(Reading time: 46 - 91 minutes)

நாம வள்ளியைப் பார்க்க போறோம்… யுவி-வள்ளி கூட சேர்ந்து தான் நாம ஊருக்குப் போக போறோம்…” என வ்ருதுணன் சொல்லியபோது,

“நான் வரலை…” என்றாள் பாலா…

“ஏன் திரபா?... ஏன் வரலை?...”

“அவ ஹனிமூனுக்கு எங்க போயிருக்கான்னு யாருக்கு தெரியும்?... அதும் இல்லாம அவ வர்ற வரை நாம அங்க வீட்டில வெயிட் பண்ணிட்டிருக்க என்னால முடியாது… நாம நேரா ஊருக்கு போறது தான் எனக்கு சரின்னு படுது…”

“அவங்க ஹனிமூனுக்குப் போகலை… யுவி ஆஃபீஸ் போறான்… வள்ளி வீட்டுல தனியாதான் இருக்குறா…”

துணா சொன்னதை கேட்டவளுக்கு, அவள் ஏன் ஹனிமூன் போகலை என்ற எண்ணம் எழுந்த உடனே, அது அவள் தனிப்பட்ட விஷயம் என மனம் உரைக்க அமைதியாகினாள் பாலா…

“வள்ளி மேல உனக்கு இருக்குற வெறுப்பு மாறணும் அப்படிங்கிறதுக்காக நான் பேசுறேன்னு நீ நினைச்சாலும் சரி, இல்ல உங்கிட்ட சில விஷயம் புருஷன் பகிர்ந்துக்குறான்னு நினைச்சாலும் சரி… இரண்டுல எதுவென்றாலும் எனக்கு சந்தோஷம்… பட் என் எண்ணம் ஒன்னு தான்…” என்றவன் அவள் கேள்வியாய் பார்ப்பதை பார்த்துவிட்டு,

“உங்கிட்ட நான் சில விஷயம் சொல்ல வேண்டி இருக்கு…. நான் சொல்லப்போற விஷயம் என் வாழ்க்கையில நீ வந்தப்பின்பும், வருவதற்கு முன்பும் நடந்தது… அதை உங்கிட்ட சொல்லுறதுக்கு இதுதான் சரியான தருணம்னு நான் நினைக்கிறேன்…” என்றான்….

“உன் அக்காவான வள்ளி மேல உனக்கு பாசம் இருக்கா, இல்லையா இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நான் அடித்தளமும் போடலை… உன் மனசை கரைக்க நான் பொய்யும் சொல்லப்போறதா இல்லை… அதை நீ புரிஞ்சிகிட்டா போதும்…” என்றவன் மேலும்,

“சின்ன வயசில நடந்த சில கசப்பான சம்பவங்கள், உன்னை உன் மனசை எந்த அளவு மாத்தியிருக்குன்னு எனக்கு தெரியும்… என்னால புரிஞ்சிக்கவும் முடியுது… இரண்டாவது பொறந்து நிறைய கஷ்டம் அனுபவிச்சேன்னு இப்போவர நீ சொல்லி அதை நம்பவும் செய்யுறல்ல திரபா…

உன்னைப் போல வீட்டுக்கு இரண்டாவதா பொறந்தவங்க யாருமே சந்தோஷமா இல்லையா?... இல்ல நீ பார்த்ததே இல்லையா? திரபா… இல்ல உன் மனசு அதை ஏத்துக்க மறுக்குதா?... உனக்கு மட்டும் தான் வாழ்க்கையில இப்படி எல்லாம் நடக்குதுன்னு?...”

அவன் கேட்க கேட்க… அவள் முகம் அந்த நாளின் நினைவில் துயரத்தை பிரதிபலிக்க…

“இதுக்கு மேலும் உன்னை இப்படி பார்க்க என்னால முடியாதுடி… திரபா…” என்றவன்.

“உனக்கு ஒரு உண்மை தெரியணும் இப்போ… எல்லாரும் நினைக்குற மாதிரி யுவி தான் வீட்டுக்கு மூத்த பையன்… ஆனா, யாருக்கும் தெரியாத உண்மை அவன் தேவி அம்மா வயித்துல பொறந்த பையன் இல்ல… அவன் அம்பிகா அம்மா வயித்துல பொறந்தவன்… நானும் மையனும், தேவி அம்மாவோட இரட்டைப் பிள்ளைகள்…”

அவனின் வார்த்தைகள் அவளை நம்ப முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாக்க… அவன் அனைத்தையும் கூறினான்… தனக்கே இது சமீபத்தில் தான் தெரிய வந்ததென… அதுவும் ஒரு விபத்தில்…

சில வருடங்களுக்கு முன்பு…

“யாருன்னே தெரியலை… ஒரு லாரி வந்து காரை இப்படி இடிச்சிட்டு போயிட்டு… உள்ளே இருக்குற பையனுக்கு சின்ன வயசு தான்… இரத்தம் வேற நிறைய போயிருக்கும்னு நினைக்கிறேன்…” என அந்த பரபரப்பான சாலையில் கூடியிருந்த இருபது முப்பது பேரும், தங்களுக்குள் பேசிக்கொண்டார்களே தவிர,

யாரும், அங்கே சாலையில் முட்புதரின் ஓரம், ஒதுங்கி போய் கிடந்த காரினுள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம் வயது வாலிபனின் நிலை என்னாயிற்று என அருகே சென்று பார்க்க முயலவில்லை…

அந்த வாலிபனும், தன்னுணர்வு பெற்று வலியில் காரின் கதவினைத் திறந்து, நடக்க கூட முடியாமல் சாய்ந்திருந்த தனது காரிலிருந்து வெளியே குதித்து விழுந்தான் முட்புதரின் மேல்…

அந்நேரம், லைப்ரரி சென்றுவிட்டு அந்த வழியே வந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி, அங்கு கூடியிருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு அருகே சென்று என்ன ஏது என்று பார்க்க…

முட்புதரின் மேல் குற்றுயுரும் குலையுயிருமாக ஒரு வாலிபன் கிடப்பதைப் பார்ப்பதை விட்டு அவனருகில் செல்ல முற்பட,

கூட்டத்தில் இருந்த சில பேர் அவளைத் தடுத்து, “நீயோ பெண் பிள்ளை வேறு, உனக்கு எதற்கம்மா இந்த வேண்டாத வேலை… இன்று இவனை காப்பாற்றி நீ மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், நாளை போலீஸ், அது இது என்று உன்னை அலைக்கழிப்பார்கள்… பேசாமல் சென்று விடும்மா…” என கூற,

அவளோ, “உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா?... சகமனிதன் அடிபட்டு இப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்… பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்குறீர்களே… இதில் என்கிட்ட வேற காப்பாற்றாதேன்னு சொல்லுறீங்க… உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை… பெண்பிள்ளை என்று என்னை சொல்லுகிறீர்களே… இந்த கூட்டத்தில் இத்தனை ஆண்கள் இருந்து என்ன பிரயோஜனம்… ஒரு உயிரைக் காப்பாற்ற ஒருவருக்கும் மனம் இல்லை தானே?...” என்று கேட்க…

அங்கே கூடியிருந்த அனைவரின் தலையும் கவிழ்ந்தது…

“சே…” என்றபடி அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவனருகில் சென்றவள், கையில் வைத்திருந்த தண்ணீரால் அவனின் முகம் துடைத்து, காயம் கழுவி, தன் துப்பட்டாவை எடுத்து அவனது தலையில் இறுகக் கட்டினாள்…

பின்னர், ஒரு போன் செய்து யாரையோ அழைக்க, சட்டென இரண்டு நிமிடங்களில் ஒருவர் காருடன் வந்தார்…

அவரின் உதவியுடன், அந்த வாலிபனை காரில் ஏற்றியவளைப் பார்த்து,

“இவ்வளவு தூரம் அவனுக்கு உதவி செய்யுறியே… இந்த பையன் யாரும்மா?... உனக்கு தெரிந்தவனா?.. சொந்தமா?...” என்று ஒரு பெண் கேட்க…

“தெரிஞ்சிருந்தா தான் உதவி செய்யணும்னு அவசியம் இல்லம்மா… அப்புறம் என்ன கேட்டீங்க?... சொந்தமா என்றா?... ஆம்…. சொந்தம் தான்… ரொம்ப… போதுமா?...” என வெடுக்கென்று பதில் சொல்லிவிட்டு காரில் கிளம்பினாள் அவள்…

மருத்துவமனையில் அவனை சேர்த்துவிட்டு, அவள் காத்திருக்க… கையெழுத்து கேட்க வந்த நர்ஸ் நீங்கள் யார்… உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்று விசாரிக்க…

“எதுக்கு சிஸ்டர் கேட்குறீங்க?...” என அவளும் எதிர் கேள்வி கேட்க…

“பேஷண்ட் நிலைமை ரொம்ப மோசமா இருக்கும்மா... இதுல ஒரு சைன் போட்டா தான் மேற்கொண்டு நாங்க ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்… நீங்க அவருக்கு ரிலேட்டிவா?...” என நர்ஸ் கேட்க…

அதற்கு மேலும் தாமதிக்காமல், “அவர் என் அண்ணன்… குடுங்க நான் சைன் பண்ணுறேன்…” என்றவள் சட்டென்று சைன் பண்ணி நர்ஸிடம் கொடுக்க…

“இந்தாங்க… இதெல்லாம்… உங்க அண்ணனோட திங்க்ஸ்….” என்று அவளின் கையில் அவனின் வாட்ச், நகை, பர்ஸ், மொபைல், என அனைத்தையும் கொடுத்துவிட்டு நர்ஸ் சென்றுவிட,

அவள் அவனின் மொபைலை ஆன் செய்தாள்....

அதில் அவனும், அவன் வயது ஒத்த இரண்டு பேரும், சேர்ந்திருந்த புகைப்படம் இருக்க… அதை எல்லாம் கண்டுகொள்ளாது கான்டாக்ட் லிஸ்டில் அப்பா, அம்மா எண்களை தேடினாள்…

அம்மா என்ற எண்ணை அவள் அழைக்க… ரிங்க் சென்று கொண்டே இருந்தது… எடுக்கவில்லை யாரும்…

மறுமுறையும் அவள் முயற்சி செய்ய… அம்முறையும் அதே பதில் தான்…

“என்ன பண்ணுறது இப்போ??..” என அவள் யோசனையுடன் இருக்க… அம்மா என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தது…

“ஹலோ… துணா… என்னப்பா… இப்பதான வீட்டில இருந்து கிளம்பின, அதுக்குள்ள இரண்டு தடவை கூப்பிட்டிருக்க… என்னப்பா… சொல்லு…” என்ற அவனின் தாயின் குரல் கேட்க…

அவளுக்கு விஷயத்தை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை… சரி பேசி தான் ஆக வேண்டும் என முடிவெடுத்து,

“ஹலோ… ஆன்ட்டி… என் பேரு வள்ளி… உங்க பையன் போன் மிஸ் பண்ணிட்டாரு… எங்கிட்ட தான் இருக்கு… அதைக்கொடுக்கத்தான் போன் பண்ணினேன்…” என்றாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.