(Reading time: 46 - 91 minutes)

ப்போ கூட என்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்றீங்களே பெரியம்மா…. இந்த பாசத்துல கொஞ்சம் கூட எனக்கு இல்லாம போயிட்டே…. என் வள்ளியை நான் இன்னொருத்தங்ககிட்ட  விட்டுக்கொடுத்திட்டேன் தானே…… மத்தவங்க பேச்சை கேட்டு… என்னோட வீண் கோபத்தினால…” என அவள் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டே சொல்ல…

உமா அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு, “அய்யோ… அப்படி எல்லாம் இல்லடா… அழாதேம்மா… ஏங்க சொல்லுங்க… அழறா பாருங்க உங்க செல்லப்பொண்ணு…” என கணவனிடம் கூற,

சிவநாதனோ, கலங்கிய விழிகளோடு, மகளை உதட்டில் பூத்த புன்னைகையுடன் பார்த்தார் தன் தம்பியின் கைகளைப் பிடித்துக்கொண்டு… இந்திரனின் கண்களும் நிறைந்து நின்றது நீரினால்….

“அட என்னங்க… இப்படி அவளை மாதிரியே நீங்களும் அழறீங்க… போங்க…” என்ற உமா… “கஸ்தூரி நீயாச்சும் சொல்லு…” என சொல்ல…

கஸ்தூரியோ மளமளவென்று அழ ஆரம்பித்து, கீழே விழ போக, சட்டென்று வள்ளி வந்து அவரைப் பிடித்துக்கொள்ள, மறுபுறம் யுவி வந்து பிடித்திருந்தான் அவர் கீழே விழாதபடி…

கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றவன், அவரை அமர வைத்துவிட்டு,

“என்ன அத்தை இது… பிடிங்க இந்த தண்ணியைக்குடிங்க…” என அவருக்கு தண்ணீரை புகட்டி விட்டு, அவரின் அருகே வள்ளியை அமர வைத்து விட்டு, எழுந்து கொள்ள,

“கஸ்தூரி?... என்ன கஸ்தூரி… நீயும் இப்படி சின்னப்பிள்ளைத்தனமா அழுதுகிட்டு?...” என்ற உமாவுக்கும் அழுகை வர, அவர் அதனை கட்டுப்படுத்திக்கொண்டார்…

“அம்மா… இங்க பாரு…” என்றபடி பாலா அவர் காலருகில் அமர,

“நீ சொன்னது….” என அவர் கேள்வியுடன் வினவ,

“சத்தியமா பொய்யில்லம்மா… இனி அப்படி நடந்துக்க மாட்டேன்ம்மா… நீ அழாதம்மா… ப்ளீஸ்…” என்ற பாலாவின் கண்ணீர் அவரின் பாதத்தில் விழ,

“போதும் இந்து… இதுக்கு மேல என்னால முடியாது… நீ இப்போ அழறதை நிறுத்தப்போறியா இல்லையா?...” என அதுவரை அமைதியாக இருந்த வள்ளி கோபமாக பேச,

அனைவரின் பார்வையும் அவளிடத்தில் வந்து நின்றது…

வேகமாக துணாவின் அருகில் சென்றவள், “நீங்க சொன்னீங்கன்னு நான் இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன்… இனி முடியாது…” என்று கூற,

“என்னடி… இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்?...” – என அம்பிகா அவளிடம் கேட்க…

“பின்னே என்ன அத்தை?... எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்லும்போது பாலா கொஞ்சம் அழுவான்னு துணா அண்ணா எங்கிட்ட சொன்னாங்க… முதலில் கஷ்டமா இருந்தாலும் அப்புறம் நான் சரின்னு சொன்னேன்… ஆனா இங்க பார்த்தா ஆளாளுக்கு அவளைக் கேள்வி கேட்டு அழவைக்குறாங்க… எனக்குப் பிடிக்கலை… அதான்… கோபம் வந்துட்டு…” என சிறுபிள்ளையாய் சொன்னவளின் தலையில் கைவைத்து லேசாக அம்பிகா அடிக்க,

“ம்மா…. இப்போ எதுக்கு நீங்க வள்ளியை அடிச்சீங்க?... அவ என்ன தப்பு பண்ணினா?... அடிக்காதீங்கம்மா…. வலிக்கப்போகுது அவளுக்கு…” என துணா சண்டைக்கு வராத குறையாக சொல்ல…

“டேய்… என்னடா நடக்குது இங்க?...” என்ற பாவனையில் அம்பிகா அவனை பார்த்துவிட்டு,

“அவ என் மருமகள்… நான் அடிப்பேன்… நான் அடிச்சு என் மருமகளுக்கு ஒன்னும் வலிச்சிடாது… ஆனாலும், உன் தங்கச்சிக்காக என்னையே கேள்வி கேட்குறீயா நீ?...” என்று சொல்ல

“அப்படி சொல்லுங்க துணாம்மா… இவன் சொன்னானே எங்க பாசத்தொலையை தாங்க முடியலைன்னு… உண்மையிலேயே இவங்க பாசமலர் படத்தை தான் எங்களால பார்க்க முடியலை இந்த ஒரு வாரமா…” என்றான் மைவிழியன்…

“டேய்… அடங்குடா… ஓவரா பேசாத… என் தங்கச்சி… எனக்கு முக்கியம்… நான் சப்போர்ட் பண்ணுறேன் உனக்கென்னடா வந்துச்சு?...” என துணா விழியனிடம் எதிர் கேள்வி கேட்க..

“எல்லாம் சரிதான் துணா…. அதுக்காக அவளை லேசா கூட அடிக்கக்கூடாதுன்னு எங்கிட்டயே சொல்லுறது தான் கொஞ்சம் ஓவரா இருக்குடா….” என அம்பிகா சிரித்துக்கொண்டே கிண்டல் செய்ய…

“ஹாஹாஹா…. ரொம்ப சரியா சொன்னீங்க துணாம்மா…” என விழியனும் சிரிக்க…

“ஹ்ம்ம்… இருந்தாலும் உன் தங்கச்சி குடுத்து வைச்சவ தான்… இப்படி ஒரு அண்ணன் கிடைச்சிருக்கானே அவளுக்கு….” – அம்பிகா

“இல்ல அத்தை… இவர் தான் குடுத்து வைச்சவர்… இப்படி ஒரு தங்கை இவருக்கு கிடைக்க… நான் அழுவேன்னு இவர் சொன்ன உடனே அப்படின்னா யாருக்கும் எப்பவும் உண்மையை சொல்ல வேண்டாம்னு வள்ளி இவர்கிட்ட சொன்னதை நானும் கேட்டேன்… ஏன்ம்மா இப்படி சொல்லுறன்னு அவர் கேட்டதுக்கு, என்னால நிறைய அழுதுட்டா இனியும் அந்த கொஞ்ச நேரமும் அழணுமான்னு அவ கேட்டப்போ, அவர் முகத்துல தெரிஞ்ச அந்த நிம்மதி, சந்தோஷம் சத்தியமா என்னைக்குமே எனக்கு மறக்காது அத்தை… இது எல்லாத்தையும் விட, எனக்கு அண்ணங்கிற உறவு கிடைக்குற வரைக்கும், தனக்கு கிடைச்ச அண்ணாங்கிற உறவை அந்த உறவு முறையில் அண்ணான்னு பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டாளே… இது எதுவுமே எங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு அவ சொன்னதும் எனக்கு தெரிய வந்தப்போ, சத்தியமா இப்படி ஒரு தங்கை கிடைக்க இவர் குடுத்து வைச்சவர்னு எனக்கு மனசுல பட்டுச்சு அத்தை…” என பாலா சொல்லி முடித்ததும்,

வள்ளி அதிர்ச்சியுடன் துணாவைப் பார்க்க…

அவனோ தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்ற பாவனையில் எங்கோ பார்த்தான்…

“அண்ணா…” என்ற அவளின் அழுத்தமான குரல் அவனை பார்க்க வைக்க…

அந்நேரம் ஒரு குச்சியை எடுத்து, அவளின் கையில் கொடுத்து, “எங்க உன் அண்ணனை அடி பார்க்கலாம்..” என அம்பிகா எடுத்துக்கொடுக்க

“ஆமா, வள்ளி… நீ சொல்லக்கூடாதுன்னு சொல்லியும் சொல்லியிருக்கான் பாரேன்… அவனை நாலு சாத்து… அப்பத்தான் திருந்துவான்… ஹ்ம்ம் கிளம்பு….” என்று விழியனும் தன் பங்கிற்கு துணாவை மாட்டிவிட,

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்… நான் மாட்டேன்ப்பா… அண்ணனுக்கு வலிக்கும்…” என வள்ளி பாவமாக சொல்ல…

“அது சரிதான்… அண்ணனுக்கு ஏற்ற தங்கச்சி தான்…” என அம்பிகா சொல்ல…

“சரியா சொன்னீங்க துணாம்மா…” என விழியன் அப்போதும் சொல்ல…

“அடிங்க… இருடா உன்னை….” என விழியனை துரத்திக்கொண்டு சென்றான் துணா…

“அய்யோ… வேண்டாம்… விடுங்க… அடிக்காதீங்க… அண்ணனை…” என பாலா துணாவின் பின்னாடியே செல்ல…

“ஏய்… நில்லுடி… நீ எதுக்குடி இப்போ ஓடுற?... நாலு அடி வாங்கினா தான் உன் அருமை அண்ணன் திருந்துவார்… ஓடாதன்னு சொல்லுறேன்லடி… நில்லு…” என மஞ்சரியும் அவள் பின்னாடி செல்ல…

பெரியவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்…

“அப்பாடா… இப்போதான் கஸ்தூரி நிம்மதியா இருக்கு… சின்ன வயசுல இரண்டு பேரையும் ஒன்னா பார்த்துட்டு வளர்ந்த பின்னாடி அவங்க பிரிஞ்சிருக்குறதை பார்க்க ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு… நல்ல வேளை கடவுள் இப்போவாச்சும் கண்ணைத் திறந்தாரே…” என்று விஜயா மகிழ்ச்சியுடன் கூற,

“உண்மைதான் விஜயா… நம்ம மஞ்சுவும், அவங்களும் எப்பவும் ஒன்னாதான் இருப்பாங்க… இடையில பாலாவும், வள்ளியும் தனித்தனியா இருந்தப்போ, யார் கண்ணு பட்டுச்சோன்னு நினைச்சு வருந்தினேன்… ஆனா, இப்போ எல்லா திருஷ்டியும் கழிஞ்ச மாதிரி இருக்கு… மனசுக்கும் நிறைவா இருக்கு…” என்றார் நீலகண்டன்…

“ஆமாடா… எனக்கும் இப்போதான் முழு சந்தோஷம் கிடைச்சிருக்கு…” என்றார் இந்திரனும்…

“இந்த சந்தோஷத்தோட, பொங்கலையும் நல்ல நேரத்துல வைச்சிடலாம்… என்ன அண்ணி… நான் சொல்லுறது சரிதானே?...” என விஜயா அம்பிகாவிடம் கேட்க…

“ஆமா விஜி… வா… போகலாம்… பச்சரிசி… அங்க உள்ள பானையில இருக்கு…. அதை துர்கா எடுத்துட்டு வரட்டும், உமாவும், கஸ்தூரியும் நம்ம கூட வரட்டும்… வா நாம மத்த எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம் காரில்…” என்ற அம்பிகா, கஸ்தூரி, உமா மற்றும் விஜயாவை அழைத்துக்கொண்டு சென்றார்…

“டேய்… வில்வா… நம்ம மாவிலைத் தோரணம் கட்ட மா இலையை பறிக்கப்போகலாம்டா மாந்தோப்புக்குள்ள… வா…” என நீலகண்டன் கூற,

“ஏண்டா… நீ இன்னும் இந்த மாந்தோப்புக்குள்ள விளையாடுறதை நிறுத்தலையா?...” என இந்திரன் கேட்க…

“அட போடா… உனக்கு நான் மாந்தோப்புக்குள்ள போறேன்னு வருத்தமா?... இல்ல நீ சின்ன வயசில அந்த மாந்தோப்புக்குள்ள தோட்டக்காரங்கிட்ட அடிவாங்கினதை நான் மறக்கலைன்னு வருத்தமா?...” என கேட்க…

“சரி.. சரி… வா போகலாம்…” என்ற இந்திரன் நீலகண்டனுக்கு முன்பே வெளியே செல்ல…

“உண்மையை சொன்ன உடனே பய அடங்கிட்டான் பாத்தியா?...” என்ற வில்வமூர்த்தி, “சரி வா… போகலாம்…” என நீலகண்டனுடன் சென்றார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.