(Reading time: 28 - 56 minutes)

துளசி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.. இன்று வெள்ளிக்கிழமை என்று அம்மாவின் ஆசைப்படி, அழகான வேலைப்பாடுகள் செய்திருந்த பெங்கால் காட்டன் சேலையில் கோவில் சிலை போல இருந்தவளை, கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. 'துளசி தான் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. வர வர என் மனது அவளை நினைத்து அலை பாய்கிறது.. காலையில் அவளுடன் வாக்கிங் செல்லும் டயத்தை எதிர் பார்க்க தொடங்கி விட்டேன்.. அவளுடன் எதோ ஒன்று பேச துடிக்கிறேன்.. எனக்கே என்னைப் புரியவில்லை.. துளசி நான் தாலி கட்டிய மனைவி தான் என்றாலும் , அதை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை.. எனக்கும் ஒன்றும் புரியவில்லை.. குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கொடுத்துவிட்டு சென்று விடுவேன் என்றிருக்கிறாள்.. இந்த வாழக்கை தேவையில்லை என்று டைவர்ஸ் கேட்டாலும் கொடுக்க தயாராகத்தானே நாம் இருந்தோம்.. இப்பொழுது ஏன் நம் மனம் அலை பாய்கிறது... பார்ப்போம்.. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்'.. ஒரு பெரு மூச்சு விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

உள்ளே நுழைந்த துளசி, தன் கிளாஸ் ரூமை நோக்கி விரைந்தாள்.. புதியதாக அவளுக்கு அறிமுகம் ஆகியிருந்த தோழி கீதா, துளசியை கண்டவுடன், "என்ன துளசி மேடம் இன்று இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. உன்னவர் எப்படி உன்னை இன்று கிளாசுக்கு அனுப்பி வைத்தார்.. நான் மாத்திரம் அவர் இடத்தில் இருந்தால், உன்னை வெளியே விடவே மாட்டேன்.. என்னால் உன்னிடம் இருந்து கண்ணை திருப்பவே முடியவில்லை" என்று சொன்னவளுக்கு, ஒன்றும் சொல்லாமல், புன்னகைத்துவிட்டு, 'உம். சரண் என்னை பார்த்து இருப்பானா? அவன் கண்ணுக்கு என் ஸ்பெஷல் அலங்காரம் எல்லாம் எங்கே கண்ணில் பட்டிருக்கும்??.. அவனுக்கு அவன் அண்ணன் கரணது குழந்தை ஒன்றே முக்கியம்.. ஜாக்கிரதை.. பார்த்து போ.. ஜுஸைக் குடி.. அட்வைஸ் மட்டும் செய்யத் தெரியும்.. வேறு என்ன தெரியும்..

சே.. பாவம் சரண் நிஜமாக அப்படியா இருக்கிறான்.. என் நிலைமையை கருத்தில் கொண்டு அக்கறையில் சொல்லுவதெல்லாம் தப்பாக நினைக்கிறேனே.. பார்த்து பார்த்து எல்லாம் செய்பவனை இப்படி தப்பாக சொல்லலாமா.. எனக்கு இன்று என்னவாயிற்று?' .. தன்னையே நொந்து கொண்டவள், இன்ஸ்டெரக்டர் உள்ளே வர கிளாசில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

அன்றைய வகுப்புக்கள் முடிந்ததும், தோழி கீதாவுடன் வெளியே பேசிக் கொண்டே வந்தவள் ரிசெப்ஷன் ஹால் அருகே, "ஹலோ, துளசி" என்ற குரலுக்கு திரும்பினாள்.. தன் முன்னே நின்றிருந்த விவேக்கைப் பார்த்து திகைத்தாள்.. இவன் எங்கே இங்கு?? என்று யோசித்தவளை, "ஹலோ, துளசி தானே நீ? என்ன என்னை அடையாளம் தெரியவில்லையா? அதற்குள் மறந்து விட்டாயா? என்றவனுக்கு,

துளசி, "விவேக் தானே நீங்கள்.. ஏன் தெரியாமல்.. என்று நிறுத்தியவள், தன் தோழி கீதாவின் பக்கம் திரும்பி, "இவர் என்னுடன் படித்த ராதாவின் அண்ணன் விவேக்" ,என்று அறிமுகப் படுத்தி விட்டு, "இவள் என் தோழி கீதா" என்று விவேக்குக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

"ஹலோ, நைஸ் டு மீட் யூ" என்று சொல்லிவிட்டு, கீதா, துளசியின் பக்கம் திரும்பி, "துளசி, எனக்கு இன்று கொஞ்சம் அவசரமாக செல்ல வேண்டும்.. சாரி பிறகு ஒர் நாள் நாம் மீட் செய்வோம். இப்பொழுது நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்.. பை துளசி.. பார்க்கலாம்" என்று விடை பெற்றுச் சென்றாள்.

"என்ன துளசி.. எப்படி இருக்கிறாய்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எப்பொழுது சென்னைக்கு வந்தாய்? பாட்டி எப்படி இருக்கிறார்கள்?... உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாள் ராதா.. உன்னைத்தன் தேடிக் கொண்டிருந்தேன்".

"விவேக் நான் இப்பொழுது சென்னையில் தான் வசிக்கிறேன்.. எனக்கு நான்கு மாதம் முன்பு திருமணம் முடிந்தது.. என் பாட்டி இறந்து விட்டார்கள்" என்றாள் மொட்டையாக.

"என்ன திருமணம் முடிந்து விட்டதா?" என்றான் அதிர்ச்சியாக.. அப்பொழுதான் , அவளை சரியாகப் பார்த்தான், கழுத்தில் தாலியும், நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இருந்ததை.. ஏன் துளசி, திருமணத்திற்கு என்ன அவசரம்.. திருமணம் செய்வதானாலும் எங்களுடைய ஞாபகம் வரவில்லையா?.. மேலும், அவளை ஏற இறங்க பார்த்தவன், "துளசி நீ மாறி விட்டாய்.. எப்பவும் ஒல்லியாக இருப்பாய்.. இப்பொழுது சற்று" .... என்று இழுத்தவனை,

துளசி, "நான் இப்பொழுது நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறேன்" என்றாள்.

"ஓ.... எனி வே கங்கராஜீலேஷன்ஸ்.. என்ன துளசி இந்த திடீர் திருமணம்.. யாருக்குமே சொல்லவில்லை போலிருக்கிறது? .. எங்கள் எல்லாரையும் ஒரேடியாக மறந்து விட்டாய் அல்லவா?"

"சாரி விவேக்.. பாட்டி உடல் நலம் காரணமாக திடீரென திருமணம் நடந்து விட்டது.. யாருக்கும் தெரிவிக்க முடியவில்லை.. அதை விடுங்கள்..அது பற்றி பிறகு சொல்கிறேன்.. முதலில் நீங்கள் எங்கே இங்கே?" என்று கேட்டவளுக்கு,

"துளசி, இந்த கம்ப்யூட்டர் இன்ஸ்டிடுயூட் எங்களது தான்.. என் தந்தை இந்த கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தை எல்லா நகரங்களிலும் நடத்தி வருவது மறந்து விட்டாயா? உனக்கு எங்களைப் பற்றி கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை என்று தெரிகிறது.. போகட்டும்.. இன்று நான் இந்த மெயின் பிராஞ்சை பார்க்கலாம் என்று வந்தேன்.. என் அதிர்ஷ்டம் என் கண்ணீல் பட்டாய் நீ"

"சாரி விவேக்... பாட்டியின் உடல் நிலை காரணமாக எனக்கு வேறு எதுவுமே கவனத்தில் இல்லை.. என் திருமணமும் சடனாக நடந்து முடிந்து விட்டது.. என் கணவர் பெயர் ராம் சரண்.. கன்ஸ்டெரக்க்ஷன் கம்பெனி நடத்தி வருகிறார்.. அது தவிர அவர்களுக்கு நிறைய பிசினஸ் இருக்கிறது." என்றாள் பொதுவாக.

"ராம் பில்டர்ஸ் ராம் சரணா உன் கணவர்", "ஆம்" என்றவளுக்கு, "என் தந்தை உனது ராம் சரணின் அப்பாவிற்கு நன்றாக தெரிந்தவர்.. உங்கள் ரிசெப்ஷனுக்குகூட என் தந்தை வந்திருந்தார்.. நான் அப்பொழுது வெளி நாட்டில் இருந்தேன்.. இல்லையென்றால், எனக்கு அப்பொழுதே எனக்கு உன் திருமணம் குறித்து தெரிந்திருக்கும்.. ஆனால்,.... ராம் சரணுது இரட்டை சகோதரர் ராம் கரண் கொஞ்சம் நாட்களுக்கு முன் தான் திடீரென்று இறந்து விட்டதாக கேள்வி பட்டேன்.. ஐ யம் வெரி சாரி துளசி"..

சட்டென்று முகம் மாற துளசி, " பரவாயில்லை விவேக்.. எனக்கு நேரமாகி விட்டது.. எங்கள் கார் டிரைவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார்.. லேட்டானால் அத்தை வேறு கவலைப் படுவார்கள்.. நான் கிளம்புகிறேன்.. பிறகு ஒரு நாள் சந்திக்கலாம்.. ராதவை கேட்டதாக சொல்லுங்கள்.. பை..." என்று விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்த வெளியே வேகமாக வந்தவள், அங்கு ராம் சரண் அவளை நோக்கி வருவதை பார்த்து திகைத்து அவனிடம் செல்ல விரைந்தாள்.

விவேக்கோ, 'என்னவாயிற்று துளசிக்கு.. நன்றாகத்தானே பேசிக் கொண்டு இருந்தாள்.. சட்டென்று சென்று விட்டாள்.. எப்பொழுதும் இவள் புரியாத புதிர் தான்.. வெளி நாட்டிலிருந்து வந்தவுடன், அவளுக்கும் படிப்பு முடிந்திருக்கும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரியலாம் என்று நினைத்து இருந்தது, கனவாக போய் விட்டதே.. அப்பொழுதே என் காதலை அவளுக்கு சொல்லி இருக்க வேண்டுமோ? இனி என்ன யோசித்து என்ன பயன்.. வேறு ஒருவர் மனைவியை பற்றி இனி நினைக்கக் கூடாது! என் காதல் என்னுடன் போகட்டும்.. அவளுக்கு இது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்.. ராதவையும் எச்சரிக்க வேண்டும்.. துளசி ராம் சரணுடன் நன்றாக இருக்க வேண்டும்.. அவனும் நல்லவனே.. இனி துளசி எனக்கு நல்ல தோழி மட்டுமே,' என்று தீர்மானித்து கம்ப்யூட்டர் சென்டருக்குள் சென்றான்.

துளசியை எதிர் கொண்டான் சரண்.. துளசி யாருடனோ பேசிக் கொண்டிருந்ததை தூரத்தில் இருந்து பார்த்து விட்ட சரண், சிறிது நேரம் கார் அருகிலேயே நின்று கொண்டிருந்தான்..' யாருடன் இவ்வளவு நேரமாக பேசுகிறாள்.. பார்த்தால் அவளுக்கு ரொம்ப தெரிந்தவர் போல் இருக்கிறது.. ஒரு வேளை யாராவது கூடப் படிக்கும் மாணவரோ? ஏதாவது கம்ப்யூட்டர் படிப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கலாம்' என்று நினைத்து சிரிது நேரம் வெயிட் செய்து பார்த்தான்.. துளசிக்கு இன்று சர்ப்ரைய்ஸாக இருக்கும்.. ட்ரைவரை எதிர் பார்த்து வருபவள், என்னை கண்டு ஆச்சரியப்படுவாள் என்று எண்ணிக் கொண்டு வையிட் செய்து பார்த்தவன், துளசி வருவதாக இல்லை என்று கண்டு, தானே அவளை அழைக்க சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.