(Reading time: 25 - 50 minutes)

பீச்… போகலாமான்னு கேட்டேன்… சரின்னு சொன்ன… இங்கேயும் வந்து அரைமணி நேரமாச்சு… வந்ததிலிருந்து ஒன்னுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம் மைனா?...

…..

நான் உங்கிட்ட தான் பேசிட்டிருக்கேன்… மைனா… எதாவது பேசு… என்று அவன் அழுத்தி சொல்ல, அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… பேசலாமா?... என்று அவள் கேட்க… பேசு மைனா… அதுக்குத்தானே இங்கே வந்திருக்கோம் என்றான் அவனும்…

நான் உங்களைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுபோச்சு… உங்களுக்கும் தான்… ஆனா, பார்த்த கொஞ்ச நேரத்துல காதல் வருவது எல்லாம் பொய்ன்னு நானே பலதடவை கிண்டல் பண்ணியிருக்கேன்… ஆனா, எனக்கே எனக்குன்னு வரும்போது தான் புரியுது… உங்களை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஏனோ எனக்கு சொந்தமானவர் அப்படிங்கிற உரிமை என் மனசுல வருது… உங்க பேச்சு, சிரிப்பு, எல்லாம் எனக்கே எனக்குன்னு தோணுறப்போ, ஒரு பக்கம் சந்தோஷமாவும், இன்னொரு பக்கம் பெருமையாவும் இருக்கு…

பார்த்த உடனே காதல் எல்லாம் சினிமாவிலும், கதையிலும் தான் வரணுமா?... நிஜத்தில் வந்தா என்ன தப்புன்னு என் மனசுகிட்ட நானே கேட்டுக்கிட்டேன்… காதலுக்கு இனம், மதம், மொழி, மட்டும் கிடையாது, நேரமும் கிடையாதுன்னு புரிஞ்சுகிட்டேன்…

இந்த நேரத்தில, இன்னார் கிட்ட வரும்னு சொல்லவே முடியாது… காதல் ஒன்னும் பஞ்சாங்கம் இல்ல… முன் கூட்டியே கணிச்சு சொல்லன்னு எனக்குள்ள நானே சொல்லிக்கிறேன்…

பொதுவா பார்த்து, பழகி தான் காதல் வரும்னு சொல்லுவாங்க… ஆனா, என் விசயத்துல, பார்த்த ஒரே பார்வையில நீங்க என் மனசுக்கு பிடிச்சவரா மாறிட்டீங்க… அப்புறம் உங்ககூட பேசின பேச்சு, என்னை மொத்தமா உங்க மேல காதலில் விழ வைச்சிட்டு…

ஆனா, வீட்டுக்கு தெரியாம உங்ககூட இப்படி வெளியே வந்திருக்கேன்னு நினைக்குறப்போ மனசுல தப்பு பண்ணுற மாதிரி ஒரு எண்ணம் வருதுங்க…

அதுக்காக, உங்க மேல எனக்கு இருக்குற காதலையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது… லவ் பண்ற பையங்கூட வெளியே போறது தப்பு இல்லதான்… ஆனா, அது பெத்தவங்களுக்கு தெரிஞ்சி வந்தா நல்லா இருக்குமோன்னு என் மனசு எங்கிட்ட கேள்வி கேட்குது…

சீக்கிரமாவே வீட்டில உங்களைப் பத்தி பேசிடுறேன்ங்க… அவங்க சம்மதிச்ச பின்னாடி இனி உங்களோட வெளியே வரேன்… அதுவரை, நாம வெளியே வந்து இப்படி பேச வேண்டாம்…

பேச வேண்டாம்னு சொல்லுறவ, இன்னைக்கு எதுக்கு நான் கூப்பிட்டதும் என் பின்னாடி வந்தன்னு கேட்டா?... நிச்சயமா எங்கிட்ட பதில் இல்லை…

நீங்க கை நீட்டி கூப்பிட்டப்போ அந்த நிமிஷம், எனக்கு சொந்தமானவர் அப்படிங்கிற எண்ணம் மட்டும் தான் மனசுல இருந்துச்சு… அதான் மறு பேச்சு பேசாம வந்துட்டேன்…

நான் உங்களை நம்ம பெத்தவங்க விருப்பத்தோடு சேரணும்… அதான் என் ஆசை… என்னதான் நான் உங்களை காதலிச்சாலும், என்னைப் பெத்தவங்களுக்கு நான் முதலில் மகள்… அதை நான் மறக்கக்கூடாதுன்னு நினைக்குறேன்… நான் தப்பா எதும் சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க…  என்றவள் அவன் என்ன சொல்லப்போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் அவன் முகத்தையே பார்க்க…

அவனோ அமைதியாக கடற்கரை மணலை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான்…

அவன் விளையாட்டு அவள் மனதை மேலும் வதைக்க, என்னங்க… என்னாச்சு… என்றாள் அவள் மென்மையாக…

ஹ்ம்ம்… என் அப்பா அம்மாக்கு நான் பையன் அப்படிங்கிற உறவு தான் இப்போவர இருந்துச்சு… இனி என் மைனா அப்பா அம்மாவுக்கும் மகனா எப்போ ஆகப்போறோம்னு யோசிச்சிட்டிருக்கேன்… என் மஞ்சக்காட்டு மைனாவை மகள் ஸ்தானத்திலிருந்து மனைவி ஸ்தானத்திற்கு நான் மாற்றணும்னு கடவுள் இன்னைக்கு என் மண்டையில் உறைக்குற மாதிரி சொல்லிட்டார்… அதுதான் அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்குறேன்… எனவும்,

அவள் அவனை சந்தோஷத்துடன் பார்த்தாள்…

அப்போ… அப்போ…. உங்களுக்கு என் மேல கோபம் இல்லல?... என்று பரபரக்க…

இல்லடி… கொஞ்சம் கூட இல்ல… நீ என் மைனா… இன்னும் தெளிவா சொல்லணும்னா…மைடியர்… மஞ்சக்காட்டு மைனா… இப்போ நீ சொன்னதை எல்லாம் கேட்டப்போ, நிஜமா சொல்லணும்னா எனக்கு உன்னை இறுக்கமா கட்டிக்கணும்னு தான் தோணுச்சு… ஆனா, இது பொதுஇடம், ஹ்ம்ம்… அப்புறம், உன் வார்த்தைகள் வீட்டுக்கு தெரியாம சந்திக்குறது கூட தப்பு தானோன்னு யோசிக்க வைச்சது… அதனால தான் என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்… சாரிடா… மைனா… அப்படி நினைச்சதுக்கு… பட்… உன்னை தானே நான் அப்படி நினைக்கவும் முடியும்… இருந்தாலும் நான் அப்படி நினைச்சிருக்கக்கூடாது தான்… சாரிடா மைனா… என்று சொல்லி முடிக்கும்போது அவள் அவன் கைப்பிடித்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்…

மை…..னா…. என்ற கூவலுடன் அவன் அவளைப் பார்க்க முற்பட, அவள் தனது முகத்தை மறைத்துக்கொண்டாள்…

சில மணி நேரத்திற்குப் பிறகு, அலுவலகத்தை அடைந்த மஞ்சுவை சிரிப்புடன் வரவேற்றாள் பாலா…

எங்கடி… கிஃப்ட்… காட்டு… காட்டு… சீக்கிரம்… என்று பாலா அவசரப்படுத்த, தனது கைப்பையிலிருந்த பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினாள் மஞ்சு…

அதை திறந்து பார்த்த பாலா… கலக்குறடி… சூப்பரா இருக்கு… செயின்… என்று சொல்ல… மஞ்சரி சிரித்துவிட்டு, வள்ளியிடம் அதனை காண்பித்தாள்…

மெல்லிய தங்க செயின், எம்.வி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது…

நல்லா இருக்கு மஞ்சு… என வள்ளியும் சொல்ல, மஞ்சுவோ, ஹ்ம்ம்… என்றாள் அமைதியாக…

என்னடி… என்ன ஆச்சு?...

இல்ல… அவர் கூட எனக்கு கிஃப்ட் கொடுத்துட்டார்… நான் பிறந்ததிலிருந்து கூடவே இருக்குற இரண்டு பிசாசுங்க மட்டும் இன்னும் எனக்கு எதுவும் தரலை… அதான்… எனவும்,

ஏண்டி… நான் உனக்கு பிசாசா?... பிறந்தநாள் அதுவுமா திட்டக்கூடாதுன்னு பார்க்குறேன்… இல்லன்னு வச்சிக்கோ… என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது,

இல்லன்னா… என்னடி செஞ்சிடுவ… போடி… குரங்கே… பிசாசே… என்று மஞ்சு பாலாவை சரமாரியாக திட்ட…

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவள், பேசு… இன்னைக்கு ஒருநாள்… பேசு… மகளே… எல்லாத்துக்கும் சேர்த்து நாளைக்கு இருக்குடி உனக்கு கச்சேரி… என்றபடி தன் இடம் நோக்கி நகர, வள்ளியும் தன் இடத்திற்கு சென்றாள்…

எங்கே போறாளுங்க… இவளுங்க… என்று யோசித்தவளின் எண்ணத்திற்கு முடிவு கட்டும் விதமாக, வந்த பாலா,

அவளின் கையில் பெரிய கவரை கொடுக்க… அதை ஆவலாக பிரித்து பார்த்தாள் மஞ்சு…

அழகிய சுடிதார் ஒன்று மஞ்சுவை பார்த்து சிரிக்க… மஞ்சுவின் முகத்திலும் புன்னகை…

ஹேய்… பாலவள்ளி….. தேங்க்ஸ்டி… ரொம்ப அழகா இருக்கு… எனக்கு பிடிச்ச கலர்… என்று பாலாவை அணைத்துக்கொள்ள, பாலா சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு அமைதியாக சென்றுவிட,

மஞ்சுவின் மூளை யோசித்தது… இன்னைக்கு இவ நாம இவங்க பேரையே சொல்லிட்டோம்… ஆனா, இவ அடிக்கலை… ஹைய்யா… ஜாலி… ஜாலி… என்றவள் மனம் பொறு பொறு மஞ்சு… இன்னைக்கு உன் பிறந்தநாள்… அதனால் தான் நீ சொன்னதுக்கு அவள் எதுவும் சொல்லாமல் போய்விட்டாள்… இல்லன்னா உன்னை இன்னைக்கு ஒருவழி பண்ணியிருப்பா… என்று சொல்ல..

அதுதான் அவ எதுவும் செய்யலையே… அப்புறம் என்ன?... என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தவளிடம் இந்தா மஞ்சு… என்னோட கிஃப்ட் உனக்காக… என்று ஒரு சிறிய கவரை கொடுத்தாள் வள்ளி…

அதில்… மஞ்சு, பாலா, வள்ளி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கைகோர்த்திருந்த சின்ன வயது புகைப்படம் இருக்க… மஞ்சுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை…

மழலைகளாக அவர்கள் இருந்த போது, சேர்ந்திருந்த நிமிடங்களும், வளர்ந்த பிறகு வள்ளியின் பாசமும், பாலாவின் ஒதுக்கமும், இன்றைய அவர்களின் நிலையைக் கண் முன் கொண்டு வர, மஞ்சு என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றிருக்க… வள்ளி அமைதியாக சென்று விட்டாள் அவளின் கன்னத்தில் தட்டிகொடுத்துவிட்டு…

முருகா… இவங்க… இரண்டு பேரும் சீக்கிரம் ஒன்னு சேரணும்… நீதான்ப்பா அதற்கு நல்வழி காட்டணும்… என்றபடி மஞ்சு வேண்டிக்கொள்ள, முருகனோ, அவளை பார்த்து மென்மையாக சிரித்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.