(Reading time: 21 - 42 minutes)

07. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ன்று ஞாயிற்று கிழமை.. வீடு அமைதியாக இருந்தது.. வார நாட்களில் அவசரவசரமாக காலை டிபன், மதிய லஞ்ச் , என பரபரப்போடு பதறியபடி வேலையில் இருக்கும் சாரதா, வாரத்தில் ஒரே விடுமுறை நாளான இந்த நாளை நிதானமாக அனுபவிப்பது வழக்கம். ஆனால் அதற்கும் இந்த வாரம் தடை..

நேற்று இரவே, படுப்பதற்கு முன் அவர்களது இரண்டாவது மகள் கல்யாணி சென்னையை அடுத்த திருவள்ளூரில் இருந்து போன் செய்திருந்தாள். குழந்தைகளின் அரையாண்டு தேர்வு முடிந்து ஒரு வார விடுமுறையை தன் தாய் வீட்டில் கழிக்க எண்ணி இன்று அதி காலையிலேயே கிளம்பி, காலை டிபனுக்கே தன் கணவனுடன் வந்துவிடுவதாக சொல்லியிருந்தாள்.

வழக்கம் போல காலை ஐந்து மணிக்கே எழுந்த சாரதா, குளித்து முடித்து வாயில் பெருமாள் சுலோகத்தை முணுமுணுத்தபடி புது டிகாஷன் இறக்கி, பாலை காய்ச்சி விட்டு திரும்ப, அங்கே காலை செய்தித்தாளுடன் ராமமூர்த்தி ஆஜரானார்.

vasantha bairavi

"சாரதா.. காப்பி ரெடியா?"

"இதோ.. இந்தாங்கோ" .. என்றபடி பில்டர் காப்பியை நுரை பொங்க ஆற்றி கொடுத்தவர்,

"ஏன்னா.. கல்யாணி, மாப்பிள்ளை, குழந்தைகளோட வரப் போறதா நேத்து போன் பண்ணாளே" என்று இழுக்க,

காப்பியை குடித்தபடி, "ஆமாம் அதுக்கு என்ன இப்போ?.. போய் ஸ்டேஷன்லே நின்னுண்டு ஆரத்தி எடுக்கனுமோ?.. எப்பவும் வரவாதானே?"

"இப்படி குதர்த்தமா பேசினா எப்படின்னா.. நீங்க நேத்தைக்கும் மூத்த மாப்பிள்ளைகிட்ட கூட பிடி கொடுத்து பேசலை?" என்றபடி தன் காப்பியை குடித்தார் சாரதா.

"என்ன பேச சொல்லறே?.. கல்யாணம் பண்ணி கொடுத்து பத்து வருஷம் ஆச்சு.. ரெண்டு குட்டிகளையும் பெத்துண்டாச்சு..இன்னும் எத்தனை நாளுக்குத்தான் புது மாப்பிள்ளை மாதிரி சீர் சினத்தி செய்யறதாம்.. மாசம் தவறாம இவருக்கு ஈட்டிக்காரனுக்கு வட்டி கட்டறா மாதிரி பணம் அழ வேண்டியதா போச்சு.. என்னை என்ன தான் பண்ண சொல்லறே?"

அந்த சமயத்தில் அடுக்களைக்குள் நுழைந்தாள் மூத்தவள் ரஞ்சனி.

"அம்மா, எனக்கும் ஒரு டம்ளர் காப்பி கொடு"..

பதில் பேசாமால் காப்பியை கலந்த சாரதா தன் மகளின் கையில் திணிக்க, காப்பி டம்ளைரை மேடையில் வைத்து விட்டு, திரும்பிய தன் தந்தை ராமமூர்த்தியிடம்,

"அப்பா, நேத்தைக்கு உங்க மாப்பிள்ளை பணம் வேண்டும் என்றாரே?.. என ரஞ்சனி ஆரம்பிக்க..

"ஏம்மா ரஞ்சனி.. அது என்ன உங்க மாப்பிள்ளை.. என் ஆம்படையான்னு சொல்ல மாட்டியோ? .. அது சரி இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த மாப்பிள்ளை முறுக்காம்??.. நானும் தெரியாமதான் கேக்கறேன்..உங்க அப்பா என்ன பணம் காய்ச்சி மரமா?? .. ஏதோ கொடுத்து வைத்தது போல கேக்கிறார்?"

தன் தந்தையிடம் இருந்து இப்படிப்பட்ட பேச்சை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சனி, தன் தாயிடம் திரும்பி,

"அம்மா என்ன இது அப்பா இப்படி பேசறார்? .. அவர் காதுல விழுந்தா எனக்கு தான் வசவு விழும்?.. நீ என்ன குத்துக்கல் மாதிரி வாயை மூடிண்டு பேசாமல் இருக்கே".. தன் தாயை முறைத்தாள் ரஞ்சனி.

"நான் உன் கிட்டதானே பேசிண்டு இருக்கேன்.. உங்க அம்மாவை எதுக்கு தேவையில்லாமல் இழுக்கறே?.. இங்க பாரும்மா, உனக்கு நான் நல்லதனமாவே சொல்லறேன்.. நீ மாசத்துக்கு ரெண்டு வாட்டி சொல்லி வச்சா மாதிரி வந்துடறே?.. சரி நீ எங்க மூத்த பொண்ணு.. ஏதோ அம்மா ஆத்துக்கு சீராட வரேன்னு நினைச்சி நாங்களும் ஏதோ எங்களால முடிஞ்சதை உனக்கும், எங்க பேர பசங்களுக்கும் செய்யறோம்" என்று சொல்ல ஆரம்பித்த ராமமூர்த்தியை,

You might also like - Poo magalin thedal... A breezy family oriented romantic story...

"என்னப்பா சொல்லி காமிக்கிறேளா?.. ஏதோ எனக்கு வேறு போக்கிடம் இல்லை.. பொறந்தாத்துக்குதானே வர முடியும்?.. நீங்களே இப்படி சொன்னா நான் வேற எங்கே போறது?".. அவர் என்னடான்னா, உங்களை எல்லாம் வேத்து மனுஷாளா பாக்கறதே இல்லை.. நம்மாத்தை தன் சொந்த குடும்பமாதான் பாக்கறார்?" என்று வராத கண்ணீரை துடைப்பது போல கண்களை கசக்க,

பதறி போனாள் சாரதா.. என்ன தான் இருந்தாலும், தான் பெத்த மூத்த பொண்ணாச்சே.. கண்ணை கசக்கினால் பெற்ற வயிறு தாங்குமா?

"ஏன்னா சித்த வாயை வைச்சுண்டு சும்மா இருக்க மாட்டேளா?"

"சாரதா.. கொஞ்சம் பேசாமல் இருக்கியா?.. எல்லாம் உன்னாலே வந்தது தான்.. முதல்லேர்ந்தே நம்ம ஆத்து நிலைமையை நீ எடுத்து உன் பசங்களுக்கு சொல்லியிருந்தேன்னா இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது" என்று சாரதாவை அடக்கியவர், தன் மகளிடம் திரும்பி,

"ஆத்து மனுஷாளா நினைச்சிருந்தா, நம்ம கஷ்டம் இத்தனை நாளாக்கு புரிஞ்சிருக்கும்"..

"இங்கே பாரு ரஞ்சு.. நீ இந்தாத்துலே பொறந்து வளர்ந்தவ தான்.. உனக்கு அப்புறம் மூணு பேர் இருக்கா.. உன்னை நல்லா தான் கான்வென்டில படிக்க வைச்சோம். ஏதோ நீ சுமாராக படிச்சு, டிகிரி முடிச்சாலும், யார் யார் கையையோ பிடிச்சு, உனக்கு ஒரு உத்யோகத்தையும் ஏற்பாடு பண்ணி தான் கொடுத்தேன்.. அதுக்கே அந்த சமயத்தில் லட்சம் ரூபாய் ஏற்பாடு பண்ண வேண்டியதா போச்சு.. உன்னோட துர் அதிர்ஷ்டம் அந்த கம்பனியே, நீ காலடி எடுத்து வச்ச உடனே காலாவதியா போச்சு.. நீயும் அந்த சமயத்துல உத்யோகத்துல இருந்த மேனேஜர் சிவகுமாரை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணின்டா அவனைத்தான் பண்ணிப்பேன்னு ஒத்த கால்லே நின்னு கல்யாணம் பண்ணின்டே.. நான் அப்பவே தலைபாடா அடிச்சிண்டேன்.. கேட்டியா.. அவன் குடும்பமே கொஞ்சம் பந்தா பேர்வழிங்க.. வேண்டாம்ன்னு சொன்னேன்.. என் பேச்சை கேக்கலை.. சரி, தொலையட்டும், அவாளும் நம்மளவாளா போய்யிட்டா அப்படின்னு, அவா கேட்ட சீர் வரிசையைவிட அதிகமாவே செஞ்சோம்"..

"உன் மாமியார் என்னான்ன, என்னவோ அவா பிள்ளை ராஜகுமாரன், செவந்த தோலு, நீ கொஞ்சம் நிறம் மட்டு, ஊரெல்லாம் அந்த ராஜகுமாரனுக்கு பொண்ணு காத்திண்டு இருக்கா, அப்படி இப்படின்னு சொல்லி, 'எக்கச்சக்கமா வரதட்சணை நாங்க வாங்க மாட்டோம், காஞ்சி பெரியவா சொல்லியிருக்கான்னு' சொல்லிட்டு, நீங்க உங்க பொண்ணுக்கு தானே சீர் வரிசை பண்ணறேள், அவா தானே ஆண்டு அனுபவிக்க போறான்னு , சபை நிறைக்க வேண்டாமா.. இப்படி பேசியே எங்களிடம் மொத்தமா கறந்தா.. அந்த சமயத்துல எப்படியோ கடனை வாங்கி நாங்க சமாளிச்சி, உனக்கு இரண்டு கிலோ வெள்ளி பாத்திரம், இருபத்தி ஐந்து பவுன் நகை எல்லாம் தான் நிறைவா செய்ஞ்சோம்.. கல்யாணம் ஆன முதல் வருஷம் முழுக்க விடாமா சீர் செஞ்சாச்சு.. உனக்கு ரெண்டு பிரசவமும் பார்த்து சீராடி, சீர் செனத்தியோட என் பேர பிள்ளைகளை அனுப்பி வைச்சாச்சு"..

"உன்னோட தலையெழுத்து நீ வேலை பார்த்த கம்பெனி இழுத்து மூடிண்டு , பம்பாய் பக்கம் போய் சேர்ந்தான்.. உங்க எல்லோருக்கும் காம்பன்சேஷன் வேற தந்தான்.. அத்தோட விட்டானா, மேனேஜரான உங்க ஆத்துக்காரருக்கு, சீனியர் மேனேஜர் போஸ்ட் தரேன்,பம்பாய்க்கு வந்துவிடுன்னும்தான் சொன்னான்.. என்ன ஆச்சு, உங்க ஆத்துக்காரரோ, எவன் மெட்ராசை விட்டு இந்திக்காரன் ஊருக்கு போய் குப்பை கொட்டுவான்.. நீ துட்டை கொடுடா, நானே இனி புது பிசினஸ் பண்ணறேன்னு எதெதையோ ஆரம்பிச்சு இத்தோட மூணு வாட்டி நஷ்ட பட்டாச்சு.. நீங்க செஞ்ச ஒரே புத்திசாலிசான வேலை, கல்யாணம் ஆன கையோட உங்களுக்குன்னு அம்பத்தூர் பக்கத்துல ஒரு சொந்த மூன்று பெட் ரூம் பிளாட்டை வாங்கினது தான்.. நீ வீடு கட்டறேன்னு, அந்த சமயத்திலே கூட நான் இரண்டு லட்சம் கொடுத்து உதவி பண்ணினேன்.. நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதே, ரஞ்சி, நீ தான் அவருக்கு எடுத்து சொல்லனும்..இத்தோட ஒரு இருபது லட்சம் வரை பிசினஸ்ன்னு சொல்லி நஷ்டப் பட்டிருப்பார்.. எதுக்கு இந்த வீண் ஜம்பம்.. நம்மள மாதிரி இருக்கறவா, இருக்கறதை வைச்சு திருப்தி அடையனும்.. உத்யோகம் புருஷ லட்சணம்.. நானும் எனக்கு தெரிஞ்சவா கிட்ட எல்லாம் அவருக்கு எதோ வேலை ஏற்பாடுதான் பண்ணறேன்.. ஆனா உங்க ஆத்துக்காரர், யாரையும் கண்டுக்கரது இல்லை.. கோடியாத்து கணேசன் கூட அவர் கம்பெனியிலே ஏதோ சொன்னார்.. " என்று நிறுத்தினார் ராமமூர்த்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.