தன் தட்டை கழுவி வைத்துவிட்டு தன் அறைக்கு கிளம்பினாள் மிர்னா.

“குட்நைட் வியன், குட் நைட் ஒஃபிலியா...”

கலோன் நகரம் சென்ற பின்பு, முதன் முறையாக இவளை நிமிர்ந்து பார்த்தான் வியன்.

“சீக்கிரம் தூங்க போறீங்க மிர்னா....? ஜெட் லாக்கா...?”

மௌனமாக அவனைப் பார்த்தவள் பதில் எதுவும் சொல்லாமல் கிளம்பி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

ங்கு அவளுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை.  இப்படி ஒரு உணர்வு இதற்கு முன் இவளுக்கு வந்ததே இல்லை. இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை.

தாய் மடி தேடியது அவளுக்கு.

அம்மாவை அழைக்கலாமா என்று கூட நினைத்தாள் முதலில். அதைவிட மோசமான முடிவு எதுவும் இருக்காது என்று தோன்ற, வேரியை அழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். பார்த்தால் மிர்னாவின் மொபைலில் சார்ஜ் இல்லை.

இனி சார்ஜ் போட்டு...அது சார்ஜாகி....எப்பொழுது பேச...அதற்கு பதில் வியனிடம் அவன் மொபைலை வாங்கி வந்தால் என்ன?

 உண்மையில் அவளுக்கு வேரியிடம் பேச வேண்டும் என்பதைவிட மீண்டுமாக வியனைப் பார்க்க ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது...குட் நைட் சொன்ன பின்பு காரணமின்றி எப்படி அவன் முன் சென்று நிற்க?

மீண்டுமாக அவன் இருந்த வரவேற்பறைக்கு சென்றாள். இன்னுமாய் வியனும் சி..வெவும் லாப்டாப் கதை. அந்த சி.வெ சாப்பாடை தொட கூட இல்லை. இவன் தட்டு காலி.

போடா...

“வியன்....”

நிமிர்ந்து பார்த்தான் “ஹேய்...நீ இன்னும் தூங்கலையா...?”

“அது....என் மொபைல்ல சார்ஜ் இல்ல...உங்க மொபைல தாங்க பேசிட்டு தந்துடுறேன்...”

தன் மொபைலை எடுத்து நீட்டினான்.

“தேங்க்ஃஸ்..”

தன் அறைக்கு வந்தாள் மிர்னா. வேரி எண்ணை அவன் மொபைலில் தேடி அழைத்தாள். இரண்டு மூன்று முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை. அன்று இவள் கவினுடன் பேசவில்லை என்பதால் இன்று இவளை தவிர்க்கிறாளோ...? சென்ற முறை இவள் ஜெயித்த பொழுது வேரி ஒரு வாழ்த்து செய்தி கூட அனுப்பவில்லையே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.